ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 8, 2020

ஒன்றே குலம்… ஒருவனே தேவன் – ஈஸ்வரபட்டர்

உபதேசம் புகட்டிய நாள் தொட்டே யான் (ஈஸ்வரபட்டர்) உணர்த்திய உயிர் ஜீவன் சுவாசத்தின் வழி பெற்ற எண்ண ஜெபத்தைத்தான் மையப்படுத்தி உணர்த்தி வருகின்றேன்.
 
இவ்வெண்ணம் செயல்பட அன்பு சத்தியம் இவற்றின் நியதி பெறல் வேண்டும். சத்திய நிலை பெறப் பல ஆண்டுகளாய் வாழ்ந்து வந்த வழியிலிருந்து இச்சத்தியத்தை நிலைநிறுத்தச் சில கடின நிலைகளை ஏற்க வரும் இத்தருணத்தில் அன்பென்னும் ஆயுதத்தினால் தான் செயல்படும்.
 
1.இவ் அன்பினாலேதான் எச்செயலையும் நிலைநாட்ட முடியும்.
2.அன்பிற்கு அடிமைப்பட்டதுதான் அனைத்துமே.
3.நம்மை அன்பாக்கி அவ் அன்பையே எல்லா நிலையிலும் செயல்படுத்திடல் வேண்டும்.
 
ஆனால்… நம் அன்பிற்குப் பிரதிபலனை எதிர்பார்த்துச் செயல்கொள்ளும் நிலைதனை அகற்றல் வேண்டும்.
 
ஏனென்றால்…
1.நாம் அன்பு செலுத்துகின்றோமே என்ற நிலையில்
2.அவ்வன்பின் பிரதிபலிப்பிற்காக ஏங்கிடும் எண்ணத்திற்கு
3.நாம் செலுத்திய அன்பும் விரயம் கொள்கின்றது.
4.பிறரின் அன்பிற்காக ஏங்காதீர்….!
 
நம்மையே அன்பாக்கி அவ்வன்பின் சக்தியை அனைத்திலும் செயல்படுத்திடுங்கள். இவ்வன்பு வழியைப் பெற்று விட்டால் சத்திய நிலை ஏற்பட்டுவிடும்.
 
பிற அன்பிற்கு அடிமை கொண்டும் விடாதீர்…!
 
“ஒன்றே குலம்… ஒருவனே தேவன்…” என்ற சத்திய நியதியைத்தான் இவ்வுலகமே செப்புகின்றது. ஆனால் அதனைக் கடைப்பிடிக்கும் ஆத்மாக்கள் இப்பரந்த உலகில் கோடியில் சிலர் தான்.
 
மதங்கள் என்ற ரூபப்படுத்தி ஒரே குலத்தைத்தான் அனைவரும் போதிக்கின்றனர். ஆனால் இவர்களே எம்மதம் சிறந்தது…? என்ற வினாவையும் எழுப்புகின்றனர்.
 
எம்மதமாயினும்… எச்செயலாயினும்… “அவர்கள் வகுத்த சத்திய நியதியைச் செயல் கொள்ளும் சிறந்த நிலையுடையதுதான்… சிறந்த மதம்…”
 
இந்து மதமும் இஸ்லாமிய மதமும் கிறிஸ்துவ மதமும் தான் இவ்வுலகினில் தனித்தனி நிலையாய்ச் செயல்கொள்கின்றன. இதன் தழுவலில் பல மதங்கள் ஜாதிகள் என்ற ரூபங்கள் வழி பெற்றுவிட்டன.
 
ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நெறி முறைகளுண்டு. அதற்குகந்த தத்துவத்தையும் உணர்த்துகின்றனர் “அவரவர்கள் மதம் சிறந்ததென்று…”
 
எம் மதத்தவரும் தம் மதத்தின் நிலையைத்தான் பெரிதாகப் போற்றி வருகின்றனர். ஒவ்வொரு மதத்திற்கும் அம் மதம் பிறந்த கால கட்டத்தை உணர்த்துகின்றனர்.
 
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற நிலையினைப் பிரித்துத் தனக்குச் சாதகமான வழி முறைகளை வகுத்துக் கொண்டவன் அவனுக்குகந்த தன்மையில் தன் மதத்தை வளர விடுகின்றான்.
 
இந்து மதத்தில் ஒரே நிலையையே பலவாக்கி வணங்குகின்றனர். இஸ்லாமிய மதத்தில் அவ் அல்லா என்ற ஒன்றே ஆண்டவன் என்ற சத்திய நிலைப்படி அவ்வழி நிலை செயல் கொள்கின்றது. அவர்கள் வழியில் வந்த குர்ஆனின் வேத வாக்குப்படி இன்றளவும் மாறுகொண்ட ஆண்டவனின் ரூபத்தைக் காணாமல் அல்லா என்ற ஒரே கடவுளைக் காண்கின்றனர்.
 
கிருஸ்து மதத்தில் பரமபிதா என்ற ஜெபத்தை ஜெபித்து அவ்வழித்தொடர் பெற்றாலும் அதனையே சிலர் இரண்டு நிலைப்படுத்திவிட்டனர். அதிலும் தடங்கல் ஏற்பட்டுவிட்டது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலை.
 
இந்து மத வழிபாட்டில் இராமரின் நிலையை ஆண்டவனாக்கி இராமருக்கு ஒரு மனைவி… ஏக பத்தினி விரதம் கொண்டவர் இராமர் என்று ஒரு காலத்திலும்… கிருஷ்ணருக்குப் பல மனைவிகள் என்று ஒரு காலத்திலும்… முருகருக்கு இரண்டு மனைவிகள் என்று ஒரு காலத்திலும்… இந்துமதச் சட்டத்தில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நிலையினையும் உணர்த்திப் பல வழிகளைச் செயல் கொள்கின்றனர்.
 
ஆனாலும் தன் செயலுக்குகந்த சாதகப்படி…
1.நம் சட்டத்திலேயே பல ஓட்டைகள் வைத்து
2.மனைவி தாம்பத்ய நிலைக்கு உகந்தவளல்ல என்ற நிலையிருந்தால்
3.மறுமணம் புரியலாம் என்றெல்லாம் சாதப்படுத்தி
4.நமக்குகந்த சத்திய நிலையைக் காலப்போக்கிற்குத் தகுந்த நிலையில் நாம் வாழ்கின்றோம்.
 
இந்து மதத்தின் பிறப்பு நிலையை அறிந்தாரில்லை…!
 
ஒன்றே குலம் என்ற நிலையில் ஏற்பட்ட மாற்றத்திலிருந்து பிரிந்து சென்று மதமானதுதான் கிருஸ்து மதமும் இஸ்லாமிய மதமும்.
 
இந்து மதத்தின் நெறி முறையென்ற வழி நிலை சத்திய நிலையில் உணர்த்துவாரும் இன்றில்லை. இந்து மதத்தின் நிலையிலிருந்துதான் பல சித்தர்கள் வெளிப்பட்டார்கள். ஆனால் சித்தர்கள் உணர்த்தியதை உணர்ந்து செயல் கொள்ள இந்து மதத்தாரின் எண்ணங்கள் கூடிச் செயல்படுத்தவில்லை.
 
மதங்களில் சிறந்தது எது…? என்பது எம்மதமாயினும் “அச்சத்திய நியதியைக் கடைப்பிடித்துச் செயல்படுமாயின் அதுவே சிறந்தது…”
 
1.மதம் என்ற பிரிந்த எண்ணத்திற்கே நம் எண்ணத்தை அடிமை கொள்ளாமல்
2.எல்லாம் ஒன்றே… ஒருவனே தேவன்… அத்தேவனின் சக்தி புத்தர்களாய் சகலத்துடனும் கலந்தே நாம் வாழ்ந்திடல் வேண்டும்.