ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2019

அமாவாசைக்கு முன்னோர்களுக்குச் சாப்பாடு வைத்துக் கூப்பிடலாமா...?


இன்றைய வழக்கில் உள்ளப்படி அமாவாசை அன்று பற்றும் பாசம் கொண்டு... நம் மூதாதையர்கள் சாப்பிடுவதை எல்லாம் வைத்து... அவருடைய துணிமணிகளை எல்லாம் வைத்துப் படைத்துக் கும்பிட்டோம் என்றால் என்ன ஆகும்...?

முன்னோர்களின் உணர்வு நம்மிடம் இருக்கிறது. அமாவாசை அன்று அவரை நினைத்து ஏங்கிக் கூப்பிட்டால் உடனே அந்த ஆன்மா இங்கே வந்துவிடும். 

நம் உடலிலே அந்த ஆன்மா வந்த பின் அவர் என்னென்ன நோய்வாய்ப்பட்டாரோ அவர் என்னவெல்லாம் கவலைப்பட்டாரோ அந்த உணர்வுகள் வீட்டில் சுழன்று கொண்டு தான் இருக்கும். அது நிச்சயம் நமக்குள் வரும்.

அதே போல் அவர்கள் எந்தப் பக்தி கொண்டு இருந்தார்களோ அதன் வழியில் குலதெய்வங்கள் என்று நாமும் பிரசாதம் வைத்து வாத்திய இசைகளை எழுப்பிப் (மேள தாளங்கள்) பூஜைகள் செய்யப்படும் போது நம் குடும்பத்தில் யார் உடலிலேயாவது வந்து அருளாடத் தொடங்கும். 
1.நான் இப்போது தெய்வமாக இருக்கின்றேன்...!
2.எனக்கு வேண்டியதை நீங்கள் செய்யவில்லை...!
3.இந்தக் குடும்பத்தில் இன்னார் எல்லாம் என்னை மறந்துவிட்டனர்.
4.எனக்கு ஏன் உணவு கொடுக்கவில்லை...? என்று இப்படி அருளாடத் தொடங்கும்.

அந்த அருளாடுபவர் உடலில் நீங்கள் பார்க்கலாம். முன்னோர்களுக்கு எந்த நோயின் தன்மை வந்ததோ இந்த உடலிலும் அதே நோய் நிச்சயம் வரும்.

இதைப் போல குலதெய்வங்களின் ஆன்மாக்கள் நம் குடும்பங்களில் சுழன்று வந்து புகுந்த உடல்களை விட்டு நீங்கிய பின் அடுத்து மனிதன் அல்லாத உடலைப் பெறும் தகுதி தான் பெறுகின்றது.

இதைப் போன்ற நிலைகள் இருந்து நாம் ஒவ்வொருவரும் விடுபடுதல் வேண்டும். அப்பொழுது அதற்காக வேண்டி என்ன செய்ய வேண்டும்...? உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களுக்கு நாம் எந்த உணவைக் கொடுக்க வேண்டும்? நாம் எந்த உணவை உட்கொள்ள வேண்டும்?

பௌர்ணமி அன்று வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்று சேர்ந்து
1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
4.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் நாங்கள் அனைவரும் பெறவேண்டும் ஈஸ்வரா என்று
5.புருவ மத்தியில் எண்ணி விண்ணிலே நினைவைச் செலுத்தித் தியானித்தல் வேண்டும்.

அவ்வாறு தியானித்த அந்த வலுவின் துணை கொண்டு எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று உந்தித் தள்ளினால் அவர்களை அங்கே எளிதில் செலுத்திவிடலாம்.
1.நாம் உடலுடன் உள்ளோம்.
2.அவர்கள் உயிரான்மாக்கள் எடையற்றது.
3.இயந்திரம் போன்று நாம் உந்தித் தள்ள முடியும்.

நம்முடைய முன்னோர்கள் சப்தரிஷி மண்டலத்தின் ஒளி வட்டத்தில் கலந்து நிலையான ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று நாம் எண்ணி ஏங்குகிற பொழுது நமது முன்னோர்களும் ஒளிச் சரீரம் பெறுகின்றனர். (இது தான் முன்னோர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய உணவு)

பௌர்ணமி அன்று இதைப் போல அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று செய்தால் முன்னோர்களின் ஆன்மாக்கள் ஒளியின் சரீரம் ஆகின்றது.

அவர்கள் ஒளியின் சரீரம் ஆன பின் அந்த ஒளியின் உணர்வை எடுத்து நாம் நமக்குள் அந்த அரும் பெரும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை எடுக்க வேண்டும். (இதைத்தான் நாம் உணவாக எடுக்க வேண்டும்)

பௌர்ணமி அன்று அவர் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வினை நாம் செலுத்தினோம் என்றால் நம் குடும்பத்தில் உள்ள இருளை நீக்கும்.

இப்படி அந்த அருள் ஒளி எங்கள் குடும்பத்தில் பரவி எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த இருளை நீங்கி மெய் பொருள் காணும் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் பெற வேண்டும் என்று எவரெல்லாம் எண்ணுகின்றனரோ அவர்கள் குடும்பத்தில் வரும் தீமைகளை அகற்றும் வல்லமை பெறுகின்றனர். பிறவி இல்லாத நிலையை அடைய இது உதவும்.