ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 5, 2020

எண்ணத்தைத் தூய்மை கொண்டு வணங்கிடுபவன் ஆண்டவன் ஆகலாம் - ஈஸ்வரபட்டர்

இங்கே கொடுக்கும் உண்மைகளைப் படிக்கும் ஒவ்வோர் உயிர் ஆத்மாவும் இவ் விஷமாய்க் கலந்துள்ள காற்றின் சக்தியிலிருந்து உன்னத நிலை பெறல் வேண்டும்.
1.நம் உயிராத்மாவிற்கு வேண்டிய அழியாச் சொத்தை சேமித்திடல் வேண்டும்.
2.நம் உயிராத்மாவை உன்னதப் பொக்கிஷமாக்கி அவ்வொளியுடனே ஒளியாய்க் கலந்திடல் வேண்டும்.
 
இன்று வாழும் நிலையில் விஷத்தன்மை வாய்ந்த காற்று அலையில் சிக்குண்டு இப்பொழுது கிடைக்கப் பெற்றுள்ள இம்மனித உடல் வாழ்க்கையை ஏக்கத்தினாலும் பேராசை வெறியினாலும் சலிப்பினாலும் ஆத்மா பிரிந்து சென்று அவ்வெண்ண அலையுடனே ஈன ஜெந்துவாய் அதன் ஈர்ப்பலையில் சிக்கி அதன் வட்டத்திற்குள் நம் உயிராத்மா சென்று வாழும் பிடியிலிருந்து மீண்டு செயல் கொள்ள வேண்டுமென்றால் நம் வாழ்க்கையைப் புனிதமாக்கி ஜெபம் கொண்டிடல் வேண்டும்.
 
1.ஈஸ்வர நாமத்தை ஜெபித்திட்டால் மட்டும் நம் ஜெபம் சக்தி பெறுவதில்லை
2.நம் வாழ்க்கையில் ஏற்படும் இன்னலில் இருந்தும் நாம் மீள வேண்டும்.
 
பக்தி என்ற நிலையில் நம் எண்ணத்தில் அப்பரந்தாமனையே எண்ணிப் பல நாள் பூஜித்து வணங்கி நாம் முக்தி எய்திட அப்பரந்தாமனிடம் நம்மைச் சேர்ப்பிக்கும் பக்தி ஜெபத்தில் ஈடுபட்டு வழி வந்திடும் நிலையில்
1.நம் வாழ்க்கையில் ஏற்படும் நம்மைச் சார்ந்தவரின் நிலையினாலும் மற்றவர்களின் நிலையினாலும்
2.நம் பூஜையில் குறுக்கிடும் நிலையோ அல்லது அவர்களினால் நம் ஜெபம் தடைபடுகின்றதே என்ற ஏக்கத்தினாலும்
3.நம் எண்ணத்தைச் செலுத்தினாலும் நம் ஜெபம் நமக்குக் கைகூடாது.
 
ஒவ்வோர் ஆத்மாவிற்கும் ஒவ்வோரு சக்தி நிலையுண்டு. அச்சக்தி நிலையை வெளிப்படுத்திடப் பக்குவ நிலை வேண்டும்.
 
உதாரணமாக நம் இல்லத்தில் நாம் சமைக்கும் பதார்த்தத்தில் எப்பதார்த்தத்தை மையப்படுத்திச் சமைக்கின்றோமோ அதன் நிலையில் உப்போ புளிப்போ காரமோ எச்சுவை அதிகப்படுகிறதோ அந்நாமம்தானே அப்பதார்த்தம் பெறுகிறது. நீங்கள் செய்த பதார்த்தத்தின் நாமம் மாறி “ஒரே உப்பு” என்று நாமம் பெறுகிறது.
 
அது போல் பக்குவ நிலை மாறு கொண்டால் நம் உயிராத்மாவிற்கு நாம் சேமிக்கும் சொத்து நம் எண்ண நிலை மாறு கொண்ட ஏக்கத்தில் நம் உயிராத்மா பிரிந்து விஷமாய்க் கலந்துள்ள இக்காற்றினில் நம் ஆத்மா தத்தளிக்க நாமே நம் ஆத்ம சக்தியைச் சிதற விடுகின்றோம்.
 
நாம் செய்யாத ஒரு செயலுக்கு மற்றவரினால் கடும் சொல்லோ எதிர்ப்பு நிலையோ ஏற்படும் தருவாயில்...
1.நாம் சத்தியவனாய் உள்ளோம் நம்மை ஏன் வீண் இகழ்ச்சி செய்கின்றனர்...?
2.ஆண்டவா அவனைப் பார்த்துக்கொள்... அவனைச் சும்மா விடலாகாது
3.நம் சத்தியத்தை அவன் மீறி நம்மைத் துவேஷிக்கிறான் என்ற எண்ண நிலையில் நம் எண்ணத்தைச் செலுத்தி
4.ஆண்டவனை வணங்கி அவன் செய்த பாவத்திற்கு நாம் எண்ணும் நிலையிலேயே
5.நம்மையே நாம் தண்டனைப்படுத்திக் கொள்கின்றோம்.
 
இவ்வுணர்வின் நிலையினால் நம் உடல் நிலையும் பாதித்து அதன் வழித் தொடரில் பல இன்னல்களை நாம் அடைகின்றோம்.
 
நாம் அறிந்தே நமக்கு ஒருவர் தீங்கு இழைக்கின்றார். நம்மை ஏமாற்றி வஞ்சனைப்படுத்தி வாழ்கின்றாரே அந்நிலையைப் பார்த்து நாம் எப்படிச் சும்மா இருத்தல் முடியும்...? என்று எண்ணத்தில் சலிப்புத் தோன்றலாம்.
 
நம்மை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு ஏமாற்றுபவர்கள் எல்லாம் நம்மை ஏமாற்றவில்லை. “அவர்களையே அவர்கள் ஏமாற்றிக் கொள்கிறார்கள்...”
 
ஒருவரின் மேல் குரோதத்தை வளர்ப்பவனும் பொறாமை கொண்டு ஏக்கப் பெருமூச்சு விடுபவனும் நம்மைப் பார்த்துப் பொறாமை கொள்ளவில்லை.... ஏக்கப் பெருமூச்சு விடவில்லை.
 
அவனையேதான் அவன் பொறாமைப்படுத்துகின்றான்... ஏக்கப்படுத்தி கொள்கின்றான்...! இது தான் உண்மை.
 
அது போன்ற எண்ணத்தின் அடிப்படையில் நாம் சிக்காது...
1.நாம் நம் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி
2.ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா...! எனக்கு நல்ல மனதைத் தா
3.அவனுக்கும் நல்லுணர்வு கொண்ட நற்சக்தியை வளரவிட்டு நல்லவனாய் ஆக்கிடுங்கள் என்ற
4.இந்த ஜெபத்தைத்தான் நாம் பெறல் வேண்டும்.
 
அவர்கள் செய்யும் வினையல்ல அது. அவர்களை ஆட்டி வைக்கும் துர் சக்தி தான் அதுவேயன்றி “ஆண்டவனின் அருளில் உதித்த அனைத்து உயிராத்மாவுமே ஒன்றுதானப்பா...”
 
இக்காற்றினில்தான் அனைத்துமே கலந்துள்ளன. தீயவனாய் எவனும் பிறந்திடவில்லை. அவரவர்களின் வாழும் சூழ்நிலையினால் ஏற்படும் இத்தீய சக்தியின் பிடியிலிருந்து மீள முடியவில்லை.
 
இன்று மட்டும் வந்த நிலையல்ல இது...!
 
பல காலமாய் இம் மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியில் குரோத வெறியுணர்வினால் அரசர்கள் ஆண்ட காலத்தில் பேராசையில் அவர்கள் நாடு பிடிக்கப் போர் என்ற நிலையில் பல ஆத்மாக்களை இக் குரோத எண்ணத்தில் போர்க்களத்தில் உயிர் நீத்த ஆத்மாக்களின் நிலையின் வழித்தொடரினால் வந்த வினை தானேயன்றி “இன்று வாழும் நம் மனித ஆத்மாக்களினால் வந்த நிலையல்ல இந்நிலை...”
 
இதிலிருந்து மீளுவதற்குத்தான் நம் ஆத்மாவை எப்படிச் செயல்படுத்திடல் வேண்டும்...? நம் எண்ணத்தைக் கொண்டு நம் உயிராத்மா அடையப் போகும் நிலைதனை உணர்ந்து சத்தியத்தின் சக்திவானாய் சக்தி பெற்றிடல் வேண்டும்.
 
தீயவர்கள் என்று ஒதுங்கி வாழ்ந்திடல் ஆகாது...!
 
நாம் எடுக்கும் நல்லுணர்வின் ஜெபத்தினால் நம் எண்ணத்தின் சுவாசத்தைப் பல மைல்களுக்கு அப்பால் இருந்திட்டாலும்
1.அன்பான சுவாசத்தை அவர் எண்ணமுடன் நம் எண்ணம் கலக்கச் செய்து
2.அவரையே நம் எண்ணத்தினால் புனிதமடையச் செய்திடலாம்.
3.நம் எண்ணச் சக்திக்கு உகந்த நிலைதனை நாம் உணர்ந்திடல் வேண்டும்.
 
பல மகான்களும் சப்தரிஷிகளும் இவ்வெண்ண சக்தியில் உயர்வு பெற்று மகான்கள் ஆனார்களேயன்றி “கடும் ஜெபத்தினாலோ விரதத்தினாலோ யாக குண்டங்கள் வளர்த்து பூஜித்ததினாலோ அம்மகான் நிலை பெறவில்லை...!”
 
எண்ணத்தில் உயர்ந்த ஞான சக்தி பெற்றவன் தான் ஞானியாகவும் சித்தனாகவும் ரிஷியாகவும் ஆனானேயன்றி பக்தியைக் கொண்டு ஆண்டவனை வணங்கி... பூஜித்து நற்சக்தியைப் பெறவில்லை...!
 
அவரவர்களுக்குள் உள்ள ஆத்மாண்டவனை இவ்வெண்ணத்தினால் பூஜித்துப் புனிதப்படுத்தி பக்குவ நிலை பெற வேண்டுமேயன்றி “பஜனை பாடி கோவிந்தனை அழைத்து எவ்வாண்டவனின் ஜெபத்தையும் பெற முடிந்திடாது...”
 
ஒவ்வோர் ஊர்களுக்கும் சென்று மக்களுக்கெல்லாம் நல்லுணர்வு பெற அக் கோவிந்த ஜெபம் பாடினால் மட்டும் நல்லுணர்வு பெற முடிந்திடாது.
1.எண்ணத்தைத் தூய்மை கொண்டு வணங்கிடுபவன் தான் ஆண்டவன் ஆகலாமேயன்றி
2.அவ் ஆண்டவனின் சக்தியைப் பெற எப்பூஜையும் பஜனையும் வழி நடந்திடாது.