ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 14, 2019

கொங்கணரின் ஞானக் கண்ணைத் திறக்கக் காரணமாக இருந்த “வள்ளுவன் வாசுகி செயல்…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


கொங்கணர் தன் ஞான வளர்ச்சிக்கு வித்தாக அன்று தேர்ந்தெடுத்து பிட்சை கேட்ட இல்லம் “உலகுக்குப் போதனை தந்த வள்ளுவனார் வாசுகி வாழ்ந்து வந்த இல்லம் தான்…!”

பிச்சாந்தேஹி..! என்று பல முறை கேட்டும் (ஒரு முறை தான் கூப்பிட வேண்டும் என்பது நியதி) அன்னமிட வராத காரணமும் பசியின் ஆதிக்கம் அன்று அதிகரித்து விட்டது.

அதே சமயத்தில் எச்சமிட்ட கொக்கை எரித்த தன் வல்லமையை நினைத்துக் கர்வம் மீண்டும் தலைக்கேற அதன் வழி கோபத்தின் வசமாக ஆவேசத்துடன் படபடத்துப் போன அந்த மகான் விழி சிவந்து நாசி புகை கிளம்ப கோபக் கனலாக தகித்து நின்றார்.

தனக்கு அன்னமிட வராத காரணம் அறியாமல் இங்கிருந்து போகக் கூடாது என்ற எண்ணம் கொண்டு விறைத்து நின்றார்.

வெளி வந்த வாசுகி அம்மையும் கோபக்கனலாக ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயலாக நிற்கும் முனிவரின் நிலை கண்டு எதனால் இந்த நிலை வந்தது என்று சிந்திக்கத் தலைப்பட்டார்.

பின் தன் அறிவின் ஞானத்தால் தெளிந்து முனிவரின் கோபத்தின் மூல காரணத்தையும் அறிந்து அவரின் “நான்” என்ற நிலை கண்டு அமைதியாகச் சிரித்தார்.

வெகுண்டெழுந்த கோபத்தால் முனிவன் வாசுகி அம்மையிடம் “ஆஹா… ஓர் தபசியைக் காக்கச் செய்த பின்னும்.. பல முறை குரல் கொடுத்தும்.. வெறும் கையோடு வந்த காரணம் என்ன..? என்ன மமதை கொண்டு தாமதமாக வந்தாய் காரணம் கூறு..! என்றார் கொங்கணர்.

வாசுகி அம்மையோ அந்த முனிவரின் கர்வத்தை அடக்கும் விதமாக… முனிவரின் கோபத்தின் மூல காரணத்தை நொடியில் கூறி அவர் தம் கர்வத்தை நீக்கினார்.

“என்னையும் கொக்கென்று நினைத்தீரோ கொங்கணரே…!” என்றார் வாசுகி.

அந்தச் சொல்ல்லால் திகைத்துப் போன கொங்கணரும் தன் கோப நிலையை மாற்றிக் கொண்டு வீட்டிற்குள் இருக்கும் இந்தப் பெண் பிள்ளை கூறியதைக் கேட்டு அமைதியாகச் சிந்தனையின் வசமானார்…!

ஆற்றோரம் அமைதி பெறவேண்டி எடுத்த நியமன ஜடாக்கினித் தொடரில் தவம் முற்றுப் பெற்று சக்தியின் பரிபூரணத்துத்தை முழுமை பெற வொட்டாமல் என் கோபமே எனக்குத் தடையாகிப் போனது.

காரணம்… அன்று நான் அமர்ந்திருந்த மரக்கிளை மேல் அமர்ந்த கொக்கு தன் எச்சத்தை இட அது என் தலை மேல் விழுந்தது. பகுத்தறிவற்ற ஓர் பறவை அறியாமல் செய்துவிட்ட செயலை என்னால் பொறுக்க முடியவில்லை.

பொறுக்காமல் நான் பெற்ற சக்தியின் செயல் கொண்டு சுட்டெரித்து விட்டேன்.
1.எச்சமிட்ட அந்தக் கொக்கை நான் சுட்டெரித்தேன்.
2.இன்றோ இந்தப் பெண்மணி என் கோபக்கனலையே சுட்டெரித்து விட்டாள்.
3.எம் அகத்தினைக் குளிரச் செய்து எனது “நான்…” என்ற அகங்காரத்தைப் பொடிப் பொடியாக்கி விட்டாள்.
4.வீட்டினுள் இருந்து கொண்டு இல்லறப் பயன் ஒழுகும் இந்தப் பெண்மணி பெற்ற தவத்தின் பேறு தான் என்னே…?
5.நான் காட்டில் தவம் கிடந்து என்ன பயன்…? இவள் அறிவின் ஞானக் கண் திறந்தாள் என்றெல்லாம் சிந்தித்தார் கொங்கணர்.

வாசுகி அம்மையைக் கும்பிட்டு “அம்மா ஞானம்பிகே..!” என் கர்வம் ஒழியப் பெற்றது. புத்துணர்ச்சி பெற்றேன். ஆனால் திரும்பும் முன் ஓர் காரணத்தைப் பணிவோடு கேட்கின்றேன். பதில் கூற வேண்டும் என்று பணிவோடு பகர்ந்து அன்னமிடக் காலதாமதமாக வந்த காரணத்தைக் கூற வேண்டும் என்றார்.

வாசுகி அம்மை கூறுகின்றார்கள்…!

1.“மண் சட்டியில் உணவில்லை.
2.ஆதலால் விண் சட்டியில் உணவு உட்கொண்டிருந்தோம்…!”
3.உமது குரல் எட்டா நிலைப் பரவசத்தில் ஆழ்ந்திருந்ததே காலதாமதம் ஆனது என்று சொல்கிறார்.

அம்மா..! இவ்வளவு ஞானத்தையும் உமக்குப் போதித்த குரு யாரம்மா…? என்றார் கொங்கணர்.

அவன் ஒரு “கசாப்புக் கடைக்காரன்…!” என்றார் கொல்லாமை போற்றிய வாசுகி அம்மை.

என்ன…? கசாப்புக் கடைக்காரன் ஞானம் போதித்தானா..? என்று ஆச்சரிய மேலிட்டால் கொங்கணவர் திகைத்து விட்டார்.

ஆம் கொங்கணரே..! கசாப்புக் கடைக்காரன் தான் என் குரு…! உண்மையைக் கூறுவது என்றால் என் உயிர் தான் அந்தக் கசாப்புக் கடைக்காரன். பேரண்ட இரகசியம் தெரியுமா…?

ஓர் உயிர் சக்தி சரீர கதி வளர்ச்சிக்கு உயிரணுக்களை உண்டு உண்டு தான் வளர்ச்சியின் வலுவாகின்றது. ஆனால் அதுவே உணர்வுகளின் அதி ஆவேச செயலுடைய சரீரம் தொட்டுச் செயல்படும் “அணு செல்களின் மாமிசம்… என எண்ண வேண்டாம்….!”

1.உயரிய உயிர் சக்திக்கு வலு ஊட்டும்
2.காற்றின் ஆகார அமில அணுக்களைக் கொன்று சமைத்து உண்ணும் கசாப்புக் கடைக்காரன் - என் உயிர் சக்தி தான்
3.அதுவே என் குரு…! என்று கொங்கணருக்கு சூட்சமப் பொருள் விளங்கக் கூறுகின்றார் அந்த வாசுகி அம்மை.

உட்கொள்ளத் திட ஆகாரம் இல்லை என்றால்… வல்லமை கொண்ட உயரிய சக்தி பெற்ற முனிபுங்கவன் காற்றில் ஆகாரம் உண்ணும் ஞானப்பால் உட்கொண்டே தன் வளர்ச்சிக்கு வித்தாக்க வேண்டும் என்ற இந்தச் சூட்சமத்தை வாசுகி கூறியருள “கொங்கணர் வைராக்கியம் பெற்றார்…! கோபமகற்றி ஞானக்கண் திறந்தார்…!”

“வள்ளுவர் வாக்கு…! (திருக்குறள்) என்னும் உலக வேதத்தைத் தொகுத்தளித்த அம்மை அதைத் தன் பெயர் கொண்டு வெளி உலக அறிவின் செயல்பாட்டுக்கு வெளியிட விரும்பாமல் “வள்ளுவன் வேதம்…” என்று உலகுக்குக் கொடுத்ததற்கு பலமான பின்னணிக் காரணமும் உண்டு. அது என்ன…?

அது தன் கணவர் ஓர் சாதாரண ஆடை நெய்பவர் மட்டுமல்ல. அளவிடற்கரிய சித்து நிலை பெற்ற ஓர் சித்தன் என்று அறிந்து கொண்டதற்கு மூலமும் வறுமைதான்.

பல காலம் வறுமைப் பிடிப்பில் சிக்கி ஆகாரச் செலவாணிக்குத் தக்க பொருள் இல்லாமல் சிறிதளவு பொருள் கிடைத்தாலும் நிறைவாக வாழலாம் என்ற எண்ண ஓட்டம் இருந்தாலும்
1.முழுவதும் காற்றின் ஆகாரம் உட்கொள்ளும் பக்குவச் செயல்பாட்டுக்கு
2.முழுமையாக வந்துவிட்டால் அப்புறம் திட ஆகாரம் எதற்கு..?
3.இல்லறத் தொடரிலோ சரீர கதிச் செயல்பாட்டிற்குச் சிறிதளவு திட ஆகாரமும் தேவை தான்.

காற்றின் ஆகாரத் தொடருக்கு முழுப் பக்குவச் செயல் கொண்டிடக்கூடிய பக்குவமும் கூடி வரும் வரை சிறிதளவு திட ஆகாரமும் கொள்ளுதலும் வேண்டும். அதற்குரிய பொருளும் வேண்டும் என்ற தொடரையே சூசகப்படுத்தி வள்ளுவப் பெருமானிடம் வாசுகி கூறுகின்றார்கள்.

எத்தனையோ புலவர் பெருமக்கள் புரவலர் பெருமக்களை நாடிப் பொருள் பெற்றுச் சிறப்படைந்து வாழ்கின்றார்கள். வள்ளல் தன்மை இன்னும் நம் ஞான பூமியிலே குறைவுபட்டு விடவில்லை என்று அமைதியாகவும் சூசகமாகவும் வாசுகி வள்ளுவரிடம் தெரியப்படுத்துகின்றார்.

1.“பரிசு பெறும் எண்ணம் புலவர்களுக்குத் தான் உண்டு…!
2.அது வாசுகிக்கும் வந்ததன்றோ விந்தை…!” என்று உணர்ந்து கொண்டு
3.வள்ளுவப் பெருமான் அம்மையின் மன எண்ணச் செயலின் விபரீத வழி செல்லும் செயலை மாற்றி
4.நற்செயலுற வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததார்.

பின் அம்மையை வீட்டின் பின்புறம் அழைத்துப் போய் அங்குள்ள சிறு கல்லின் மீது அம்மையைச் சிறு நீர் பெய்யச் செய்தார். வெறும் உடலின் கழிவு நீரைக் கொண்டே தமத் சித்தின் திறத்தால் அக்கல்லையே சொக்கத் தங்கமாக மாற்றி அமைத்தார், “தான் ஒரு சித்தன்…! என்ற சூட்சமத்தை அம்மையிடம் காண்பித்தார் வள்ளுவர்.

“கல்லைக் கூடத் தங்கமாக மாற்றும் செயல் திறன்…” நம்மிடமே உள்ள பொழுது வெறும் உலகோதய ஆசையைத் தூண்டி அந்தச் செயல் வீரியத்தை நாம் பெற எண்ணினால்
1.நமது எண்ணச் செயலிலும் மாற்றுக் கலந்தால் தங்கம் மாசுபடுவது போல் ஆகிவிடும்.
2.நல் வழி ஒன்று அது நன்றாம்.. தியான வழி அதிலேயே ஆகாரம் பெறுவோம்.
3.சரீர நலத் தொடருக்கும் நம்மிடமே தொழில் உள்ளது.
4.எந்த அவதார நிலை சூட்சமமோ அது தொடங்கப் போகின்றது…!
5.ஆகவே அனைத்தும் சேமமாகும்…! என்று கண்டிப்பது போல் எடுத்துரைத்தான் வள்ளுவச் சித்தன்.

இந்தச் சம்பவம் வாசுகியம்மைக்கும் வள்ளுவன் வேதத்தை உலகினுக்கு அவர் பெயரிலேயே வெளியிடக் காரணமாக அமைந்த சம்பவம் ஆகும்…!

வள்ளுவனாரும் வாசுகி அம்மையும் தனது சிந்தனையின் தவத்தை ஆட்கொள்ள தவத்தில் ஆழ்ந்திருந்த கொங்கணரும் வள்ளுவச் சித்தரின் செயல் ஒரு படிப்பினையாக வெளிப்பட்ட கருத்தின் பயன் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டார் கொங்கணர்.

அதனால் அவர் தனது வைராக்கியத்தை வளர்த்து சக்தி நிலை பெறக் காரணமாக அமையப் பெற்று சிந்தனையின் வசமாக ஆனார்.

வெளி உலகின் நிகழ் செயல் தன்மையின் முழுப்பயனையும் வீட்டினுள் இருந்து கொண்டு இல்லற ஒழுக்கவியலில் செயல்பட்டுத் தவத்தின் சிறப்பை நல்லறமாக நடத்தி ஒழுகி வரும் “வள்ளுவன் வாசுகி அம்மை பெறுகின்ற ஞானப்பால்…” உலகினுக்கு ஓர் நீதி போதனையாக வெளிப்பட வேண்டும்…!

வாசுகி அம்மை வீட்டில் இருந்து ஞானத்தைப் போதித்தாள். ஆனால் இந்த வள்ளுவரோ உலகம் அறிந்து கொள்ள முடியாத தன்மையில் தான் ஒரு சித்தன் செயல் நிலைக்கும் மேற்பட்ட சக்தி பெற்றவன் என்பதை வாசுகி அம்மையை வைத்துத் தங்கம் செய்வித்து வறுமைப் பிணி விரட்டும் சக்தி மனித எண்ண ஞான வளர்ச்சியின் செயல்பாட்டில் உள்ளது என்ற போதனையைக் காட்டி உண்மையின் சூட்சமம் தெளிவுபடுத்தி விட்டார்.

1.வாசுகி சொல்லால் போதனைப்படுத்தினார்.
2.ஆனால் சொல்லாமல் செய்வித்து வாசுகி அம்மையாரின் ஞானம் வளர் ஞானமாக்கும் தொடருக்கு வள்ளுவர் வித்திட்டு விட்டார்.
3.என்னே இவர்கள் பெற்ற தவத்தின் பயன்…!
4.இனி யான் இந்த வறுமைப் பிடிப்பைப் போக்கச் செல்வ நாயகன் ஆவேன்.
5.என்னை எண்ணும் அலைத் தொடருக்கு சக்தியளிக்கும் செல்வச் சக்தி பெறுவேன்.
6.இத்தகைய “ஞானச் செல்வங்கள்…” வறுமையில் வாடும் கொடுமையை வெல்வேன்.
7.செல்வ நாயக சூட்சமம் பெற்று உலகுய்ய வழி காட்டிடுவேன்…! என்ற உறுதி கொண்டார் கொங்கணர்.

சொல்லாமல் உபதேசிக்கும் வள்ளுவன் வாக்கு…! வீட்டில் உள்ளதோ வறுமை… வீட்டில் உள்ளதுவும் ஒன்றில்லை…!
1.தன் சூட்சம சரீரம் செயல்படும்
2.இந்தத் தூலத்தில் உள்ளதடா அத்தனை செல்வங்களும்…! என்று எனக்கே போதனை தந்துவிட்டார்…!

இவ்வாறு கொங்கணர் எண்ணிக் கடும் தவம் பேற்கொண்டு தனது சரீரத்தைப் புற்று மூட அதனுள் சூட்சம ஜெபத்தில் ஆழ்ந்து விட்டார்.