ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 1, 2020

தீமைகள் நமக்குள் புகாது அடைக்க வேண்டிய இடம் எது…?

இராமன் வாலியை மறைந்திருந்து ஏன் தாக்குகின்றான் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
 
நம் குழந்தை தவறு செய்கின்றான். அதனால் நமக்கு வேதனை வருகின்றது. அந்த வேதனை நம் உடலுக்குள் போனால் இது ஓ…ம் நமச்சிவாய என்று உடலாகின்றது (சிவமாகின்றது).
 
அந்த உணர்ச்சியின் உணர்வுகள் அங்கே எண்ணங்களாகின்றது  சொல்லாக வரப்படும் பொழுது இந்த உணர்ச்சிகள் அங்கே எப்படித் தூண்டுகின்றது…? உணர்வின் தன்மை அணுவாகும்போது நமக்குள் அந்த அணுத்தன்மை எப்படி இயங்குகின்றது…? என்பதைத்தான் அங்கே இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றான்.
 
இதெல்லாம் நான் (ஞானகுரு) எதற்குச் சொல்கின்றேன் என்றால் பெண்கள் குடும்பப் பற்றுடன் இருக்கப்படும் போது இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
பாசத்தால் நாம் எப்படியோ நினைக்கின்றோம். ஆனால் சில குழந்தைகளால் எத்தனையோ சண்டைகள் நடந்து கொண்டிருக்கின்றது.
 
இதே மாதிரி தொழில் நடத்தும்போது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். நன்றாக நடக்க வேண்டுமென்று நினைக்கப்படும்போது நம்மை அறியாமலேயே வியாபாரம் கம்மியாகிவிட்டது என்றால் உடனே வேதனைப்படுகின்றோம்.
1.இந்த வாலி உள்ளே புகுந்துவிடுகிறான்.
2.இது நம் நல்ல குணத்தையே கெடுக்கின்றது.
 
வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும். ஒருத்தர் மேல் அதிகமான அன்பையும் பண்பையும் பெற வேண்டும்… சிநேகிதமாக வாழ வேண்டும்… ஒருத்தருக்கொருத்தர் கொடுத்து வாழ வேண்டும் என்று நினைக்கின்றோம்.
 
ஆனால் அது சரியாக வரவில்லை என்றால் வேதனை என்ற உணர்வு வந்துவிடுகின்றது. அந்த வாலி என்ற நிலைகள் புகுந்து விடுகின்றான். அந்த வலிமை உடலுக்குள் சென்றபின் நம் நல்ல குணத்தைப் பாதுகாக்கும் நிலை இல்லை.
 
ஆக பாதுகாக்க முடியவில்லை என்றால்…
1.நாம் நுகர்ந்த உணர்வோ அது நம் உடலுக்குள் வேதனைப்படுத்தும் கருவாக உருவாகி
2.வேதனை என்ற உணர்வு பிரம்மமாகி அது தன் வேதனையை உருவாக்கும் அந்தச் சக்தியாக
3.தன் இனத்தைப் பெருக்கும் சக்தியாக மாற்றிவிடுகின்றது.
 
இயற்கையின் நியதிகள் இவ்வாறு தான் இருக்கின்றது. ஆனால் நாம் இதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்பதைத் தெளிவாகக் கூறுகின்றது  இராமயாணம்.
 
ஒரு பாறையை வைத்து மேலே கல்லை வைத்திருப்பான். படம் போட்டுக் காண்பித்து அதாவது துவைதம் உருவ நிலையைக் காட்டி அருவ நிலையை நமக்குள் புரிய வைக்கின்றான்.
 
குகைக்குள் இருக்கின்றான் வாலி…! அரக்கர்களிடம் இருந்தான் அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். எதையும் அடக்கி ஆளும் வல்லமை இருக்கின்றது.
 
அப்போது இராமன் என்ன செய்கின்றான்..?
 
அவன் (வாலி) செயலைப் பார்க்கவில்லை. அந்தக் குகைக்கு மேல் இருக்கும் பாறையை எடுத்து மூடிவிட்டான். மூடி விட்டால் வாலி வெளியில் வருவானா…? முடியாது…!
 
நம் குழந்தை தவறு செய்கின்றது அல்லது கடையில் நஷ்டமாகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கே வேதனை என்ற உணர்வு வரப்படும்போது அது வலிமை பெற்றுவிடுகிறது.
 
1.அப்பொழுது சிந்திக்கும் திறமை வருகின்றதா…? வியாபாரத்தைச் சீராக நடத்த முடிகின்றதா…?
2.இந்த உணர்வின் தன்மை நாளை என்ன ஆகுமோ…! என்ற பயம் வருகின்றது
3.நடுக்கம் ஆகின்றது… சிந்தனை இல்லாமல் போகின்றது…!
 
இந்த எண்ணங்கள் நமக்குள் எப்படி உருவாகின்றது…? நமக்குள் தீமையின் வலிமை எப்படிக் கூடுகின்றது…? நம் மகிழ்ச்சி என்ற உணர்வு எப்படி தடைப்படுகின்றது…?
 
நாம் இதை எல்லாம் எப்படி மாற்ற வேண்டும் என்பதற்காக வேண்டித் தான் இராமாயணத்தில் இதைத் தெளிவாகக் கூறுகின்றார்கள்.
 
அதாவது வேதனையை நுகர்ந்தால் அடுத்த கணமே கண்ணின் நினைவு கொண்டு
1.ஈஸ்வரா... என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தினை அங்கே நிலை நிறுத்தினால்  
3.அந்த வேதனை என்ற உணர்வு உட்புகாது நின்றுவிடும்.
 
நாம் ஈர்க்கத் தவறிய வேதனைகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து சென்று விடும்.
 
நம் உடலுக்குள் போகவில்லை என்றால் அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் வராது... வேதனை என்ற அணுவும் நமக்குள் உருவாகாது. வேதனையை உருவாக்கும் அணுவின் தன்மை கருவாகவும் ஆகாது...! நம் சிந்தனையும் தெளிவாகும்.

அப்போது தொழிலைச் சீராக்கும் உணர்வுகளும் குழந்தைக்கு எப்படி நல் வழி காட்ட வேண்டும் என்ற தெளிந்த உணர்வுகளும் நமக்குள் தோன்றும்.