ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 23, 2020

நல்ல குணங்களைக் காப்பதற்காக வேண்டி சக்தி வாய்ந்த ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கின்றோம் - ஞானகுரு

 

குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்கு நான் (ஞானகுரு) தொடர்ந்து உபதேசம் சொல்கின்றேன். ஆனாலும் எத்தனையோ பேர் வந்து கஷ்டங்களை எல்லாம் சொல்கின்றீர்கள்… நான் கேட்கின்றேன்.
 
ஒருத்தர் கஷ்டம் என்று சொல்வதை நீங்கள் கேட்டாலே உங்களுக்கு முடியாது போய் நோய் வருகின்றது. ஆயிரம் பேர் கஷ்டம் என்று சொல்வதை நான் கேட்டால் எனக்கு எத்தனை நோய் வரும்…? என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்…!
 
உங்களைக் காட்டிலும் பல வேதனைகள் எனக்கு வரும். எனக்கு அதைத் துடைக்கத் தெரியவில்லை என்றால் அப்புறம் நான் குருவாக உங்களிடம் வந்து சொல்ல முடியாது.
 
தீமைகளைத் துடைக்கத் தெரிய வேண்டும். இல்லையென்று சொன்னால் அந்த நோயெல்லாம் என்னைச் சேரும். கடைசியில் என்னையே மாற்றிவிடும்.
 
பாலிலே பாதாமைப் போட்டிருந்தாலும் சிறிது விஷத்தைப் போட்டால் என்ன ஆகும்…? அந்த நிலைதான் அடையும். ஆகையினால் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் மாற்றிக் கொள்கிறேன்… தூய்மைப்படுத்திக் கொள்கிறேன்.
 
உதாரணமாக ஒரு விஷமான பொருளைக் கையால் எடுத்துப் பயன்படுத்துகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வேலை முடிந்ததும் அந்த விஷத்தை நீக்கிட அதைக் காட்டிலும் சக்தி வாய்ந்ததை வைத்துக் கையைக் கழுவிக் கொள்கிறோம் அல்லவா…!
 
வயல்களிலே பூச்சிகளைக் கொல்லும் மருந்தினைத் தெளிக்கின்றார்கள். எல்லாம் தெளித்துவிட்டுச் சாதாரண தண்ணீரில் கையைக் கழுவி விட்டு உணவை உட்கொண்டார்கள் என்றால் அந்த மருந்தின் விஷம் உடலுக்குள் ஊடுருவிப் போய்விடும்.
 
அப்புறம் அவர்கள் இருக்க மாட்டார்கள்…!
 
பூச்சியைக் கொன்றார். இருந்தாலும் அதற்குத்தகுந்த சோப்பை எடுத்துச் சுத்தமான நிலைகளில் கைகளைக் கழுவவில்லை என்றால் இவரைக் கொன்றுவிடும்.
 
இதைப் போலத்தான் நாம் உயர்ந்த குணங்கள் கொண்டிருந்தாலும் வேதனைப்படுவோரை எல்லாம் சந்தர்ப்பத்தால் உற்றுப் பார்க்கின்றோம்… விபரங்களையும் நாம் கேட்டறிகின்றோம்.
 
உயர்ந்த மனிதர் என்ற பண்பால் பல உதவிகளை நாம் செய்தாலும் அவர்கள் கஷ்டம் நமக்குள் வந்த பின் நம் நல்ல குணங்கள் இங்கே அழிந்து விடுகின்றது. இதைச் சுத்தமாக்க வேண்டுமா இல்லையா…?
 
1.தப்பு செய்தவர் யாரும் இல்லை
2.ஆனாலும் நாம் தவறு செய்யாமலேயே இத்தகைய நிலைகள் வருகின்றது
3.இயற்கையின் உணர்வை… இயற்கையின் இயக்கங்கள் எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலையை
4.நம்மை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.
 
ஏனென்றால் மனிதனின் வாழ்க்கையில் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் நம் எல்லை எது…? என்று அறிதல் வேண்டும்.
 
நம் உயிர் ஒளியானது… நுகர்ந்த உணர்வைக் கொண்டு உடலை உருவாக்கியது. உடலைக் கொண்டு இருளை நீக்கும் ஒளியின் தன்மை பெற்றது… கார்த்திகேயா…!
 
நம்மை அறியாமல் வரும் தீமைகளை அந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அகற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்வதே அது.
 
இந்தத் தெய்வம் செய்யும்… அந்தத் தெய்வம் செய்யும்…! என்பது எல்லாம்
1.நாம் எண்ணிய உயர்ந்த குணங்களே
2.நமக்குள் தெய்வமாக… அந்த உணர்வாக நம்மைச் செயலாக்கும்.
 
இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் தன்மையைத் தான் உயிர் இயக்குகின்றது. ஈசனாக இருந்து அதனின் உணர்வுகளை… நாம் எண்ணியதை நமக்குள் இருக்கும் மற்றதுடன் இரண்டறக் கலக்கின்றது. அது பிரம்மமாக நமக்குள் உடலாகச் சிருஷ்டிக்கின்றது.
 
இந்த உயிருடன் இயக்கப்படும் அதன் தொடர் வரிசையில் எக்குணமோ அதை இயக்கி அதனின் நிலைகள் கொண்டு இங்கே வளர்க்கின்றது நமது உயிர்.
 
நாம் தவறே செய்யவில்லை என்றாலும்… தவறு செய்வோனை உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் சக்தி நமக்குள் இயக்கப்பட்டு… தவறை அறியச் செய்கின்றது. ஆனாலும் அறிந்த தவறின் உணர்வோ நம் உடலுடன் ஒன்றி விடுகின்றது.
 
ஒன்றிய நிலைகள் கொண்டு உயிரின் இயக்கத்தால் நம் அறிவால் அறியச் செய்யும் அதனதன் அறிவை அது இயக்குகின்றது.
 
வேப்ப மரம் தன்னுடைய கசப்பின் அறிவால் தான் தனது மணத்தைக் காற்றிலிருந்து நுகர்ந்து அது வளர்கின்றது. அதே சமயம் தன் மணத்தால் அது தன்னைப் பாதுகாத்து கொள்கின்றது.
 
ரோஜாப்பூவும் தன் நறுமணத்தால் தன்னைப் பாதுகாத்து கொள்கின்றது. தன் உணர்வால் தன் சத்தை எடுத்து கொள்கின்றது.
 
இதைப் போல்தான் நாம் எத்தனை கோடி மணங்களை நாம் நுகர்ந்தாலும் எத்தனை கோடி குணங்கள் இருந்தாலும் அதை எல்லாம் அறியச் செய்யும் நமது உயிர். அறிந்ததை மீண்டும் ஜீவ அணுவாக… உடலாக மாற்றிவிடும் நமது உயிர்.
 
உணர்வின் தன்மை உடலாக்கப்படும்போது ஓ…! என்று ஜீவனாக்குகின்றது உயிர். அதே சமயம் அந்த உடலாக இயக்கப்படும்போது அதுவும் ஓ…! என்று ஜீவனாக இயங்கிக் கொண்டிருக்கும்… அதன் தொடர் வரிசையில்…!
 
தவறு என்று கண்டு கொண்டாலும் அதை நாம் சுத்தப்படுத்தவில்லை என்றால் அதுவும் நம் உடலுக்குள் ஜீவன் பெற்று விடும். இதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் நலம்.
 
ஏனென்றால் நான் படிக்காத மூடன் பேசுகின்றேன்…! ஆனால் இயற்கையின் உணர்வின் அளவை குரு காட்டிய உணர்வு கொண்டு அதை அறியும் ஆற்றலைப் பெற்றேன்.
 
1.நான் படித்துப் பேசவில்லை… அனுபவப்பட்டுப் பேசுகின்றேன்.
2.குருநாதர் எமக்குள் இருக்கும் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு என்று உணர்த்தினார்
3.ஒவ்வொரு உணர்வும் எம்மை அது எவ்வாறு இயக்குகின்றது..? என்று அறிந்து பார்…! என்று
4.தனித்துத் தனித்துத் தனித்துத் தனித்துப் பிரித்துக் காட்டினார்.
 
ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் நுகரும் ஆற்றல் உனக்குள் எவ்வாறு வருகின்றது…? நுகர்ந்தபின் அந்த உணர்வின் குணங்கள் உனக்குள் எவ்வாறு ஜீவன் பெறுகின்றது….? அந்த உணர்வால் உன்னை எப்படி இயக்குகின்றது…? என்ற இந்தத் தெளிந்த மனதை குருநாதர் அனுபவப்பூர்வமாக எமக்கு ஊட்டினார்.
 
உடலில் இருக்கப்படும்போதே… அவருக்குள் கற்றுணர்ந்த உயர்ந்த உணர்வை… அவரின் உணர்வின் வலு கொண்டு எனக்குள் பதியச் செய்தார்.
1.பதிவு செய்ததை மீண்டும் மீண்டும் நினைவு கொண்டு எடுக்கும்படி சொன்னார்
2.அதனின் துணை கொண்டு அதை எடுத்து வளர்ச்சியின் தன்மை பெற்றேன்.

அதே வழிப்படித்தான் உங்களுக்கும் இதை உணர்த்த்துகின்றேன்…!