ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 12, 2019

“சக்தியின் சொரூபம்” (ஆக்கல் காத்தல் அழித்தல்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


சக்தியின் குணங்கள் மூன்று வகைப்பட்டது.
1.ஆக்குபவளும் அவளே... காப்பவளும் அவளே... அழிப்பவளும் அவளே...!
2.காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் உள்ளவளும் அவளே.
3.மூன்று குணங்கள் உள்ள சக்தி தான் இவ்வுலகையே ஆக்கி காத்து அழிக்கிறது.
4.”அச்சக்தியின் சொரூபம்.. சக்தியின் வடிவம்... சக்தியின் சுயநிலை... அறிந்தவர்கள் எல்லாம் “பெரும் பாக்கியம் படைத்தவர்கள்...!”

அந்நாளில் வாழ்ந்த தவயோகிகள் இவ்வுலகைக் காப்பதற்காக அச்சக்தியின் சொரூபத்தைத் தன் நிலையில் ஈர்த்துக் கொள்ளவே பெரும் தவமிருந்தார்கள்.

அவ்வழியின் அருளைப் பெற பல நாள் தவமிருந்து பல ஜெபங்கள் இருந்து அச்சக்தியின் சொரூப நிலையை அதாவது ஆக்கி... காத்து.. அழிக்கும்... நிலையைத் தன் நிலையில் ஈர்த்துக் கொண்டார்கள்.

சக்தியின் நிலை என்னப்பா...?

1.எதற்காக அவர்கள் கடும் தவமிருந்து அந்த நிலையைப் பெற்றார்கள்...?
2.தான் வாழ தன் புகழ் ஓங்க தன் சுற்றத்தாரை வாழ வைக்கவா அந்த நிலையைப் பெற்றார்கள்...?

இல்லையப்பா...!

அவர்கள் பெற்ற அருள் எல்லாம் தன் நிலையைக் காத்து... தன் ஆசையை அழித்து.. தன்னுள் சக்தியின் ஜீவனை வளர்த்துக் கொண்டார்கள். அந்த நிலை பெறுவதற்காக மிகவும் கடும் தவம் ஜெபம் எல்லாம் இருந்தார்கள்.

ஆனால் இந்தக் கலியில் வந்த சாமியார்கள் - சாமியார்கள் என்ற பெயரில் வந்தவர்கள் தன் பெயர் நிலைக்கத் தன் வழியில் உபதேசம் செய்ததைப் பலர் அறியப் பணம் காசுகள் சேர்த்துத் தன் வழியில் வந்தவர்களுக்கு வாழ வழி செய்து விட்டுத் தன் பெயரை நிலைநாட்டி விட்டுச் சென்றார்கள்.
1.இக்கலியில் வந்த சாமியார்களுக்கே இந்த நிலை என்றால்
2.இக்கலியில் தோன்றிய மனிதர்கள் நிலை எப்படியப்பா இருக்கும்...?

இக்கலியில் மாமனிதனாகலாம் என்பதெல்லாம் பல கோடிப் பணம் சேர்த்துப் பலர் அறியப் புகழ் எய்தி வாழ்வது தான் மாமனிதன் என்ற எண்ணம்.

அந்த நிலையில் அவனைப் பார்ப்பவனுக்கு என்னப்பா தோன்றும்...?
1.அவன் மேல் பொறாமை எண்ணம் தான் ஏற்படும்.
2.அந்த நிலையில் மாமனிதனாகி என்னப்பா பயன்...?

ஆதியில் வந்த சித்தர்கள் பெற்ற சக்தியின் அருள் எப்படியப்பா...? தன் உயிர் அணுவின் தொடர்பில் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவையும் தன் நிலைக்கு இயங்கும்படி அச்சக்தியின் அருளைப் பெற்றார்கள்.

கோபம் வருவதும் மகிழ்ச்சி வருவதும் சம நிலை எய்துவதும் என்ற பாகுபாடு தன் உடலில் இல்லாமல் மன எண்ணத்தில் எந்த நிலையைப் பார்த்தாலும் தன் நிலையை ஒரே நிலையில் வைத்துக் கொள்ள தன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் ஒரு நிலைப்படுத்தி விட்டார்கள்.

அந்த நிலையில், அவர்கள் ஜெபித்த ஜெபமெல்லாம் அவர்கள் பெற்ற அருள் எல்லாம் ஒரு சிறு அணுவளவு எந்த எண்ணத்தில் ஒருவர் மேல் பாய்ச்சுகின்றார்களோ அவர்களும் அந்த ஆற்றலைப் பெறுகிறார்கள்.

இத்தகையை ஆற்றல் பெற்றவர்கள் பெரும் மழைக்கும் சுழல் காற்றுக்கும் தன்னைச் சுற்றி எந்த நிலை வந்து தாக்கினாலும் அவர்களின் நிலைக்கு எந்த நிலையும் தெரிந்திடாது.

அவர்கள் எண்ண நிலை ஜெப நிலை எல்லாம் ஒரே நிலையில் இருக்கும் பொழுது அவர்கள் உடலுக்கு உணவும் உணர்வும் சுவாசமும் எந்த நிலையும் வேண்டுவதில்லை.

அவர்கள் நிலை எல்லாம் “அச்சக்தியின் நினைவே தான்...!” அச்சக்தியின் நிலையை உணர்ந்து அச்சக்தியின் அருளில் உள்ள பல கோடானு கோடி அணுக்களில் தன் உணர்வுக்கு வேண்டிய அணுவை மட்டும் ஈர்க்கிறார் இச்சித்தாதி சித்தன்.

அந்த நிலையில் உள்ள சித்தன் இவ்வுலக உயர்வுக்காக இவ்வுலகில் உள்ள மனிதர்களுக்கு எந்த வழியில் கற்பித்தால் புரிந்து விடும் என்ற நிலையில் தான் பெற்ற அருளினால் தன் உடல் அழிந்திடாமல் ஒரு நிலையில் அமர்ந்து
1.இவ்வுலக மக்களுக்குப் புரியும் வண்ணம்
2.அச்சக்தியின் உருவ அமைப்பைக் கல்லினாலோ பல உலோகத்தினாலோ செய்து
3.அந்த நிலையில் அச்சித்தன் உடலுடன் அமர்ந்து பல காலம் ஜெபம் செய்கின்றான்.
4.அந்த ஜெபத்தின் பலனைத்தான் நீ அக்கோயிலுக்குச் செல்லும் பொழுது அச்சித்தனின் அருளினால் பெற்று வருகிறாய்.

அக்கால ஆதிகாலச் சித்தாதி சித்தர்களும் பல கோடி ஞானிகளும் ரிஷிகளும் அமர்ந்து அச்சக்தியின் அருளைப் பெற்று எய்திய கோயில்கள் தான் இப்பொழுது நீ சென்று பூஜிக்கும் பல கோயில்களும்.