ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 26, 2019

நம் உயிரின் முக்கியமான வேலை என்ன...?


கண்ணுக்குப் புலப்படாத சூட்சம நிலைகள் கொண்டு காற்றிலிருந்து நாம் நுகர்ந்து (சுவாசித்து) அறிந்தாலும் நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்வின் உணர்ச்சிகள் இயக்கப்பட்டு நம் உடலிலே அந்தக் குணத்தின் தன்மை
1.இரத்தங்களில் கலக்கப்படும் போது "இந்திரலோகம்..."
2.உயிர் இருக்கும் பாகம் "ஈஸ்வரலோகம்..."

உதாரணமாக ஒரு கோழியோ பறவையோ கருத்தன்மை அடைந்தபின் அது முட்டை இடுகின்றது. அதை அடைகாத்து முழுமை அடைந்த பின் குஞ்சு வருகின்றது. குஞ்சு வளர்ச்சி அடைந்து மீண்டும் தன் இனத்தைப் பெருக்க எண்ணுகின்றது.

இதைப் போன்று தான் நாம் சுவாசிக்கும் உணர்வின் உணர்ச்சிகள் அனைத்தும் உயிரிலே பட்டு நம்மை இயக்கி நம் இரத்தத்தில் கலந்து அது வளர்ச்சி அடைந்து “பிரம்மலோகமாக...” மாறுகின்றது.

ஒரு கோபப்படுவோரை அடிக்கடி பார்த்து நுகர்ந்தால் நமக்குள்ளும் அந்தக் கோப உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
1.அவன் கோபக்காரன் என்ற நிலைகளில்
2.தவறு செய்பவன் என்றும் குற்றவாளி என்றும்
3.நமக்குள் அந்த உணர்வுகள் உணர்த்துகின்றது.

அப்படி உணர்த்தினாலும் அந்தக் கோபமான உணர்வையே உட்கொள்ளும் உணர்வின் கருத்தன்மை அடைந்து நாம் “திரும்பத் திரும்ப... திரும்பத் திரும்ப...” எண்ணும் போது நம் உடலுக்குள் அணுத்தன்மை அடைகின்றது.

கருவுற்ற கோழி முட்டை இட்டபின் கேறி... அடை காத்து... தன் இனக் குஞ்சை எப்படி வெளிப்படுகின்றதோ இதைப் போல சுவாசிக்கும் உணர்வுகள் உயிரின் வழியாகச் செல்லப்படும் போது
1.அந்தக் கோபமான உணர்வின் தன்மையை நம் உயிரே அடைகாத்து
2.அதன் உணர்வின் தன்மை எதுவோ அதை உடலுக்குள் உருவாக்குகின்றது.
3.ஏனென்றால் உயிரின் வேலை இதுதான்.

அப்பொழுது கோப உணர்வு கொண்ட அது அணுவாக மாறினால் "பிரம்மலோகம்" எந்தக் காரத்தின் உணர்வு கொண்டு அந்த அணு உருவானதோ பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.

அந்தக் கோபத்தின் ஞானத்தின் வழி கொண்டு இந்த உணர்ச்சி இயக்கி நமது கண்களுக்கு வருகின்றது.

நம்முடைய கண்களால் எந்த மனிதனைக் கோபமாகப் பார்த்தோமோ அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி.. இயக்கி.. இரத்தத்தில் கலந்து வந்த பின் அணுவாகி விட்டால் அந்த உணர்ச்சி கண்ணுக்குள் வந்து கோபித்த மனிதனின் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வினைக் கவரும்படி செய்கிறது.

கோபமாகப் பேசியவனின் உடலில் இருந்து வெளி வரும் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து வைத்து அலைகளாக மாற்றுகின்றது.
1.அந்த அலைகளைத்தான் நம் கண்கள் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
2.நமது உயிரின் காந்தம் கவர்ந்து அதை ஓர் இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.
3.அந்த உணர்ச்சியின் தன்மை இயக்கி இதை நம் இரத்தத்துடன் கலந்து
4.இரத்தத்தின் வழியாக உருவான அணுக்களுக்கெல்லாம் உணவாகக் கொடுக்கத் தொடங்கி விடுகின்றது.

இப்படி நம் உடலில் எத்தனையோ விதமான உணர்வுகள் உண்டு.

காலையில் இருந்து இரவு வரையிலும் நாம் நல்லவர்களைப் பார்க்கின்றோம். கேட்டவர்களைப் பார்க்கின்றோம், தவறு செய்வோரைப் பார்க்கின்றோம், வேதனைப்படுவோரைப் பார்க்கின்றோம்

இவ்வாறு காலையில் இருந்து இரவு வரையிலும் நாம் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் ஓம் நமச்சிவாய...! ஓம் நமச்சிவாய...! ஓம் நமச்சிவாய...! என்று நமது உயிர் இயக்கமாகி எந்தக் குணமோ அக்குணத்தின் தன்மையைப் பிரணவமாக்கி "ம்" என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

ஆகவே காலையில் இருந்து இரவு வரையிலும் நாம் எடுக்கும் உணர்வுகள்... உணர்ச்சிகள்... அவை அனைத்தும் உடலுக்குள் அணுத் தன்மை அடையும் அந்தச் சக்தியாக மாறுகின்றது. உடலாகச் சதா சிவமாக்கிக் கொண்டே உள்ளது நமது உயிர்.

இதிலே எந்தக் குணத்தை அதிகமாக நாம் வளர்க்க எண்ணுகின்றோமோ அந்த உணர்வெல்லாம் அது நம் உடலிலே வலுக் கொண்டதாக உருவாகி அதே உணர்வாக விளைகின்றது.

ஆகவே
1.மனிதன் எப்படி வாழ வேண்டும்...?
2.இந்த உடலுக்குப் பின் மனிதனுடைய கடைசி நிலை என்ன..?
3.சூரியன் எப்படி உருவானது...?
4.பிரபஞ்சம் எப்படி உருவானது...?
5.பிரபஞ்சத்தில் உயிரணு எப்படித் தோன்றியது...?
6.உயிரணு தோன்றிய பின் அது நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடல்கள் எப்படிப் பெற்றது....?
7.பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று மனிதனாக எப்படி உருப் பெறச் செய்தது...?
8.மனிதனான பின் நமக்குள் சேர்க்க வேண்டிய அழியாச் சொத்து எது...? என்று
8.இவை எல்லாவற்றையும் அறியக்கூடிய நிலை தான் அகத்தி என்பது..!

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அந்த அகஸ்தியன் அணுவின் இயக்கத்தையும் அண்டத்தின் இயக்கத்தையும் முழுமையாக அறிந்து தனக்குள் அந்தப் பேராற்றல்களை வளர்த்துக் கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

அவன் அருளைப் பெற்று அவன் கண்ட பேருண்மைகளை அறிந்தால் நாமும் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் போன்று ஒளியின் தன்மை பெறலாம். என்றுமே அழியாத நிலைகள் பெறலாம்.