ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 19, 2020

“சீதா” ஜனகச் சக்கரவர்த்திக்கு வளர்ப்பு மகள் என்றால் அதனுடைய விளக்கம் என்ன…?

இராமாயணத்தில் காட்டப்பட்ட ஜனகச் சக்கரவர்த்தி என்பது சூரியன். பூமியிலிருந்து வெளிப்படும் சத்துக்களை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கிறது.
 
அதிலே சுவை கொண்ட உணர்வின் எண்ணங்கள் கொண்டே மனிதனாக நம்மை உருவாக்கியது என்ற நிலையை உணர்த்துவதற்காக ஜனகச் சக்கரவர்த்தி என்று சூரியனைக் காட்டுகின்றனர்.
 
ஒரு நிலத்தினைப் பண்படுத்தி நல்ல வித்தினை ஊன்றினால் அதிலே விளைந்த சத்து (வித்துகள்) சீதா என்றும் அதை உணவாக சுவைக்கப்படும் பொழுது மகிழ்ச்சியின் நிலைகளை நாம் பெறுகின்றோம் என்று காட்டுகின்றனர்.
 
1.அதாவது உணர்வின் சத்தைத் தான் சூரியன் கவர்ந்து வைத்திருக்கின்றது
2.ஜனக சக்கரவர்த்தி அதைத் தத்தாக எடுத்து (சீதா என்ற சத்தை) அவன் வளர்க்கின்றான் என்ற பேருண்மையைக் காட்டுகின்றார்கள்.
 
மனிதனில் எடுத்துக் கொண்ட கோபமோ காரமோ மற்ற உணர்வுகள் எல்லாமே சீதா தான். அதைத்தான் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது.
 
ஆனால் காடுகளில் விளைந்த விஷத் தன்மைகளை நாம் நுகர்ந்தால் என்னவாகும்..? நம்மைக் கொன்றுவிடும். இதைப் போல உணர்வுகள் அதனதன் விளைவுகளை… அதன் ஒலி அலைகளைப் பாய்ச்சப்படும்போது அதனுடைய திறமைகளைத்தான் காட்டும்…! என்பதனை உணர்த்துகின்றனர்.
 
அதே சமயத்தில் ஜனக சக்கரவர்த்தி சுயம்வரத்தை வைக்கின்றார். திறமைகளைக் காட்டுபவர்களுக்கே தன் வளர்ப்பு மகளைத் திருமணம் செய்து தருவேன் என்று…!
 
ஒரு கொடியவன் மற்றவரை வீழ்த்திடும் திறமையைக் காட்டுகின்றான். வில்லிலே நாண் ஏற்றி அம்பை எய்து மற்றவரை மரணமடையச் செய்கின்றான். மற்றதைத் துன்புறுத்தும் நிலைகளையே அவன் உருவாக்குகின்றான்.
 
முதலிலே சொன்ன மாதிரி காடுகளின் விளையும் விஷச் செடிகளின் உணர்வினை நாம் நுகர்ந்தால் அது நம்மைத் தாக்கிக் கொல்கிறது. ஆனால்
1.மனிதனாக உருவான பின்… மனிதன் வளர வேண்டும் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்ற உணர்வினை எடுத்து
2.அந்த உணர்வினைச் சீதாவாக எடுத்து சூரியன் வளர்க்கப்படும்போது
3.அதனை நாம் அரவணைக்கும் சக்தியாக எப்படிப் பெற வேண்டுமென்று தான் இராமயாணத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது.
 
அதனை நாம் சற்றும் சிந்தித்தோமா…? என்றால் இல்லை.
 
இராமாயணம் என்ற காவியத்தைக் கடவுளாக்கப்பட்டு அந்தக் கடவுளை வேண்டினால்… இராம நாம ஜெபத்தை நாம் ஜெபித்தால் நமக்கு உதவி செய்வான்…! என்று இப்படித்தான் நமக்குள் ஊட்டிவிட்டார்கள்.
 
அந்த இராம நாமத்தை நாம் சொன்னாலும் நாம் எந்தக் குணத்தை எடுத்தோமோ அது தான் சீதா. உதாரணமாக…
1.நான் வாழ வேண்டுமென்ற உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது
2.ஒருவன் எதிரியாக வரும்போது அவனைப் பழித்துப் பேசும் உணர்வு கொண்டு
3.அவனைத் தாக்கும் நிலைகளே வரும்… ஒதுங்கி நிற்கும் நிலைகளே வரும்…!
 
இது போன்ற தீமைகளை எல்லாம் மாற்றி அமைப்பதற்காகத் தான் சீதாவைத் திருமணம் செய்வதற்காக… தன் மகளைத் திருமணம் செய்ய அவரவகள் திறமைகளைக் காட்டும்படி செய்தார் என்ற நிலையைக் காவியமாகப் படைத்து நம்மைச் சிந்திக்கும்படி செய்கின்றார்கள்.
 
அவரவர்கள் திறமையைக் காட்டும் போது அங்கே பிறரைத் தாக்கக்கூடிய அம்புகளை வைத்து… மற்றவரைக் குறி வைத்துத் துன்புறுத்தும் இயக்கங்களே வருகின்றது.  
 
ஆனால் பிறரைத் துன்புறுத்தும் அந்த உணர்வின் தன்மையை…
1.இராமன் அந்த வில்லையே ஒடித்து விடுகின்றான்
2.பிறரைத் துன்புறுத்தும் எண்ணத்தையே அக்ற்றி விட்டால் அந்த வேதனை என்ற நிலையே வராது.
 
சுவை கொண்ட உணர்வினைத் தனக்குள் உணவாக்கும் போதுதான் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக நமக்குள் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.
 
ஆகவே அந்தக் குணத்தை எடுத்து அரவணைக்கும் தன்மையாகப் பெற்றான்… கல்யாணராமா…!  
 
துன்புறுத்தும் உணர்வை நம் மீது ஒருவன் தாக்கினால் அவனை எதிர்த்துத் தாக்கும் உணர்வே வரும். இராமன் அம்பை எய்தான் என்றால் கணைகளைத் திருப்பி வாங்கிக் கொள்ளுவான்.
 
இனிமையான சொல்லைச் சொன்னால் அதையே திருப்பி எனக்குள் இனிமையாகி அரவணைக்கும் தன்மையே மீண்டும் வரும்.
 
ஆக… சுவை கொண்ட சீதா தன்னுடன் இணைந்து வாழும் சக்தியை உருவாக்குகின்றது என்று எல்லோரும் புரியும் வண்ணம் கொடுத்துள்ளார்கள்.

இராமயாணக் காவியத்தில் உள்ள மூலங்களை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.