ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 16, 2019

நாம் நல்லதையே செய்தாலும் உடலில் பல விதமான நோய் வருகிறது...! அத்தகைய நோய் வரக் காரணம் என்ன...?



யாராவது இருவர் ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக் கொள்கிறார் என்று  வைத்துக் கொள்வோம். ஒருவர் மற்றொருவரைக் கோபமாக ஆத்திரமாகத் தாக்குகிறார்... தாக்கிப் பேசுகின்றார்...! என்று வைத்துக் கொள்வோம்.

அப்போது நாம் கண் கொண்டு அந்த இருவரையுமே பார்க்கின்றோம். தாக்கிப் பேசும் அந்தக் கோப உணர்வுகளும் அந்தத் தாக்கிப் பேசும் பேச்சைக் கேட்டுணந்தோர் வேதனைப்படும் இந்த இரண்டு உணர்வலைகளும் வெளிப்படுகின்றது.

அவர்கள் இருவரையும் நாம் பார்க்கப்படும் போது
1.வேதனை கலந்த உணர்வும்
2.கோபம் கலந்த அந்த உணர்வும் இந்த இரண்டையும் நாம் சுவாசிக்க நேர்கின்றது.

அவ்வாறு சுவாசித்த இந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டதும்
1.கோபப்படுவோர் யார்...? என்று தெரிய முடிகின்றது.
2.வேதனைப்படுவோரையும் யார்...? என்று அறிந்து கொள்ளச் செய்கின்றது நமது உயிர்.

கண் கொண்டு பார்த்தாலும் “உயிருடன் ஒன்றிய உணர்வுகள்... அது இயக்கிக் காட்டும் போது தான்...!” நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

ஒரு உடலிலே விளைந்த இந்தக் காரமான உணர்வு அது யார் வேகமாகக் கோபத்துடன் பேசுகின்றாரோ இந்த உணர்வுகள் அடுத்தவர்  உடலிலே பட்டு அவர் உடலிலே வேதனையாக மாறுகின்றது.

இந்த இரண்டையும் நாம் சுவாசித்தோம் என்றால் அந்த இரண்டு உணர்வுகளும் நமக்குள் உமிழ் நீராக மாறி விடுகின்றது. அது நம் ஆகாரத்துடன் கலந்து கோபப்படும்... வேதனைப்படும் அந்த உணர்வின் சத்தாக இரத்தங்களில் மாறுகின்றது.

அதே சமயம் நாம் கண் கொண்டு பார்த்த இந்த உணர்வுகள் நம் எலும்புக்குள் அமைந்திருக்கும் ஊனிலே பதிவாகின்றது. நாம் கண் கொண்டு பார்க்கும் உணர்வுகளை எல்லாம் எலும்புக்குள் இருக்கும் ஊன் தான் பதிவு செய்து கொள்கின்றது.

யாரை நாம் உற்றுப் பார்த்தோமோ அவர் உடலிலே இருந்து வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவர்ந்து அலைகளாகப் பரவி வருவதை கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
1.அந்த எண்ண அலைகள் நம் ஆன்மாவில் வரும்போது தான் அதைச் சுவாசிக்க நேர்கின்றது.
2.சுவாசிக்கும் பொழுதெல்லாம் அந்த நினைவலைகள் நமக்குள் மீண்டும் மீண்டும் வருகின்றது.

ஆக இவ்வாறு எலும்புக்குள் ஊன்றிய பின் நாம் வேடிக்கை பார்த்த உணர்வுகள் நம் சுவாசித்தன் ஈர்ப்புக்குள் வந்து நம் உடலிலே அது விளையத் தொடங்கி விடுகின்றது.

உதாரணமாக நாம் ஒரு பருத்தி விதையை நிலத்தில் ஊன்றினோம்  என்றால் அந்த வித்துக்குள் எந்தச் சத்து இருக்கின்றதோ அதைக் காற்றிலிருந்து கவர்ந்து செடியாக விளைந்து மீண்டும் பருத்தியின் வித்தை வித்தாகவும் பருத்தியாகவும் அது உருவாக்குகின்றது.

இதைப் போல ஒரு சோள வித்தை விதைத்தால் சோளத்தின் தன்மை கொண்டு அது சோளத் தட்டையாக விளைந்து மீண்டும் சோள வித்தாகவும் சோளமாகவும் விளைகின்றது.

இதைப் போன்று தான் ஒருவர் கோபமாகப் பேசுகிறார் என்றால் அது காரம். தனிக் காரத்தைச் சாப்பிட்டால் எரிச்சலடைவது போல் கோபமாகப் பேசினால் நமக்கு அது எரிச்சலாகின்றது.

வேதனைப்படுகிறார் என்றால் அது நஞ்சு கொண்டது. ஒரு நஞ்சான பொருளை உட்கொண்டால் எப்படி மயக்கமாகின்றதோ அது போல் வேதனைப்படுவோரின் உணர்வை நுகர்ந்தாலே நமக்கு மயக்கம் ஆகி சிந்தனைகள் குறைகின்றது.

ஒரு நிலத்தில் - நிலம் முழுவதற்கும் பல விதமான வித்துக்களைப் போட்டால் அதனதன் வித்தின் சத்தைக் கவர்ந்து அது அது முளைப்பது போல
1.நமது உடலுக்குள் நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் பதிவாகி
2.வித்துக்களாக ஆன பின் அந்தந்தக் குணமாக (வினையாக) முளைத்து
3.தன் இனமான உணர்வுகளைக் காற்றிலிருந்து கவர்ந்து வளரத் தொடங்குகிறது.

வேடிக்கையாக நாம் பார்த்த உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறி அதை நாம் சுவாசிக்கும் போது உயிரிலே இணைக்கப்பட்டு அந்த உணர்வின் இயக்கமாக “ஓ...!” என்று அது ஜீவன் பெறுகின்றது.

சுவாசித்த அந்த உணர்வின் சத்து நம் இரத்தத்துடன் கலந்து ஒரு செடி வளர்வது போல இந்த உணர்வுகள் அனைத்தும் ஜீவ அணுக்களாக விளைகின்றது.

அப்படி அந்த உணர்வுகள் இரத்தத்தில் விளைந்த பின் கை கால் குடைச்சல்... எரிச்சல்... அசேர்க்கை போன்ற நிலைகள் ஆகி நோயாக உருவாகின்றது.

நோயாக ஆனது எந்த உறுப்புகளின் பாகத் தொடர்புகளில் இது இணைந்ததோ அங்கே அந்தக் கார உணர்ச்சியை தூண்டும் நிலைகளில் குடல் புண்ணோ... இருதயங்களில் வலியோ... அல்லது இரத்த நாளங்களில் குடைச்சலோ இவ்வாறு பெருக்கத் தொடங்கும்.

1.அப்பொழுது இந்தக் கார உணர்ச்சிகள் தாங்காது நமது சிறு மூளையின் பாகங்கள் அது புடைத்து நிற்கும்.
2.கை கால் அங்கங்களைச் சுருக்கும்.
3,இதனால் அடிக்கடி நமக்குள் கோபங்களும் எரிச்சலும் வரத்  தொடங்குகின்றது.

இந்த எரிச்சல் தாங்காதபடி வேதனை அதிகமாகி மேல் வலியாகி நரம்புகளிலும் இணைந்து புண்ணாகவோ இரணங்களாகவோ மாறி விடுகின்றது.

அப்படி நரம்புகளிலே ஆன பின் அதனின் தொடர் கொண்ட நிலையில் அந்த நுண்ணிய உணர்வலைகள் சிறு மூளையிலே தாக்கப்படுகின்றது.

விஷத்தால் தாக்கப்பட்டால் நாம் எப்படிச் செயலிழந்து விடுகின்றோமோ வேதனை என்ற விஷத்தின் தன்மை மூளையில் உள்ள நுண்ணிய பாகங்களில் பட்ட பின் நம் நரம்பியல்கள் உணர்ச்சியற்ற நிலை ஆகி உடலைச் சீராக இயக்க முடியாதபடி ஆகிவிடுகின்றது.

உடல்களிலே உணர்ச்சி அற்ற நிலையும் நாம் உணர்வு இழந்ந நிலையில் அதாவது நரம்புகளில் உள்ள அனைத்தும் சுருங்கப்பட்டு முடக்கு வாதங்கள் போன்று வந்துவிடுகின்றது. பிரசர் (PRESSURE) வந்தவர்களை எல்லாம் பார்த்தால் கை கால் அங்கங்களை எல்லாம் சரியாக இயக்கவிடாதபடி அப்படியே குறுக்கிவிடும்.

ஏனென்றால் சிறு மூலையில் தாக்கபட்டால் அதனின் செயலற்ற நிலைகள் வரும்போது கை கால் அங்கங்கள் அனைத்தும் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. அடுத்து
1.அதே உணர்வுகள் பித்த சுரபிக்குள் வந்த பின்
2.பித்தம் அதிகமாகி விட்டால் தலை சுற்றி எப்படிக் கீழே விழுகின்றோமோ இதைப் போல
3.ஒவ்வொரு உணர்வும் செயல் அற்றதாகி நம் உடலே வீழ்ச்சி அடைந்தது போல் ஆகின்றது.

அதே சமயத்தில் சுவாச உறுப்புகளுக்குள் இத்தகைய கோபமும் வேதனையும் சென்று விட்டால் அந்த உறுப்பைப் பலவீனம் ஆக்கி விடுகிறது. அதனால் சரியாகச் சுவாசம் எடுக்க முடியாத நிலைகளும் ஆகின்றது.

வேதனையான உணர்வுகளை நாம் சுவாசிக்கச் சுவாசிக்க நம்முடைய சுவாச நாளங்களில் உள்ள அனைத்தும் பலவீனமாகி அதனில் ஏற்படும் உராய்வின் தன்மை சரியாக இயங்காதபடி ஆஸ்மா மூச்சுத் திணறல் போன்ற நோய்களும் உருவாகி விடுகின்றது.

இவ்வாறு ஆன நிலையில் நாம் எண்ணும் எண்ணங்கள் அதாவது கூர்ந்து சிந்திக்கும் நிலையில் கண்களிலே கொதிப்படைந்த உணர்வும் வேதனையான உணர்வும் கலக்கப்படும் போது
1.ஒரு பொருளை நாம் காண்பது என்பது
2.அந்தப் பொருளின் தெளிவான நிலைகளை அறிந்து கொள்ள முடியாத நிலையில் மறைத்து விடுகின்றது.

இருந்தாலும் அந்தப் பொருளை நாம் சிறிது நேரம் காண்போம் என்று முயற்சித்தாலும் முடியாத நிலையில் சோர்வடையச் செய்து விடுகின்றது.

ஏனென்றால்  கண்ணில் உள்ள கரு விழியால் அந்த உணர்வுகளை நாம் கவர்ந்திருந்தாலும்
1.அதிலே எடுத்த அமில சக்தி உடல் முழுவதும் ஊடுருவச் செய்து
2.அறியச் செய்யும் நரம்புகளையும் இரதத நாளங்களையும் மங்கச் செய்து விடுகின்றது... செயலற்றதாக்கி விடுகின்றது.

ஆக கரு விழிகளிலே படும் பட உணர்வுகளை அது தெளியாக எடுத்துக் காட்டாதபடி மங்கும் நிலை அடைந்து விடுகிறது. நம் பார்வையில் படும் பொருளின் ரூபத்தைக் கவர்ந்து கரு விழிகளில் உள்ளே உள்ள விழித் திரையைப் பலவீனம் அடையச் செய்கின்றது.

நாம் பிறரைப் பார்த்தாலும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாத நிலையும் உருவாகி விடுகின்றது. இது சிறுகச் சிறுக விளைந்து இதனின் பலனாக
1.நமக்குள் கோபமும் வேதனையும் வந்து
2.குடும்பத்தில் அவசர உணர்வுகள் உந்தப்படும் நிலைகளும்
3.குடும்பத்தை உற்று நோக்கினாலே நம்மை அறியாது கோபமும் வேதனையும் படச்செய்யும்.

இதைப் போன்ற உணர்வுகள் நம் ஆன்மாவாக வரும்போது
1.நமக்குள் இனம் புரியாத மனக் கலக்கங்களும்
2.கோபமும் வெறி கொண்ட  உணர்வுகளும் செயல்படுத்திக் கொண்டே இருக்கும்.

வாழ்க்கையில் அவ்வப்பொழுது சந்திக்கும் நிலைகள் கொண்டு நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நமக்குள் மாறுபட்ட நிலைகள் ஆகி அதனால் உடலிலே பல பிணிகளை ஏற்படுத்தும் நிலையே உருவாகி விடுகின்றது.

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு எதிர்நிலை ஆகும் போது கிட்னிக்கோ கண்ணுக்கோ கல்லீரலோ நுரையீரலோ இதைப் போன்ற நிலைகள் மாசுபடும் நிலைகள் வரும்போது அந்தந்த உறுப்புகள் பலவீனம் அடைந்து விடுகின்றது.

நாம் வேடிக்கையாகப் பார்த்தாலும் தவறே செய்யவில்லை என்றாலும் இப்படி ஆகிவிடுகின்றது. இதை எல்லாம் மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்..?

எந்தத் தீமையைக் கண்டாலும் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உடனே கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து ஈஸ்வரா என்று உயிருடன் ஒன்றி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
3.ஒரு ஐந்து நிமிடம் அருள் உணர்வுகளை உயிர் வழிச் சுவாசித்தால் நம் ஆன்மாவில் புகுந்த தீமைகள் அகற்றப்படுகின்றது.

அதற்குப் பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி சண்டையிட்டவர்கள் பெறவேண்டும் அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று எண்ணினால்
1.அவர்களைப் பற்றிய நினைவலைகள் நமக்கு அடுத்து வராது.
2.அவர்களை நினைத்தாலும் நாம் தியானித்தது தான் நினைவுக்கு வரும்.
3.நோயாக நமக்குள் மாற்றாது... மாறாது...!