ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 16, 2020

அகஸ்தியன் இளமைப் பருவத்தில் பெற்ற பேராற்றல்மிக்க சக்திகள்

இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள் ஒன்றுக்கொன்று எதிர்மறையாகி மின்னல்களாகப் பாய்கிறது.

தாய் கருவிலே விஷத்தை வென்றிடும் ஆற்றல் பெற்ற அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்த பின் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது அத்தகைய மின்னலை எல்லாம் உற்றுப் பார்க்கின்றான்.
1.பார்க்கும் பொழுது அதிலுள்ள விஷக் கதிரியக்கங்களை அடக்கி
2.அதை எல்லாம் ஒளிக்கதிர்களாக மாற்றும் தன்மையாக
3.தன் உடலில் ஒளியான அணுக்களாக மாற்றும் தன்மை அவனுக்குள் உருவாக்குகின்றது.
 
இதைப்போல சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வின் தன்மையும் அந்தக் குழந்தை உற்றுப் பார்க்கின்றது.
 
இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானதோ…? இதற்குள் நட்சத்திரங்கள் எப்படி உருவானதோ…? அகண்ட அண்டங்கள் எப்படி உண்டானதோ..? இந்த உணர்வெல்லாம் சூரியனுக்குள் உண்டு.
 
இதன் வரிசைப்படுத்தி வந்த உண்மைகளை எல்லாம் அந்த  நட்சத்திரங்களின் சக்திகளை இவன் நுகரப்படும்போது அந்த உணர்வின் எண்ணங்கள் (ஞானமாக) வருகின்றது.
 
ஒரு குளவி மண்ணைப் பிசைந்து கூட்டைக் கட்டி அதற்குள் புழுவை எடுத்து வந்து வைக்கின்றது. புழுவைத் தன் விஷத்தால் கொட்டுகின்றது. எத்தனையோ உணர்வுகள் கலந்து தான் அந்த விஷத்தின் தன்மை குளவிக்குள் வருகின்றது.
 
குளவி புழுவைத் தன் விஷத்தால் கொட்டிய பின் அந்த விஷம் புழுவின் உடலுக்குள் சென்று அந்த விஷத்தின் தன்மைகள் கொண்டு துடிப்புகள் அதிகமாகிறது.
 
அதுவே புழு உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இந்திரீகமாக மாறி அது இந்திரலோகமாக மாறி அந்தப் புழுவின் தன்மை குளவியாக மாறுகின்றது.
 
இதைப் போன்று தான் அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் இவன் அறியவில்லை என்றாலும் விஷத்தை வென்றிடும் உணர்வுகள் வரப்படும் பொழுது நட்சத்திரங்களிலிருந்து வரும் மின்னல்களையும் மற்றவைகளையும் இவன் அடக்குகின்றான்.
 
உதாரணமாக பல நட்சத்திரங்களின் சக்திகள் வந்தாலும் ஒரு நட்சத்திரத்தின் சக்தியைச் சூரியன் கவரும்பொழுது அடுத்த நட்சத்திரத்தின் சக்தி அங்கே வந்தால் இந்த இரண்டும் மோதும் போது எர்த் (EARTH) ஆகின்றது.
 
அப்பொழுது பளீர்… என்று மின்னுவதும் அந்த உணர்வுகள் மற்றதோடு ஊடுருவதும் அதன் அலைவரிசையில் ஊடுருவும்போது மரங்களில் விழுந்தால் அதைக் கருக்கி விடுகின்றது.
 
இந்த மின்னல்கள் அடுத்து பூமியின் ஈர்ப்புக்குள் அதிகமாகச் சேர்த்தால் இது கொதிகலனாக மாறுகின்றது.
 
அணுவைப் பிளந்து அதன் வீரியத்தன்மை கொண்டு அணு உலைகளில் (ATOMIC POWER STATION) வைக்கும்போது அது எவ்வளவு வேகமாக வெப்பத்தை உண்டாக்குகின்றதோ இதைப்போலத்தான் இந்த மின்னல்கள் ஊடுருவி அந்த பூமியின் அடியில் சென்றபின் கொதிகலனாக மாற்றுகின்றது.
 
வெப்பத்தின் துரிதத்தால் பாறைகள் உருகுகின்றன. உருகிய பின்  அந்தப் பாறைகள் கீழே இறங்கப்படும் போது நிலநடுக்கம் வருகிறது. அந்த ஒரு நொடிக்குள் எல்லாம் கூழான பின் இதில் அடங்கி விடுகின்றது.
 
அதே மின்னல்கள் கடல்களிலும் பாய்கிறது. கடல்களில் உள்ள ஹைட்ரஜன் அது உப்புச்சத்து கொண்டது. அதிலே மின்னல்கள் பரவினால் இது பூராமே அடக்கி மணலாக மாற்றுகின்றது. கதிரியக்கத் தனிமங்களாக உருவாகிறது.
 
1.இதைப் போலத்தான் அகஸ்தியனுடைய பார்வையில் மின்னல்கள் பட்டாலும்
2.விஷத்தை ஒடுக்கும் சக்தி இவனுக்குள் இருக்கும்போது
3.அந்த உணர்வின் தன்மை கடல் எப்படி தனக்குள் அடக்கியதோ
4.இதே உணர்வின் அணுவாக இவனுக்குள் இவனுக்குகந்த அணுவாக மாற்றும் திறன் பெறுகின்றான்.
5.அவன் இளமை பருவத்தில் அவனுக்குத் தெரிந்தல்ல.
 
அவனுடைய சந்தர்ப்பங்கள் அவன் அத்தகைய நிலைகளில் வளர்ச்சி பெறுகின்றான். அப்படி வளர்ச்சி பெற்றவன் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றோம் என்றால் நாமும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.