ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 15, 2019

“தியானத்தின் மூலம்...” நாம் எண்ணுகின்ற இலக்கை எப்படி அடைய முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


மனித எண்ணத்தின் ஆற்றல் தியானத்தின் வழியாக எண்ணுகின்ற எண்ணமே ஒன்றை எண்ணிப் பெற்றிட வேண்டும் என்ற தீவிர வைராக்கிய சிந்தனைகே முதலிடம் தந்து ஈர்த்திடும் பக்குவத்தில் செயல்படுகிறது.

சரீரத்தில் மறைந்து கிடக்கும் சக்திகளை ஒழுங்குபடுத்திட யாம் கூறிடும் உணர்வுடன் கூடிய எண்ணத்தால் எண்ணி எடுக்கும் தியானத்தைப் பயிற்சியாகக் கொண்டிட்டால்
1.ஒருமுகப்படுத்தப்படும் சக்தியின் குவிப்பால்
2.விண்ணிலிருந்து வரும் ஒளி காந்த நுண் அணுக்களின் ஒளி அமில சக்திகளை ஈர்த்து
3.வளர்ப்பின் வளர்ப்பாக வளர்ப்பவனின் செயலில் நாம் பேரருளை வளர்க்க முடியும்.

இன்று உடல் பயிற்சி முறைகளுக்கும் தற்காப்புக் கலைகளுக்கும் இதே போல் பல தொடர்களுக்கும் தியானம் (YOGA, KUNDALINI) கற்பிப்பதாகக் கூறுகின்றார்கள்.

அப்படிக் கற்பித்தாலும் அவர்கள் தங்கள் எண்ணத்தில் திணித்துக் கொண்டிட்ட மாற்று எண்ணச் செயல்கள் (கோபம் சலிப்பு சங்கடம் வேதனை) வீரியமாக இருந்திட்டால் தியானத்தில் பெறும் சக்திகள் அனைத்தும் அவ்வெண்ண வலுவிற்கே செயல்படுமப்பா!

வெறும் தியானம் மாத்திரம் நல்ல நிலை அளித்திடாது...! (இது மிகவும் முக்கியமானது)

சந்தர்ப்பத்தால் தனக்குள் ஊட்டப்பட்ட சங்கட வித்துக்களின் காந்த ஈர்ப்பின் செயல் தொடர்பால்
1.எந்தக் காழ்ப்பு உணர்வு கொண்டு ஊட்டப்பட்டதோ
2.அதைச் செவிமடுப்போர் கொண்டிடும் எண்ணம் அனுதாப நீர் (உமிழ் நீர்) பாய்ச்சி
3.விஷ விருட்சமாகச் செயல் கொண்டால் அதை உடலிலிருந்து களைந்திடும் செயல் மிகவும் கடினமப்பா!

“இராமபாணம்...” உரமேறிய ஆச்சா மரங்களைத் துளைத்தது என்ற தத்துவ உண்மை உண்டு...!

அதைப் போல் சமமான உணர்வாக... நல்லெண்ணச் சுவாசமாக... உயிரான ஈசனுடன் ஒன்றி... ஞானிகள் காட்டிய நல் நெறியைச் சீராகக் கடைப்பிடித்து மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று பிறவாமை என்ற நிலை பெற வேண்டும்.
1.இந்த எண்ண உறுதியே
2.சங்கட அலைகளைத் தகர்த்திடும் அருமருந்து.

(ஏனென்றால் நடக்காத... முடியாத... நடைபெறாத ஆசைகளை... முன்னாடி வைத்துக் கொண்டு “அதை எப்படியும் அடைந்தே தீர வேண்டும்...!” என்று முயற்சி செய்து முயற்சி செய்து அதனால் தோல்வியாகும் பொழுது சங்கடமும் சலிப்பும் ஏற்படுகிறது. அதனால் எந்த நன்மையையும் நாம் அடைய முடியாது. நடக்காததை மறந்து விட்டு நடக்கக்கூடியதை... நடக்க வேண்டியதை... எண்ணிச் சீர்படுத்திக் கொள்வதே தியானத்தைப் பயன்படுத்தும் முறையாகும்)

நல்லெண்ணம் கொண்டு பெற்றிடும் உண்மை ஞான வளர்ப்பால் நல்லாக்கம் பெற்றிடுவோம் என்ற எண்ணத்தின் உத்வேகச் செயலுக்கு “விவேகம் தான் தேவை...!”

(வேகமும் வலிமையும் மட்டும் இருந்தால் இலக்கை அடைய முடியாது)