ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 4, 2019

அன்றாடம் உலகில் நடக்கும் அசம்பாவிதங்களைப் பத்திரிக்கை டி.வி. மூலம் பார்ப்பதால்… படிப்பதால் வரும் தீமைகள்


பத்திரிக்கையை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் அன்றாட நடக்கும் சம்பவங்களைப் படிக்க நேர்ந்தால் நம்மை அறியாமலே அச்ச உணர்வுகள் நம்மை வாட்டிக் கொண்டு இருக்கும்.

அதே சமயத்தில் அரசியல்வாதிகளைப் பற்றிய கருத்துக்களைப் படிக்கும் பொழுதும் வன்முறை… தீவிரவாதம் சம்பந்தமாகப் படிக்கும் பொழுதும் சிலருக்குப் பகைமையின் உணர்ச்சிகளையே தூண்டிக் கொண்டு இருக்கும்.

அதைப் பதிவாக்கிய பின் வீட்டிலோ அல்லது நண்பர்களிடமோ சிறிது குறைகள் பட்டாலும் பகைமை உணர்வுகள் தூண்டிக் கொண்டு இருக்கும் இந்த நிலையில்
1.நாம் எந்தத் தொழில் செய்தாலும்
2.ஒவ்வொரு தொழிலும் பகைமை உணர்வுகளை ஊட்டிக் கொண்டு இருக்கும்.

இப்படி நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்திலும் பகைமை உணர்வைச் சேர்த்துக் கொண்டு இருந்தால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் இயங்காது போய்விடும்.

பகைமை உணர்ச்சிகள் அனைத்தும் நம் உடலுக்குள் விளைந்து மிகவும் கடினமான நிலைகள் வளர்ந்து நஞ்சின் தன்மையாக அடைந்து விடுகிறது். பின் நம் சிந்தனைகள் அனைத்தும் செயலற்றதாகி நம்முடைய நல்ல செயலையே மாற்றி விடுகிறது.

நல்ல உணர்வுகள் மறைந்த பின் வாழ்க்கையில் இருண்ட நிலைகள் உடலை விட்டு நாம் சென்றால்
1.பொருள் அறிந்து செயல்படும் நிலைகள் இல்லாது
2.அன்றன்று தன் வாழ்க்கைக்கு உணவுக்கு மட்டும் தேடிச் சென்று உடலைக் காத்துக் கொள்ளும் உடலுக்குள் அழைத்துச் சென்று
3.நம் மனித உடலையே மாற்றி அமைத்திடும் சக்தியாக உருவாக்கி வேறோரு ரூபமாக நம்மை மாற்றி விடுகிறது.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள வேண்டும். ஏனென்றால் விஞ்ஞான உலகம் ரொம்பவும் விஷத் தன்மை கொண்டதாக வந்து விட்டது. நாளை நாம் இப்படி இருப்போமா…? என்ற நிலை இருக்கிறது.

 இதைப் போன்ற நிலைகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் நிலைக்காக நம்முடைய உணர்வின் தன்மை
1.இப்போது இருந்தே நாம் தயார் செய்து
2.மகரிஷிகளின் அருள் சக்திகளை நம்முடைய ஆன்மாவில் பெருக்கி
3.நம் ஆன்மாவை வலுக் கொண்டதாக ஆக்கிடல் வேண்டும்.

இந்த உடலிலிருந்து எந்தத் தருணத்தில் வெளியே சென்றாலும் நமது ஆன்மா இன்னொரு உடலில் புகும் நிலை இல்லாதபடி ஒளியின் சரீரமாகப் பெற்று நாம் மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் இணைந்திடல் வேண்டும்.

ஏனென்றால் பூமியின் கடைசி நிலையாக அமைந்திருக்கும் இத்தருணத்தில் நம்முடைய அடுத்த நிலை ஒளியின் சரீரமாகத் தான் இருக்க வேண்டும். சப்தரிஷி மண்டல எல்லையை அடைவதையே நம் வாழ்க்கையின் அடிப்படையாக வைத்திடல் வேண்டும்.

ஒவ்வொரு நாளும் உலகில் நடக்கும் அசம்பாவிதங்களும் அச்சுறுத்தும் நிலையில் வெறி உணர்வுகளைத் தூண்டிக் கொண்டு இருக்கும் இந்த அலைகளும் பூமி முழுவதும் அனுதினமும் படர்ந்து கொண்டிருக்கின்றது.

1.பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளித்தவுடன் பூச்சிகள் எப்படி இறந்து விடுகின்றதோ இதைப்போல
2.மனிதனுடைய உணர்வின் செல்கள் அனைத்தும் இழந்திடும் நிலையாக
3.எண்ணிலடங்கா அணு ஆயுதங்களையும் இரசாயணங்களையும் ஒவ்வொரு நாட்டிலும் தயார் செய்து வைத்துள்ளார்கள்.

வல்லரசுகளுக்கு மத்தியில் சிறிதளவு போர் ஏற்பட்டாலுமே உலகம் முழுவதற்கும் நஞ்சின் தன்மை படர்ந்து மனித உணர்வுகள் அனைத்தும் நஞ்சின் தன்மையே அடைந்து மனித உருவே சரியான உருவாக இல்லாதபடி நம் பூமியின் தன்மை செயலற்றதாக மாறப் போகிறது.

இதைப் போன்ற காலமாக இருக்கும் இந்த நிலையில் நம்முடைய குழந்தையினுடைய எதிர் காலம் - பின்னாடி நிலையும் இதுவாகவே இருக்கிறது.

ஆகவே இந்த உலகில் சிறிதளவேனும் மக்களைக் காக்க வேண்டும் என்றால் நம்முடைய குழந்தைகளையும் கூட்டு தியானங்களில் அமரச் செய்து அவர்களைப் பக்குவப்படுத்தி அந்த மெய் ஞானிகளின் அருளாற்றலைப் பெறச் செய்தல் வேண்டும்.

குடும்பத்திற்குள்ளும் சரி ஊருக்குள்ளும் சரி ஒற்றுமையாகும் இந்த உணர்வின் தன்மையை நாம் வலு பெறச்செய்யும் நிலையாக கூட்டுத் தியானங்களைக் கண்டிப்பாக அமைத்தே ஆக வேண்டும்.

ஒரு நூலால் ஒன்றும் செய்ய முடியாது…! பல நூல்களை ஒன்றாகச் சேர்த்தால் வலு கொண்ட கயிறாக மாறுவது போல்
1.நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அருள் உணர்வுகளைக் கவர்ந்து
2.நாம் வெளிப்படுத்தும் மூச்சலைகள் மூலம்
3.நாம் வாழும் பகுதியில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் காக்க வேண்டும்.

அதற்குத்தான் உங்களுக்குள் பல பல கோணங்களில் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நுகரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றோம் (ஞானகுரு)