ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 29, 2019

ஞானிகளைப் பற்றிய உபதேசக் கருத்துகளை யாம் எப்படி ஈர்த்துச் சொல்கிறோம்…?


ஞானிகள் உணர்வைப் பெறவேண்டும் என்று எங்கெங்கு எங்கெங்கு ஏங்குகின்றனரோ அந்த ஏக்கத்தின் உணர்வை அவர்கள் வெளிப்படுத்தும் பொழுது தான் என்னால் உபதேசமே கொடுக்க முடியும். நானாகப் (ஞானகுரு) பேச முடியாது.

ஏக்கத்தின் உணர்வின் தொடர்பு வரப்படும் போது அந்த உணர்விற்கொப்பத்தான் பேசும். ஞானிகளின் உணர்வுகளை நானாக எடுத்துச் சொல்வது என்றால்
1.நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் போது
2.மின்னலாகி ஒளிக் கற்றைகளாக மாறி அந்த அலைகள் எப்படிப் படர்கின்றதோ
3.அதைப்போலத் தான் இங்கே ஏங்கி உள்ளோர் உணர்வுகளை நுகர்ந்து தான் நான் பேசுகின்றேன்.

தீமைகள் எப்படி இயக்குகிறது...? என்று இந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி தீமையைப் பிளக்கும் மெய் ஞானிகளின் உணர்வினை உங்களை நுகரச் செய்து கொண்டிருக்கின்றோம்.

மெய் ஞானிகள் தங்களுக்குள் விளைய வைத்த விண்ணின் ஆற்றல் மிக்க சக்திகளை உங்களுக்குள் ஞான வித்தாகப் பதிவு செய்து அதை உங்களுக்குள் உருவாக்கச் செய்து அறியாது வரும் தீமைகளையும் பகைமைகளையும் அகற்றி கல்யாணராமனாக நீங்கள் ஒவ்வொருவரும் மாற வேண்டும் என்ற ஆசையில் தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.

ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கி வளர்த்துக் கொண்டால் தான் எனக்கு மகிழ்ச்சி. சொல்வதைக் கேட்டு விட்டு அப்படியே விட்டு விட்டு போனீர்கள் என்றால்
1.சாமி சொல்கிறார்... பார்க்கலாம்...!
2.சாமி எனக்கு வேறு என்ன செய்தார் என்று எண்ணாதீர்கள்.

இன்னும் இதைவிட என்ன உதவி செய்ய வேண்டும்...? மெய் ஞானிகள் கண்டுணர்ந்த மெய் ஞானத்தை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
2.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று உங்கள் உயிரை எண்ணி சதா தியானம் இருக்கிறோம்.

அந்த உணர்வை நுகரும் பருவம் நீங்கள் இழந்து விட்டால்...! நல்ல சாப்பாடு ஆக்கி வைத்து விட்டு அதை உட்கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும்...?

விவசாயப் பண்ணைகளில் நல்ல வித்தைக் கொடுக்கிறார்கள். அவர்கள் கொடுத்ததை மண்ணிலே விதைக்காமல் வெளியிலே இறைத்து விட்டால் என்ன செய்யும்...?
1.எறும்போ மற்ற பூச்சிகளோ பறவைகளோ எடுத்துத் தின்று விட்டுப் போகும்... முளைக்காது...!
2.அப்படியே முளைத்துப் பயிர் வந்தாலும் தகுந்த பருவத்தில் நீரோ உரமோ ஒன்றும் கொடுக்கவில்லை என்றால் மொத்தமாக அழித்து விடுகின்றோம்.

ஆகவே யாம் பதிவு செய்யும் ஞானிகளைப் பற்றிய உணர்வுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்ற உணர்வைக் கூட்டினால் தான் உங்கள் வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க முடியும்.

அருள் ஞானத்தின் வழியில் வாழ முடியும். இருளை அகற்றிப் பேரொளியாக மாற்றும் ஆற்றலைப் பெற முடியும். பிறவியில்லா நிலையை அடைய முடியும். அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.

இது உங்கள் கையில் தான் இருக்கிறது...!