ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 8, 2019

மனிதனின் “விதி” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


விதியை மதியால் வென்றிடலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான்... விதை விதைத்தவன் விதையறுப்பான்...! என்ற பெரியோர்களின் வாக்கிலேயே கலந்துள்ளது
மனிதனின் விதி முறை...!”

வினையின் எண்ண\த்திலே விளைவதெல்லாம் வினையேதான்.
1.பிறரைக் கவிழ்க்க வினை செய்கின்றான்.
2.அந்த வினை அவனைக் கவிழ்ப்பதற்காகச் செய்த வினை
3.இவனைத் தான் வந்து சுற்றும்.
4.வினை செய்த காலத்தில் வருவது அல்ல அந்த வினை.
5.இவன் எண்ணத்திலே ஊன்றியுள்ள வினையினால் இவனையே அந்த வினை சுற்றுகிறது பெரும் பயத்தினால்.

அந்த நிலையில் உள்ளவனின் ஆவி பிரியும் பொழுது வினையின் எண்ணத்திலேயே ஆவி உலகத்திலும் தன் வினையை முடித்துக் கொள்ள ஒரு உடலை எடுக்கின்றான்.

வினைப் பயனை முடித்திடுவது தான் அவ்வாவிகளின் எண்ணமெல்லாம். வினையின் எண்ணத்தை மனதினுள் சிறு அளவு ஊன்றச் செய்தாலும் அந்த வினையின் பயன் பல கோடி ஆண்டுகளுக்கு முடிவுறுவதில்லை.

ஜென்மப் பிறவியில் எல்லாம் அவனுடனே தான் சுற்றிக் கொண்டு வருகிறது காலப் போக்கில். அந்த எண்ணம் உடையவனை எந்தச் சொல்லும் சொல்லி மாற்றிட முடியாதப்பா.
1.கர்ம பயன் என்பதெல்லாம் இதுவேதான்.
2.அவன் செய்த கர்மம் அவனை அழிக்கின்றது என்பதெல்லாம் இதுவே தான்.
3.எந்தப் பிறவி எடுத்தாலும் இக்கர்ம பயன் முடிவதில்லை. (புழுவாகப் பூச்சியாக உருவெடுக்கின்றான்)

வினை விதைத்தவனுக்கு என்றுமே சுற்றிக் கொண்டே தானிருக்கும். எந்த நற்சொற்களும் அந்த வினையுள்ள எண்ணத்திலே பதிந்திடாதப்பா. பாவ புண்ணியம் எண்ண மாட்டான். ஆகவே நரக லோகம் செல்கின்றான்

நரகலோகம் என்பதுவே கர்ம பயன் செய்தவன்... வினையின் நெஞ்சம் உள்ளவன்...! எல்லாம் செல்லுமிடம் நரகலோகம்தான்.

விதி என்பது எதப்பா...?

விதியையும் மதியினால் வெல்லலாம் என்பது வினையின் எண்ணம் உள்ளவனை நல்லெண்ணம் கொண்டவன் வென்றிட முடியுமப்பா.

வினையில் உள்ளவன் அவனைத் தாக்கும் பொழுது நல்லெண்ணம் கொண்டவன் அந்த “ஈசனை...” நினைத்திட்டால் அவ்வினையின் எண்ணத்தை ஈசனே பார்த்துக் கொள்வான்.

எந்த வடிவில் ஈசன் பார்த்திடுவான் என்றிடுவாய்...!

வழக்கின் வழியைப் புரியும்படிச் சொல்கின்றேன்.

வினையெண்ணம் உள்ளவனும் நல்லெண்ணம் படைத்தவனும் ஒரு இடத்தில் இருவரும் சேர்ந்து செய்யும் தொழிலில் அந்நிலையில் உள்ள பணத்தை எல்லாம் வினைப்பயன் உள்ளவன் எடுத்துக் கொள்கின்றான். அந்தப் பழியை நல்லவனின் மேல் சுமத்துகின்றான்.

நல்லவனுக்குப் பக்கபலமும் இல்லை. அந்த நிலையில் வழக்காடும் இடத்திற்குச் சென்றால் அந்த நிலையிலும் தன்னுடைய செல்வத்தை வைத்து ஜெயித்து விடுகின்றான் இவ்வினையுள்ளவன்.

பெரும் வழக்கறிஞர்கள் வைத்து வழக்காட நல்லெண்ணம் உள்ளவனுக்கு நாதியில்லை என்பார்கள். ஏனப்பா இல்லை...?

சில காலம் உள்ள இந்த ஜென்மத்தில் நாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் எண்ணத்திலே ஒரு நிலையில்
1.ஒரு உயர்வின் தன்மையிலே சுற்றிக் கொண்டு உள்ளது...
2.“நல்லொழுக்கங்கள் நற்சொற்கள் எல்லாமே...!”

அப்படி இருக்கும் நிலையில்
1.அவன் மனதில் சோர்வை எண்ணிடாமல்
2.அவ்வாண்டவனை நினைத்துச் சத்திய நியாயத்தை வேண்டிட்டால்
3.அவன் ஜென்மப் பயன் எல்லாமே... அவன் எண்ணத்தில்... அவன் விடும் சுவாசத்தில்...
4.உயர்ந்த தன்மையிலேயே ஜென்மங்கள் மாறும் பொழுதும் வந்தடைகிறது.
5.கடைசியில் ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான் என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை.

வினை விதைத்தவன் இவன் காலத்தில் வழக்கில் ஜெயித்தாலும் அவன் எண்ணத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் அவன் செய்த வினையின் பயன் அவன் காலம் முடிந்து அவன் எந்த நிலைக்குச் சென்றாலும் அவனைச் சுற்றிக் கொண்டே தான் வருகிறது.
1.வினைப்பயன் செய்தவன் நரகலோகத்திற்கே செல்கின்றான்.
2.இந்த நல்லோரின் இதயம் செல்லும் இடம் தான் சொர்க்க லோகம் என்பது.

அவன் செல்லும் நரக லோகத்திற்கும் இவன் செல்லும் சொர்க்க லோகத்திற்கும் தான் “விதியை மதியால் வெல்லலாம்...!” என்பது.