ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 23, 2019

எண்ணம் எப்படித் தோன்றுகிறது...? அந்த எண்ணமே சொல்லாகவும் செயலாகவும் எப்படி வருகிறது...?


திருமணக் காலங்களில் அக்கினியை வளர்ப்பார்கள். அதிலே பல பூக்களை இட்டு பல பொருள்களை இட்டு யாகங்களைச் செய்வார்கள். யாகத்தைச் செய்பவர் சொல்லும் (மந்திரங்களை) உணர்வுகளை மற்றவர்கள் சொல்லி அக்கினியில் அந்தப் பொருள்களை இடுகின்றனர்.
1.இது எல்லாம் புறத்தின் உணர்வின் இயக்கம் தானே தவிர
2.அகத்தின் இயக்கம் இல்லை.

ஒரு மனிதன் சாந்தமாக இருக்கின்றான் என்று கண்ணுற்றுப் பார்த்தால் அவனுடைய உருவத்தைக் கண்ட பின் “அவர் சாந்தமானவர்...!” என்ற உணர்வுகளை நமக்குள் ஊட்டுகின்றது.

எதன் வழியில்?

1.நம் உயிர் ஒரு நெருப்பு.
2.அதிலே சாந்த உணர்ச்சிகள் படும் பொழுது அந்தச் சாந்தமான உணர்ச்சிகளை நமக்குள் ஊட்டி
3.சாந்தமான செயலைச் செய்யும்படிச் செய்கிறது.

அதே போல் ஒருவன் கோபப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் கண் கொண்டு உற்றுப் பார்த்து அதைத் தெரிந்து கொள்ள விரும்பும் பொழுது அவர் உணர்வை நாம் நுகர நேர்கின்றது,

உயிரிலே பட்டபின் இந்த உணர்ச்சிகள் காரமான செயலாக அதாவது கோபமான உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
1.நம் கண்களும் சிவந்து விடுகின்றது,
2.நரம்புகளும் விடைத்து விடுகின்றது.
3.நாம் சொல்லக்கூடிய சொல் கேட்போர் உணர்வுகளிலும் அதே கார உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

இதைப் போல நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் நம் உயிரில் படும் உணர்வுகள் அனைத்தும்
1.எப்படி ஒரு நெருப்பில் ஒரு பொருளைப் போடும் பொழுது அந்த மணத்தை வெளிப்படுத்துகின்றதோ
2.இதைப் போல் தான் நம் உயிரில் இந்த உணர்வுகள் படப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளை இயக்குகின்றது. (உணர்ச்சிகள் எழும்புகிறது)

ஆனால் புறத்திலே இருக்கும் நெருப்பில் ஒரு பொருளைப் போடும் பொழுது அந்தப் பொருளின் சத்து “கருகுகின்றது...!” போட்ட பொருளின் மணமும் வெளிப்படுகின்றது. ஆனாலும் “கருகிய உணர்வின் தன்மை தான்...!” அங்கே வருகின்றது.

1.ஒரு பொருளைக் கருக்கி...
2.அதனின் உணர்வை நுகர்வது என்பது உணவுக்குச் செயல்படுத்தலாம். (அதாவது உணவாக உட்கொள்ளப் பயன்படுத்தலாம்)
3.ஆனால் நாம் சுவாசிக்கும் உணர்வுக்கு அத்தகைய கருகிய நிலைகளைச் சுவாசிப்பதை
4.ஞானிகளும் மகரிஷிகளும் வெறுத்துள்ளார்கள்.

ஆகவே நாம் உயர்ந்த குணங்களையும் நாம் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெறவேண்டும் என்றும் அவர்கள் வாழ்க்கை உயர வேண்டும் என்றும் அதன் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் “நம் உயிரில் இந்த உணர்ச்சிகள் பட்டு...” அதனின் இயக்கமாக நம்மை நலமுடன் வாழச் செய்யும் சக்தியாகவும் உயர்ந்த வாழ்க்கை வாழச் செய்யும் சக்தியாகவும் இயக்கும்.

அதனால் தான் உயிரைச் “சங்கு சக்கரதாரி...” என்று ஞானிகள் காட்டினார்கள்.
1.உயிரிலே பட்ட பின் எழும் அந்தச் சப்தத்திற்கொப்ப உணர்ச்சிகளாகி
2.இந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் சக்கரம் போல் சுழன்று
3.நம் எண்ணமாகவும் சொல்லாகவும் செயலாகவும் வருகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் பார்த்துக் கேட்டு நுகர்ந்த அந்தச் சுவாசத்திற்கொப்பத்தான் நம்முடைய எண்ணமும் நம்முடைய சொல்லும் நம்முடைய செயலும் அமையும்...!

அருள் ஞானிகள் வெளிப்படுத்திய மெய் உணர்வுகளைச் சுவாசித்தால் நம் செயல் அனைத்தும் ஞானத்தின் வழியாகவே இருக்கும்.