டாக்டருக்குப் படித்தவர்கள் உடல் கூறில் எந்தக் குறைபாடு வந்தாலும் அந்த நோயைக்
கண்டுபிடிப்பார்கள். ஸ்கேன் வைத்து அதிர்வுகள் மூலம் பார்ப்பார்கள். அதன் மூலம் உடலிலுள்ள
உறுப்புகளையும் பார்க்கின்றார்கள். நாமும் தெரிந்து கொள்கிறோம்.
அதே சமயத்தில் உங்களிடம் நான் (ஞானகுரு) உபதேசம் சொல்லும் போது வைத்திய
ரீதியாகத்தான் பேச வேண்டும். அந்த உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டு உங்களை நீங்கள்
அறிய விரும்பினால் உடலின் ஓட்டத்தினை நீங்களும் பார்க்கலாம்.
ஆனால் இது நமக்குத் தேவையற்றது.
என்ன பார்க்கலாம்…? என்றால்
1.என்னவெல்லாம் தெரிகின்றது என்ற நிலையில்
2.சில பேர் எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
3.அப்படிப் பார்க்கும் போது பார்த்த நிலைகள் கொண்டு அங்கிருக்கும் தீமையைத்தான்
வளர்த்துக் கொள்ள முடியும்.
சில பேர் என்ன செய்கின்றார்கள்…?
மந்திரத்தால் பில்லி சூனியங்கள் ஏவப்படுகிறது அதனால் சில விலை உயர்ந்த பொருட்கள்
கூட காணாமல் போகின்றது. குடும்பத்திலும் முடக்கங்கள் ஏற்படுகின்றது.
சாமிக்கு (ஞானகுரு) சக்தி இருக்கின்றதல்லவா…! சாமி எங்களுக்கு இதை எல்லாம்
சரி செய்து கொடுக்கலாம் அல்லவா…! என்று கேட்கின்றார்கள்.
குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எல்லாச் சக்திகளையும் எமக்குக் கொடுத்தார் என்று
சொன்னோம் என்றால் அதை வைத்து “மந்திர தந்திரம் செய்பவர்களை நான் அடக்க வேண்டும்”
என்ற எண்ணத்தில் இவ்வாறு கேட்கிறார்கள்.
நான் செய்வேன் என்று சொன்னால் நானா…?
1.குருநாதர் உபதேசித்த உணர்வுகளை நான் எடுத்தேன்
2.அந்த உணர்வின் வழிப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக் கூடிய நிலை
வந்தது.
குருநாதர் ஞான வித்தை எனக்குள் விதைத்தார்… வளர்த்துக் கொண்டேன்.
1.அதே வழிப்படி உங்களுக்குள்ளும் ஞான வித்தாகப் பதிவு செய்கின்றேன்.
2.அதற்குண்டான சக்திகள் அனைத்தும் இந்தக் காற்றில் இருக்கின்றது.
3.அதை நீங்கள் எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால்
4.உங்களுக்குள் தீமையைப் போக்க கூடிய சக்தியாக அது வரும் என்று தான்
சொல்கிறோம்.
நான் செய்தேன் என்றால் இதை நான் செய்யவில்லை…! குருநாதர் காட்டிய வழியில்
அருளைப் பெருக்கும் போது அது அந்த வழியை உங்களுக்குள் காட்டும். அதன் வழியில்
நீங்கள் செல்லலாம்.
ஏனென்றால் ஆரம்பத்தில் சில பேருக்கு இதைச் செய்யும்போது எனக்கு அந்தக்
கடவுள் தெரிகின்றது உடலில் இருப்பது எல்லாம் தெரிகின்றது என்று சொல்ல ஆரம்பித்து
விட்டார்கள்.
காட்சி என்று தெரிந்தாலே எனக்கு எல்லாம் தெரிகின்றது என்று அடுத்தவருக்குக்
குறி சொல்வது போல் சொன்னார்கள்.
கடைசியில் வீணாக அடுத்தவர்கள் கஷ்டங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வம்பிலே
போய் மாட்டிக் கொள்கிறார்கள். கஷ்டத்தைத் தான் வாங்கிக் கொள்கின்றார்கள்.
தெரிந்ததைச் சொல்லப்படும்போது இதில் வருவதைக் கழிக்கத் தெரிய வேண்டுமல்லவா…?
அது முக்கியம்…!
ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து
வலுவாக்கிக் கொண்ட பின் அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண
வேண்டும்.
ஆனால் அப்படி எடுக்கவில்லை என்றால் அந்த விஷம் இங்கே வந்து விடுகின்றது. அங்கிருக்கும்
தீமைகளைத் தான் மீண்டும் தனக்குள் வளர்க்க முடியுமே தவிர நல்லதை வளர்க்க முடியாது.
அருள் சக்திகளைப் பெறும் பொழுது அந்த உணர்வை நாம் நுகர்கின்றோம்…. தெரியச்
செய்கிறது. தெரிந்து கொண்டாலும் அந்த தீமைகள் வருவதை அறிகின்றோம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில்
கலக்க வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று இதைத் தனக்குள்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறர் உணர்வு நுகர்ந்ததை உடனடியாக நீக்க வேண்டும். அந்தத் தீமையின்
உணர்வுகள் நமக்குள் புகாது விழிப்புடன் இருக்க வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளால் அவர்கள் பொருளறிந்து செயல்படும்
சக்தி பெற வேண்டும்
2.அவ்ர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளிலிருந்து விடுபட வேண்டும்
3.அவர்களின் வாழ்க்கை எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்.
4.அவர்கள் தொழில்கள் நன்றாக இருக்க வேண்டும்
5.அவர்கள் குடும்பம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று
6.நம் உணர்வை இந்த மாதிரி அவர்களுக்குப் பாய்ச்சிப் பழக வேண்டும்.
தீமை என்று தெரிந்தாலும் தெரிந்து கொண்டேன் என்பதை விட அதை நீக்கும் அருள் சக்திகளை எடுத்து வலுவாக்க வேண்டும். அதைத் தான் அடுத்தவருக்கும் போதிக்க வேண்டும்.