“எல்லாம் பரம்பொருளின் ஐக்கியம்தான்…” என்ற எண்ண நிலை செயல்பட்டு அவ்
வழித்தொடரில் வாழ்ந்திடும் பக்குவத்தை மனித ஆத்மாக்கள் பெற வேண்டும்.
1.அதன் வழித்தொடரினைச் செயல்படுத்திட நல் உபதேசங்களை ஏற்றிடல்
வேண்டும்.
2.அந்த நல் உபதேசத்தையே நற்செயலாக்கிடல் வேண்டும்
3.வயது வரம்பு இதற்கு வேண்டியதில்லை.
பக்தியினால் மட்டும் தான் நல்லதை உபதேசிக்க முடிந்திடும் என்ற கால நிலை
இன்று மாறிவிட்டது.
தீயோரைக் காண்பதுவும் தீதே…
தீயோர் சொல் கேட்பதுவும் தீதே…
தீயோருடன் இணங்கி இருப்பதுவும் தீதே…!
என்றெல்லாம் முந்தைய காலத்தில் செய்யுள் படுத்தி உபதேசித்தனர்.
விஷமாகத் தீய சக்தி படர்ந்துள்ள நிலையில் நற்சக்தியை… சத்தியத்தை
நிலைநாட்டுபவர்… “கோடியில் ஒருவர் கூட இவ்வுலகினில் மிஞ்சவில்லை…”
இவ்வுலகமே இப் பொருளாசை என்ற பேய்க்கு அடிமைப்பட்டு விட்டது. ஆலயங்களுக்குச்
சென்றாலும் இப்பொருள் உள்ளவனுக்குத்தான் முதல் இடம்.
“பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை…” என்று எப்பொருளை வைத்து இவ்வாக்கியத்தை
அமைத்தார்களோ அதுவே நிலைத்துப் பொருளுக்கே (பணம்) அடிமைப்பட்டு விட்டது
இவ்வுலகம்.
பொருள் வைத்துத்தான் எச்சக்தியும் செயல் கொள்கின்றது இன்று
இப்பூமியில்…!
பல மடாலயங்கள் அமைத்து அங்கு செயல் புரியும் மடாதிபதிகளே இப்பொருள் உதவி
புரிபவரின் நிலைக்கொப்பத்தான் அவர்களை நடத்திடும் நடைமுறை உள்ளது.
1.அவர்களின் சத்தியத்தை நிலைநிறுத்தப் பொருள் வேண்டுமாம்…!
2.பஜனைகள் பாடிட ஆண்டவனின் அடிமை நாமம் பூண்டு ஒவ்வொரு திரு ஸ்தலங்களுக்கும்
சென்று
3.அவ்வாண்டவனை எண்ணி துதி பாடப் பொருள் உதவி அளிக்கப்பட்ட பின் தான்
4.அவ்வாண்டவனுக்கும் துதி பாடுகின்றான் அப்பாடகன்.
அவனுக்கு இட்டிருப்பது ஆண்டவனின் நாமம் ஆண்டவனின் அடிமையாம் அவன். ஆனால்
அவன் ஆண்டவனிடம் அவனைத் துதித்துப் பாடக் கூலி பெற்றுக் கொள்கின்றான்.
ஆண்டவனை மனமுருக அன்புருக பக்திப் பாடலை இவன் பாடுகின்றானாம்…! பக்தியையே விலை பேசிப் பாடுகின்றனர். அவனைத் துதி பாட பக்க மேள மனித
ஆத்மாக்கள் வேறு.
1.ஆண்டவனின் துதி பாடப் பொருள் வாங்குபவனின் பக்தியினால்
2.அவ்வாண்டவனின் அருள் எப்படிக் கிட்டும்…?
தான் பிழைக்க வேண்டாமா…? தன் சுற்றத்தாரை எப்படிக் காப்பாற்றுவது…? என்ற
வாதங்கள் புரிவார்கள்.
சோம்பேறி வாழ்க்கையாய் பிறரின் உழைப்பிலிருந்து கிடைக்கப் பெறும் ஊதியத்தை
ஏற்று இப்பஜனை பாடித் திரிபவனின் ஆத்மாவெல்லாம் எந்த நிலை பெறும்…?
எங்குள்ளான் அவ்வாண்டவன்…?
பொருள் வாங்கி இசைத்திடும் இசைப்பவனின் இசையும் அப்பொருளுக்குத்தான்
அடிமைப்பட்டதேயன்றி “ஆண்டவனுக்கு அடிமைப்படவில்லை…”
1.தன்னுள்ளே உள்ள ஆண்டவனை அன்பாக்கி
2.தன்னை ஒத்த அனைத்து உயிர் ஆண்டவ ஆத்மாக்களிடம் அன்பு பூண்டு
3.தன்னையே அவ்விசையின் இசையாய் பக்தி கமழச் செய்து
4.தன்னைச் சார்ந்தோரையும் அப்பக்தி இசையில் வழி நடத்திடல் வேண்டும்.
ஒவ்வொரு நிலைக்கும் உம்மால் (ஈஸ்வரபட்டர்) மாறு கொண்ட வாதம் உள்ளதே… சாதாரண
நடைமுறை கொண்ட மனித ஆத்மாவினால் இச்சக்தி நிலையெல்லாம் பெற முடியுமா…? என்று
எண்ணுவீர்.
ஒவ்வோர் ஆத்மாவும் அச்சத்தியம் என்ற நேர் கோட்டைச் செயல்படுத்தினால் எத்தீய
சக்தியும் நம்மை அண்டாது.
1.தீயது என்ற சொல்லுக்கே இடமில்லாமல்
2.தீயவர் நல்லவர் என்ற பாகுபாடு எண்ணம் கொள்ளாமல்
3.நம் சத்தியக் கோடு நேராய் இருந்துவிட்டால் எச்சஞ்சலத்திற்கும்
இடமில்லை.
தீயோரையும் காணலாம் தீயோர் சொல்லும் கேட்கலாம் தீயோருடனும் வாழலாம். தீயது
என்று ஒதுங்கி ஏனப்பா செல்ல வேண்டும்…?
நம் சத்தியத்தின் நேர் வழியினால் நாமும் இவ்வுலகினில் உதித்த உயிரணுதான்.
தீயோன் என்று ஒதுக்கப்பட்டவனும் நம்மை ஒத்த உயிரணுதான். நம்மால்
அத்தீயவனையும் நல்லுணர்வு படுத்திடலாம் என்ற ஜெப நிலை கொள்ள வேண்டும்.
ஒதுங்கி வாழ்வதல்ல வாழ்க்கை...!
பல காலங்களுக்கு முன்னே போகரினால் ஸ்தாபிதம் செய்து வைத்த முருகரின் சிலை
நவபாஷானத்தைக் கொண்டு செய்விக்கப் பெற்றது.
1.விஷத்தையே ஆண்டவனின் உருவமாக்கி அபிஷேக ஆராதனை செய்து
2.இம்மனிதர்களை உண்ணச் செய்தான் அப்போகநாதன்.
இது எதை உணர்த்துகின்றது…?
விஷம் என்று ஒதுங்கிச் செல்வதினால் நம்மையும் விஷமாக்கிக் கொள்கின்றோம்
பயந்த நிலையில்…!
ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அச்சத்திய ஜெபம் ஓங்கல் வேண்டும். சத்திய ஜெபம்
பெற்றுவிட்டால் எத்தீய சக்தியையும் நற்சக்தியாக்கிடலாம். நம் உடலில் உள்ள பல
கோடி அணுக்களையும் நம் நிலைக்குக் கட்டுப்படுத்திடலாம்.
1.இந்த நிலை பெற்றவனின் ஜெபத்தினால் அனைத்து சித்து நிலைகளையும்
கண்டிடலாம்
2.சித்தனுடனே கலந்திடலாம் சிவ பதம் எய்திடலாம்…!
மனித எண்ணங்களின் தடுமாற்றத்தினால் இவ்வுலகமே இம்மனிதனால்தான் விஷம்
கொண்டுள்ளது. சஞ்சலம் கொள்ளா அமைதி வாழ்க்கை வாழ்பவனுக்கு அவனின் ஆரோக்கிய
நிலையும் பாதிப்பதில்லை. அதன் வழித்தொடரில் எச்சிக்கலும்
ஏற்படுவதில்லை.
மனச் சஞ்சலத்துடனும் கோபத்துடனும் உள்ளவன் புசிக்கும் உணவு அவனுக்குச்
செரிப்பதில்லை.
அந்த உணவே விஷமாக ஆவியான அமில நிலை கொண்டு இவ்வுடலுக்கு வாய்வு என்ற நிலை
ஏற்படுத்தி அங்கங்கு உடல் உறுப்புகளில் தங்கி விடுகின்றது.
சீராய் இவை வெளியேறாவிட்டால் அங்கங்கு தங்கி உள்ள இக்காற்றின் அமிலமே அங்கு
உறைந்து மேலும் உண்ணும் உணவைச் செரிக்க விடாமல் இத்தங்கிய வாய்வு அமிலங்கள்
உறைந்து கோழையாய் கட்டி நிலைபெற்று சளி பிடித்து தும்மல் எய்தி இருமலாகி
இக்கோழை வெளி வரும்வரை இவ்வுடல் மண்டலமே அவஸ்தையுற்று அதன் தொடர்ச்சியில் பல
நிலைகள் ஏற்படுகிறது.
அங்குகங்கு தங்கிடும் இவ்வமிலத்தினால் சில உறுப்புகளும் கெடும் நிலை
எய்துகிறது. இதன் தொடர்ச்சியில் பல வியாதிகள் மனிதனுக்கு வருகின்றன.
1.நாமே சம்பாதித்துக் கொள்வதுதான் இவ்வியாதியே அன்றி
2.உண்ணும் உணவிலிருந்து மட்டுமோ அல்லது மற்றதிலிருந்தோ
3.நம்மைத் தொற்றிக் கொள்கிறது என்பதல்ல இந்த வியாதியின் அணு.
வியாதியில் அடிப்பட்டவனின் சுவாசக் காற்றினிலே இந்த நிலைகொண்ட அணுவைத்தான்
வெளியிடுகின்றான். இவனைச் சார்ந்தவரின் நிலையையும் இவனின் வட்டத்தில்
ஈர்த்துக் கொள்கின்றான்.
இவ்வெண்ணத்தின் நிலையை மாற்றுவதால் ஏற்படும் நிலையிலிருந்து நம் ஆத்மா தப்பும் நிலை பெறல் வேண்டும்.