ஆதி சக்தியின் ஜீவசக்திதான் அனைத்துமே…! அந்த ஜீவ சக்தியை அவ் ஆதி சக்தி
வளரவிடுகின்றாள். வளரும் பக்குவத்தில் அவை அவை எடுக்கும் சுவாச நிலை கொண்டுதான்
பலவும் உருப்பெறுகின்றன. ஆதி சக்தியின் அருட்சக்தியின் அச்சக்தியுடனே
ஐக்கியப்படும் நிலை பெற வேண்டும்.
இன்று நம் உலகினில் மனித ஆத்மாக்களின் எண்ண நிலை ஒருவருக்கு ஒருவர் மாறு கொண்டுள்ளது.
1.நல்லவர் தீயவர் என்பதெல்லாம் ஆண்டவன் படைப்பல்ல
2.அவரவர் எடுத்த சுவாச நிலைகொண்டு அமையப் பெற்றது தான் அது.
நல்லவரின் எண்ணத்தை… அச்சக்தியின் நிலையுடன் அச்சக்தியை ஈர்த்து…
அந்நிலையில் மென்மேலும் நற்பயனைச் செயல்படுத்தி… அதன் வழித் தொடரிலேயே
அவ்வாத்மாவிற்கு நற்சக்தி கூடி… அப்பரம்பொருளான ஆதி சக்தியுடன் ஐக்கியப்பட்டு…
ஆண்டவனின் அருள் பெற்றவனாய்… ஆண்டவனாய்… இன்று சப்தரிஷி நிலைபெற்ற பக்குவம் பெற்ற
மகான்கள் பலரும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.
அவர்கள்
1.இவ்வுலகில் உள்ள ஆத்மாக்களையும் நல் உணர்வு பெறச் செய்து
2.நல் ஆத்மாக்களாய்த் தன் வட்டத்திற்குள் அச்சக்தியை ஈர்ப்பதற்காக
3.மனித ஆத்மாக்களின் அவ் ஈர்ப்பு நிலை கொண்ட எண்ணங்களுடன் கலந்து
4.மற்ற மனித ஆத்மாக்களை நற்பயன் பெறச் செய்யும் பக்குவ சக்தியை ஊட்டி
5.நல்லுணர்வுகளை அருள் ஞானம் என்னும் நிலையில் வளர விடுகின்றனர்.
அந்த நிலை பெற்று வழி வந்த பல மனித ஆத்மாக்கள் எந்நிலை கொண்டு பிறகு
செயல்படுகின்றன…?
ஏசுநாதரும் முகமது நபியும் ஐயப்பனும் இந்நிலையில் ஞானம் கொண்டு வெளி வந்தவர்களின்
நிலையெல்லாம் உணர்த்தி வந்தேன். அதாவது அவர்களின் உடலை ஒரு சப்தரிஷி நிலை கொண்டவரின்
ஆத்மாவின் செயலினால் வழி நடத்தப்பட்டவர்கள் என்று.
பிற உடலில் அவ்வாதிசக்தியின் அருள் பெற்ற சப்தரிஷியின் நிலையினால்
இவ்வுலகிற்குத் தேர்ந்து எடுக்கப்பட்ட அவ்வுடல் கொண்ட ஆத்மாவை அச்சப்தரிஷி வழி நடத்தி
அருள் புரிந்த பிறகு அவ்வுடலின் ஆத்மாவின் நிலையென்ன…?
ஒவ்வோர் உடலுக்கும் உகந்த உயிரணுவும் உயிராத்மாவும் உள்ள நிலையில் ஒரு சில
உடல்களை அவ்வுடலில் இருந்து அவ் உயிராத்மா பிரிந்த பிறகு அக்கட்டையான ஜீவனற்ற
உடலுக்கு அந்த ரிஷிகளின் ஆத்மா செயல் கொண்டு சில நிலைகள் நடக்க வைக்கின்றனர்.
உயிராத்மாவுடன் உள்ள உடல்களில் அந்த ரிஷிகளின் நிலை செயல்படும் நிலையில்
அவ்வுடலில் உள்ள ஆத்மாவின் நிலை எந்நிலை கொள்கின்றது…?
இராமகிஷ்ண பரமஹம்ஸர் உயிருடன் உள்ள நிலையிலேயே அவரைத் தன் செயலுக்குகந்த
ஆத்மாவாய்த் தேர்ந்தெடுத்து அவர் வழியில் இவ்வுலகிற்குப் பல வழிகளைப் புகட்டிய
அந்த ரிஷியின் அருள் இவருக்கு எப்படிச் செயல்பட்டது…?
அதற்குப் பிறகு இவரின் உயிராத்மாவின் நிலையென்ன…?
இவரின் உடலிலிருந்து அவ்வுடல் நிலை கெட்ட பிறகு… அவ் உடலில் இருந்து கொண்டு
அவர் உயிராத்மா செயல்படாது என்ற நிலையில்…
1.அவர் உயிருடன் உடல் பெற்று வாழ்ந்த காலத்தில் அவர் நிலையிலிருந்து
செயல்படுத்திய அந்த ரிஷியின் சக்தி
2.அவர் உடலில் உள்ள அனைத்து அமிலத்தையும் புனிதமாக்கும் பக்குவத்தை அவர்
சுவாசமுடனும் எண்ணமுடனும் கலக்கச் செய்து
3.அவ்வாத்மாவுக்கும் அந்த ரிஷியின் ஆத்மாவுடன் கலக்கும் பக்குவத்தை
இவ்வுயிராத்மாவே ஏற்படுத்திக் கொண்டு
4.அந்த ரிஷியின் சக்தி வட்டத்துக்குள் இவரின் சக்தியும் ஒன்றி விடுகின்றது.
5.இவர் வேறல்ல… அந்த ரிஷி வேறல்ல…! என்ற நிலையில் ஐக்கியப்பட்டுச் செயல்
நிலை கொள்கின்றது.
இப்படித்தான் இச் சப்தரிஷி நிலை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் தன்
வட்டத்திற்குள் சேமிக்கும் சக்தியாய்ப் பலரை ஈர்த்துச் செயல்படுத்துகின்றனர்.
போகருக்குக் குருவாய் அருள் பெற்ற காளியங்கராய சித்தரின் நிலையும் இன்று
அவரின் வட்டத்திற்குள் அவரின் ஒளியுடனே ஒளியாய் கலக்கப் போகருக்குத் தீட்சை தந்து
அவர் நிலையில் முருகா என்ற அருள் உணர்வுடன் ஐக்கியப்படும் ஆத்மாக்களை ஒளி வட்டமாய்
தனதாகப் பல சக்தியை ஈர்த்து இன்று ஒரு மண்டலமாகும் நிலையுடன் ஒளிக் கதிர்களைச்
சேமித்துச் செயல் கொண்டு வருகின்றார்.
மனித ஆத்மாக்களில் மட்டும எண்ண நிலை மாறு கொண்டு செயல்படவில்லை.
சப்தரிஷியின் நிலையிலும் மாறு கொண்ட நிலையுண்டு. ஆனால் அவர்களின் நிலையில்
நற்பயனைப் போதிக்கும் நற்சக்தி நிலைதான் கூடிச் செயல் கொள்கின்றது.
1.மனித ஆத்மாக்களுக்குத்தான் இப்பேராசையின் நிலையிலிருந்து விடுபடத்
தெரியவில்லை
2.நல்லுணர்வை ஊட்டினாலும் ஏற்பதற்கு எண்ணத்தில் ஆசையில்லை
3.அன்பென்னும் நிலையைச் சிதறவிட்டு வாழ்கின்றனர்.