ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 20, 2019

“நடராஜர் களி நடனம்...!” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


ஆகாயலிங்கம் என்பது ஆகாய உயிரணு... விண்ணுள் ஒடுங்கி விண்ணில் படைத்து விண்ணுள் வாழ்வது.
1.அதன் ஈர்ப்பு சுழற்சியின் சக்தியாக
2.தன்னுள் கலந்து வாழ்வாகும் (வாழ்க்கை) தன்மையின் செயல்பாடே “நடனம்...!”

அதன் ஒலி நாத அசைவுகளின் தன்மை முதற்கொண்டே வானியலின் உயிரணுக்கள் காரண காரியங்கள் செயலாகின்றன.

அதே சுழற்சித் தன்மைகள் தான் புவியியலிலும் உயிரணுக்கள் தன் தன் வளர்ச்சியின் செயல் கொண்டு அதே பரிணாம வளர்ச்சியின் முடிவில் மனிதன் வரையிலும் செயலுக்கு வருகின்றது.

அத்தகைய தன்மையையே ஆனந்தக் களி நடனம் செய்வதாக.. அசைவதாகக் காட்டிய “உயிரியல் தத்துவ மகரிஷிகள்...” தன் செயல்பாட்டைக் கொண்டே மனித சரீரத்தில் சக்தி பெறச் செய்விக்கும் முறைகளை யோக மார்க்கமாகவும் தியான வழி மார்க்கமாகவும் வழிகாட்டினார்கள்.

யோக மார்க்கம் என்பது நாம் சுட்டிக் காட்டும் இந்தத் தியான நடை முறையில் உள்ளடங்கிச் செயல்படுவதையும் இந்தச் செயலின் தொடரினால்
1.விண்ணுக்குச் செல்லும் தத்துவ மூலகாரண அடவுகளை (மறைந்த பொருள் தன்மை)
2.முத்திரையாகக் (காரியார்த்த விளக்கத் தன்மை) கொண்டு சிவ நடனமாகக் காட்டினார்கள்.

நடனத்தின் ராஜா (நடராஜர்) என்று காட்டிய உயிரியல் தத்துவமே பதஞ்சலி யோக சூத்திர விளக்கமாகவும் அதைக் கண்டு கொண்டு தன் உயிராத்மா பெறும் ஞானத் தன்மைக்கு
1.சுவாசத்தினால் பெறும் சக்திள் அனைத்தையும் சுட்டிக் காட்டி
2.அவைகளை முத்திரைகளாகக் (யோக - நாட்டிய) காட்டினார் பதஞ்சலி.

சுவாசத்தில் வரும் உணர்வுகளின் அதி தீவிர முரண்பாட்டுத் தன்மைகளை முயலகனாகக் காட்டி அதை மிதித்துத் துவம்சம் செய்வதாகவும் காட்டுகின்றார்.

கிளர்ந்தெழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் அந்தக் கட்டுப்பாட்டுத் தன்மைகளுக்கே முதலிடம் தந்து அதன் பிண்ணனியின் தத்துவத்தை விளக்கிக் காட்டும் சூத்திரதாரியே பதஞ்சலி முனிவர் ஆவார்.

பதஞ்சலி முனிவர் தன் அனுபவ ஞான வளர்ச்சியில் பெற்ற தனித் தன்மைத் தத்துவத்தை... விளக்கவொண்ணா அந்த அதி அற்புதமான உயிரியல் தத்துவத்தை... “நடராஜராக...” உருவகப்படுத்தியிருந்தாலும் அதை எல்லாம் மாற்றி விட்டார்கள்.

எந்த மெய் ஞானத்தின் தத்துவத்தை உலகிற்கு மகா மகான்கள் தந்தனரோ அதைக் கடைப்பிடிப்பதிலும் செயல்பாட்டிலும் சூனியத்தைக் கடைப்பிடித்து.. வியாபாரப்படுத்தி... வெறும் வாயளவு மந்திரச் சொற்களைச் சொல்லிக் கொண்டு... பக்தி என்ற வழிக்கு முதலிடம் தந்து இன்று செயல்படுவதுவும் நடராஜரின் விந்தையே...!

பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட நடராஜரின் உருவத்தைப் பார்த்தால்
1.ஆகாய கங்கை என்று தலையில் ஆதி சக்தியை உயிரியல் புவியியல் தத்துவமாகக் காட்டி அவைகளின் மூலத்தை “வெட்ட வெளியான ஆகாயமாகக் காட்டினார் - சிதம்பர இரகசியம்...!”
2.உயிரணுவிற்குள் இயங்கும் உயிர் என்பதை நாகமாகக் காட்டி அதன் விஷம் கண்டத்திலும் (கழுத்திலும்) அமுதமாகிய பிறைச் சந்திரன் நெற்றியிலும் காட்டி இருவிதத் தன்மைகளும் செயல்படும் என்று உட்பொருள் படுத்தியுள்ளார்.
3.உயர்த்திய கரத்தில் அக்கினி என்றும் ஜோதித் தத்துவம் என்றும்
4.அணுவின் சுழற்சியின் அசைவின் ஒலி நாதத்தைக் காட்ட உடுக்கையையும்
5.சரீர கதியில் செயல்படும் உயிரணுவின் செயல்பாடு பெறவேண்டிய குணம் சாந்தம் என்பதைக் காட்ட ஒரு கையில் மானையும்
6.சம்ஹரிக்க வேண்டிய துர்குணங்களை அதன் உணர்வுகளை அன்று காட்ட இன்னொரு கையில் மழுவாயுதத்தையும்
7.உடல் செருக்காகிய மதத்தை நீக்க வேண்டும் என்று யானைத் தோலைப் போட்டும்
8.துர்க் குணமான கோபத்தை நீக்க வேண்டும் என்று புலித் தோலையும் அணிந்தவன் என்று உருவகப்படுத்தினார் பதஞ்சலி.

அதே போல் உணர்வுகளின் (உணர்ச்சிகளின்) அதிவேகமான தன்மையை முயலகன் என்று காட்டி அதைத் தன் காலடியில் வைத்துத் துவம்சம் செய்யப்படுவதாகக் காட்டுகின்றார்.

இடக்கரம் யானையின் துதிக்கை போல் நீண்டு “ஹஸ்த முத்திரை என்ற பாங்குபடுத்தி
1.சுவாசத்தால் தீமைகளை நீக்க வேண்டும்.. ஜெபத்தால் ஞானத்தைப் பெறவேண்டும் என்பதை ஹஸ்த முத்திரையின் மேல் அபய முத்திரையாகக் காட்டி
2.இடது காலைத் தூக்கி நாட்டியமாடும் பாவனைப்படுத்தி வலது நாசித் துவாரமாகிய “சூரிய கலை...” என்ற சுவாசம் பெறவேண்டிய ஓட்டகதியை நிச்சயப்படுத்திக் காட்டினார் பதஞ்சலி.

சுவாச அலையால் பெற வேண்டிய வீரியத்தையும் ஒருமித்த சுவாசத்தையும் சுட்டிக் காட்டிடவே ஹஸ்த முத்திரையாகக் காட்டி அதன் வழியில் சக்தி பெறும் உயிரான்மா “ஆனந்தக் களி நடனம் புரியும்... ஜோதியில் ஒடுங்கும்...!” என்று ஆகாய லிங்கமாகக் காட்டினார்.

சிதம்பரம் (சிற்றம்பலம்) என்ற சரீரத்தில் செயல்படும் அத்தனை உயிரணுக்களும் உயிரான்மாவின் சக்தியைப் பெற்று ஜோதிக்குள் கலக்கும் சிவமாகிய சக்திக்குள் ஒடுங்கும் என்பதே “திருக்கோவில் ரகசியம்...!” (சரீர ரகசியம்). இவ்வாறு
1.உயிரியலின் சூட்சம ரகசியத்தை அறியும் உயிராத்மா
2.”களி நடனம் கொண்டு சக்தி பெறும்...!” என்பதையே நடராஜர் நடனமாகக் காட்டினார்.