ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 20, 2020

உறக்கத்தில் வரும் கனவுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் எண்ண நிலையைத் திசை திருப்பிடவும் இவ்வுலகில் பல நிலைகள் பல வழியில் நம்மை வந்து மோதத்தான் செய்யும். நாம் தான் இந்நிலையிலிருந்து நம் எண்ணத்தை ஓ…ம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி ஞானிகளின் உணர்வுடன் சுழல விடவேண்டும்.
 
காலையில் துயிலெழுந்து இரவு உறங்கும் காலம் வரை நம் எண்ணத்துடன் பல செயல்கள் மோதுண்டு நம்மைப் பல நிலைகளுக்கு ஆளாக்குவது என்பது மட்டுமல்ல.
 
பகலில் ஏற்படும் செயல்களின் நினைவுடனே நாம் உறக்கம் கொள்வோமானால்…
1.அந்நினைவின் தொடரில் அதே நினைவுடன் கூடிய இக்காற்று மண்டலத்தில் கலந்துள்ள பல ஆத்மாக்களின் நினைவலைகளும்
2.நாம் நம் செயலின் நினைவலைகளும் உள்ள நிலையில் அதுவும் இதுவும் மோதுண்டு
3.அதன் எண்ணச் சுழற்சியில் நம் எண்ணம் சிக்குண்டு
4.உறக்கத்தில் உள்ள நிலையில் நம் செயல் எண்னத்தின் தொடர் எண்ணத்தில் நம்மைச் செல்லவிடாமல்
5.நம் எண்ணத்துடன் மோதுண்ட பிற ஆத்மாவின் எண்ணச் செயல் நிலையின் எண்ண ஓட்டத்திற்கே
6.நம்மை அவ்வாவி ஆத்மா தூண்டி அதன் எண்ண கலவையின் ஓட்டமுடனே நாம் செல்லும் நிலையில் தான்
7.நமக்கு ஏற்படும் கனவுகளில் நம் வாழ்க்கைக்கும் எண்ணத்திற்கும் ஒட்டாத செயல்களை எல்லாம் கனவில் காணுகின்றோம்.
 
உடலை விட்ட ஆத்மாக்களுக்கு உணவுமில்லை உறக்கமுமில்லை. மனித ஆத்மாக்கள் உறங்கிடும் வேளையில்… இவ்வாவி உலக ஆத்மாக்கள் தன் எண்ணத்தைச் செயல்படுத்த அதனுடைய எண்ண நிலைகேற்ப ஆத்மாக்களின் நிலைகளில் “நம் வட்டத்திற்குள் வந்து… நம் எண்ணத்தைத் தூண்டுகின்றது…”
 
இரவில் நாம் காணும் துர்க்கனவானாலும் ஆனந்த நிலை கொண்ட கனவாய் இருந்தாலும் நாம் உறங்கி எழுந்த பிறகு காலையில் நம் நினைவில் வருவதை வைத்து என்ன செய்கிறோம்…?
 
அதே எண்ண ஓட்டத்தில்…
1.இப்படிக் கனவு கண்டு விட்டோமே…
2.கனவு பலித்திடும் என்று செப்புகின்றனரே…! என்ற எண்ணத்தில் மோதவிட்டு
3.அதே நினைவுத்தொடரில் நாம் எடுக்கும் சுவாசத்தினால்
4.நம் சப்த அலையுடன் இந்நிலையும் கலந்து அதன் தொடர்ச்சியில் நம் செயல் நிலை இழுக்கப்படுகின்றது.
 
நல்ல ஆனந்த நிலை கொண்ட கனவும் இந்த நிலையே…! கனவில் ஏற்படும் நிலையினாலும் நம் வாழ்க்கையில் சில நிலைகள் தொடர் கொள்கின்றன.
 
பகலில் மட்டும் நம் செயலின் எண்ணம் கொண்டு நம் நிலை ஏற்படுவதில்லை. பகலிற்கு மேல் இரவிலும் நம் எண்ணம் செயல்படுகின்றது என்பதனை உணர்ந்தீரா…?
 
நாம் உறங்குவதற்கு முன் ஒரு ஐந்து நிமிடமாவது நம்மையே தியானத்துடன் கலக்கும் நிலைப்படுத்தி நம் தாய் தந்தையரை வணங்கி  ஓ…ம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகள் ஞானிகளை எண்ணி அதைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடனே உறங்கினால் உறக்கத்தில் உள்ள நிலையில் நம் உயிரைச் சுற்றியுள்ள நம் ஆத்மாவுடன் நாம் எடுக்கும் இந்தச் சுவாசமே சுழன்று கொண்டிருக்கும்.
 
அந்த நிலையில் நம் எண்ணமும் நாம் விழித்துள்ள நிலையில் செய்த செயல் எண்ணமும் அதன் தொடரில் நாம் காணும் பல பல (கற்பனை) எண்ணங்களும் தியான நிலையில் உள்ள ஆத்மாவுடன் வந்து மோதுவதுமில்லை. பல கனவுகளைச் சிதறுண்டு நாம் காணவும் முடிந்திடாது.

உறங்கும் நிலையிலும் நாம் நல் சக்திகளை வளர்த்திட முடியும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.