ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 28, 2019

மூலத் தத்துவங்களைப் பற்றித் தெளிவாக உணர்த்தும் காவியங்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


மனிதனின் வாழ்க்கையில் வரும் சங்கட குணங்களை விலக்கி மனப் பக்குவம் பெற அறிய வேண்டிய ஞானத்தின் செயல் திறத்தைத் தான் இராமாயணக் காவியத்தின் மூலம் வான்மீகியார் காட்டினார்.

இதைக் கம்பனும் அறிந்தாலும் மூலத்தின் பொருள் விளக்கக் கம்பரசம் (கம்பராமாயணம்) செய்தாலும் அதிலே நவரசத்தின் பொருளைக் காட்டி நர்த்தனமாக விளையாடிய கவிச் சொல்லின் சிறப்பில் இன்றைய மனிதன் சுவைத்திட்ட சுவை என்ன..?
1.வெறும் சிருங்கார ரசத்தைத்தான் சுவைத்தான்…!
2.சிறப்பின் ரசம் அறிந்தானா…?
3.காரணத்தில் காரியத்தை அறிய வைத்த கம்பனும் அறியவொண்ணா மறை பொருள் உண்டு.

அனுபவம் என்ற பாதையிலே வான்மீகி மகரிஷி அறிந்து சொன்ன சொல் ஒளி காந்தம். உருவாக்கிய காவியம் தான் அந்த இராமாயணம்.

எண்ணங்களின் எதிர் மோதல்களிலிருந்து எப்படித் துன்பமுறா மனப்பாங்கு கொண்டு நிகழப் பெற்ற “அனுபவ ஔஷத நெறியின் செயல் விளக்கம் தான் அது…!”
1.மனிதன் பெறும் பெறவேண்டிய உயர் நிலை என்ன…? என்பது பற்றி
2.அவன் மனதில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் சலிக்கும் (அலசி)
3.ஓர் சல்லடையாகச் சலித்துப் பெற வேண்டிய வழி வகைகளை அறிந்திடச் செய்யும் “சூட்சம காவியமே இராமாயணம்…!”
4.எண்ணங்களின் அலை ஈர்ப்புச் சமைப்பில் காந்தமாகிக் காத்திட்ட சக்தியில் வான்மீகி அதைக் கொடுத்ததிலும் ஓர் பக்குவம் உண்டு.
5.அந்த வான்மீகி மாமகரிஷி கண்டுணர்ந்த வான இயல் வான் இயல் சூட்சமத்தின் தெளிவை நாமும் கண்டுணர்ந்து நம் மனம் தெளிதல் வேண்டும்.