ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 11, 2019

“ஜோதி நிலை...” அடைவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


உன் நிலைக்குப் பகர்கின்றேன். எடுத்த பிறவியில் எல்லாம் விட்ட குறையினால் தான் இப்பிறவியில் வந்துள்ளாய்.

இப்பிறவியின் தன்மையில் தியான நிலையில் வந்திடும் ஜோதி நிலை என்னப்பா...? பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும் பெற்றிட்ட ஜோதி நிலை என்னப்பா...?

ஜோதி நிலை என்றதன் பொருள் என்னப்பா...? ஜோதி நிலை பெறுவது எப்படியப்பா...? (தியானத்தில் காட்சியாகத் தெரிவது ஜோதி நிலை அல்ல)

குடும்ப நிலையில் உள்ள ஒவ்வொருவரும் அவர் விடும் சுவாச நிலையினாலேயே ஜோதி நிலையைப் பெற்றிடலாம். இவ்வுலக வாழ்க்கையில் உள்ள பொழுதிலேயே பெற்றிடலாம் “ஜோதி நிலை...!”

ஜோதி நிலையின் பொருள் உனக்கு பகர்வதற்குப் புதிதல்ல. உன் நிலையிலேயே அஜ்ஜோதி நிலையை ஒளிரச் செய்யலாம். சித்தர்களும் ஞானிகளும் பெற்றிட்ட ஜோதி நிலையை உன் நிலையில் பெற்றிடலாம்.

அதற்காக உன் வழியில் சிறிது மாற்றம் வேண்டும்.

மன நிலையில் உள்ள சோர்வை உன் நினைவில் மறக்கச் செய்து உன் சுவாச நிலையில் நல் சுவாசத்தை எடுத்திடப் பழக வேண்டும். மன அமைதியும் சுவாச நிலையும் ஒன்றுபட்டு ஒரு நிலை எய்திட வேண்டும். (ஏனென்றால் சுவாச நிலையில் சிறு மாற்றம் வந்தாலும் அந்த நிலை மாறுபடுகிறது)

1.மனதில் சோர்வும் கோபமும் வந்திடாமல் நீ எடுக்கும் சுவாச நிலையில்
2.தியான முறையில் உள்ள பொழுது நீ ஈர்ப்பதே உன் கண்ணில் தெரிந்திடும் ஒளிகள் எல்லாம்...!

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உயிர் வழியாக நுகர்ந்து உயிரிலே ஜோதிச் சுடராக ஏற்ற வேண்டும். இதை ஒவ்வொரு நிமிடமும் ஏற்ற வேண்டும்.
1.மேல் நோக்கிப் (விண்ணிலே) பார்க்கும் உணர்வின் தன்மையை
2.அந்த ஜோதிச் சுடர் போல் நம் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்ற வேண்டும்.

இருள் அகற்றும் நிலைகளை ஒற்றுமையாக இருந்து தியானித்து  அனைவரும் நலம் பெற வேண்டும். வளம் பெறவேண்டும் அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தினை எல்லோரும் சேர்ந்து எடுத்துப் பேரொளியாக ஜோதியாக உருவாக்கும் நிலைகளுக்குச் செய்தார்கள் அன்றைய ஞானிகள்.

மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு அனைவருடைய உணர்வுகளும் ஒளி பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது
1.நமக்குள் ஒளி பெருகி ஜோதியாகின்றது.
2.ஒளியின் உணர்வின் அணுக்களாக மாற்றுகின்றது.
3.இருளை அகற்றிப் பொருளைக் காட்டுகின்றது.
4.வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை மாற்றியமைக்கும் திறனும் பெறுகின்றோம்.

மகரிஷிகளின் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் ஜோதியாக உயிரிலே ஏற்றிக் கொண்டால்
1.“நம் ஆன்மா மெய் ஞான விழிப்பு நிலை பெறும்...!”
2.நீல நிற சமைப்பின் ஜோதி நிலையை நம் உயிராத்மா அடையும்.

அதன் மூலம் நாம் மற்றவர்களிடம் பேசும் பொழுதும் மற்றவர்கள் நம்மிடம் பேசும் பொழுதும் அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சி வாழ்க்கையில் நாம் பொருளறிந்து செயல்படும் ஞானத்தின் சக்தியாக நம்முடைய செயல்களை எல்லாமே மெய் வழியில் அமைத்துக் கொள்ள முடியும்.