ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 26, 2019

வேல் விண்ணிலே பறந்தது...! என்று காட்டியதற்குள் மறைந்துள்ள பொருள் என்ன...? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனிதனான நமக்குள் பல பல எண்ணங்கள் இருந்தாலும் இந்த உடல் வாழ்க்கையில் மோதும் உலகோதய உணர்வுகளிலிருந்து உயர் ஞான வழியின் வழியை உணர்ந்து செயல்படும் பக்குவம் பெற வேண்டும்.  

1.நான் என்ற ஆணவம் ஒரு மலம்
2.காமம் என்ற சபல குண மோகம் ஒரு மலம்
3.உலகோதய ஆசை என்னும் மாயை மூன்றாவது மலம்.

இந்த மூன்றையும் அறிந்து அந்த மும்மலத்தையும் நீக்க வேண்டும் என்றால் சத்தியம் சிவம் சுந்தரம் என்ற கருத்தின் பொருளைக் காண வேண்டும்.

மெய் ஞானிகள் உணர்வுடன் தொடர்பு கொண்டு மனத் தெளிவு பெற்று சத்தியம் என்பதன் உண்மைப் பொருள் விளங்கி நம் எண்ணம் சொல் செயல் மூன்றும் நேர்கோடாகப் பரிணமித்தல் வேண்டும். சத்தியம் என்ற அந்த மெய் ஞானமே உண்மை ஞானமாக அறிந்து செயல்பட வேண்டும்.

சத்திய வழி சிவம் பெறுதல் என்பது என்ன..? சிவத்தை எங்கிருந்து பெறுவாய்?
1.உன்னிடத்தில் உள்ளதடா சிவம்... என்று
2.சித்தன் காட்டிய வழியில் உன்னை உணர்ந்து பாரப்பா!

காமம் என்பதே உயிர்களுக்கு அன்பு. காமம் சமமான பக்குவத்தில் இருந்தால் அதுவே சிவமாகும். அந்த அன்பு தானப்பா “சிவம்...!”

மனதில் அன்பு கொண்டு விட்டால் உயிரான்மாவின் சக்தியின் வலுவிற்குச் சுலபமான வழி கிட்டிவிடும். அதுவே சுந்தரம்...! சுந்தரத்தைப் பெறுவது என்றால் “அழகு” என்று பொருள் கொள்வாய்.
1.அந்த அழகு என்பது எதுவப்பா..?
2.நீ நினைக்கும் உடல் அழகு அல்ல...!

அழகு என்பது ஆன்ம வலுவின் ஒளி காந்த சக்தி கொண்டு “சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஜோதித் தத்துவம் ஆகும்..!” அதைப் பெற வேண்டும் என்றால் மும்மலம் நீக்கப்பட வேண்டும்.

அதை நீக்கிய பிறகு மெய் வழி கண்டு மெய் வழி அறிந்து மெய் ஞானம் மலர்ந்து
1.விரிந்து மணம் வீசும் ஒரு மலர் போல
2.ஆன்ம சக்தியின் சத்தியம்.. சிவம்... சுந்தரம்... என்ற எண்ணத்தில்
3.கடைப்பிடிக்கும் அந்தச் சத்தியத்தை நிலை நிறுத்தி அதை மேன்மைப்படுத்தினால்
4.அன்பு என்ற சிவத்தைப் பெறுகின்றாய்.

அன்பாம் சிவ ஈர்ப்பின் வலுச் செயலினால்... சுந்தரமாம் ஆன்ம அழகின் ஜோதியாக... ஜோதியின் சக்தியே பிரகாசமாக... பிரகாசத்தின் ஒளி நிகழ்வாக... “மூலத்தின் மூலமாகச் செயல் கொண்டிடலாம்...!”

சிற்றின்ப போகத்தையே பேரின்பப் போகமாக்கிய போக நாதர் சத்தியம் சிவம் சுந்தரத்தைப் பெற்றது... மும்மலத்தை மாற்றியமைத்து நற்குண வழிச் செயல் ஆக்கத்தின் ஆக்கம் பெற்றதால் தான்...!

முருகனுக்கு மயிலையும் சேவலையும் காட்டி நாகம் வேல் என்ற தொடரையும் காட்டுகின்றார்கள். அதன் சூட்சமம் அறிந்தோமா...? போகப்பெருமான் வளர்த்துக் கொண்ட அனுபவ ஞானத்தை நாமும் அறிந்து கொண்டால் நம்முடைய வளர்ச்சி நல் வழி ஆகுமப்பா..!

விநாயகர் ஞானக்கனியைப் பெற்றார். இடும்ப குண வசத்தால் முருகனுக்குக் அது கிடைக்கவில்லை என்ற கதையின் தத்துவத்தில் உள்ள உண்மையையும் தெளிந்து கொள்ள வேண்டும்.

வினையின் நாயகன் அந்த விநாயகனே நாம் தானப்பா!  நாம் எப்படி ஞானக்கனி பெறுவது..?

உயிரின் மூலமாகிய “சிவ சக்தி...!” என்று சொரூபப்படுத்திக் காட்டிய
1.சுழற்சியின் வேகமான சிவத்திற்குள்... சக்தி உருக்கொள்ளும் தன் உயிர் சக்தியை
2.தன்னைத் தான் உணர்ந்து தன்னுள் அந்தச் சிவ சக்தியைக் கண்டு
3.வலுக் கொண்ட செயலின் ஆக்கமாகத் தன்னைத் தான் அறிவதே ஞானக்கனி பெறுவது என்பது.

(சூட்சமப்படுத்திக் காட்டிய நிலையில்) தன்னுள்ளே சிவ சக்தியைக் கண்டு அதைச் சுற்றும் வழித் தொடரில் அதை வலம் வந்து அந்த வினையின் நாயகனாக நாம் பெறுவதே “ஞானக்கனி...!”

அகஸ்திய மாமகரிஷியின் தொடர்பு கொண்டு... போகப் பெருமானின் குரு காளஞ்சி நாதர் (காலிங்கநாதர்) சொன்ன முறைப்படி
1.இருந்த இடத்திலேயே (வெளியிலே தேடிக் கொண்டிருக்காமல்) ஞானக்கனி பெறுதல் என்பதில் அந்த ஞானம் கனிந்து விட்டால்
2.அதனின் சுவையைப் பெற்று விட்டால்
2.அந்தச் சுவையின் “மூலம் அறிய...” வழி பிறக்கும்.

இப்படித் தத்துவங்களையெல்லாம் காட்டி சூட்சமங்களை எல்லாம் உள் புகுத்தி மும்மல நீக்கத்திற்கு வழி காட்டி வாழையடி வாழை என வரும் ஞானச் செல்வங்கள் தன் சக்தியை வளர்த்துக் கொள்வது என்பது மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் வழியாகும்.

கோப குணத்திற்குச் சிறிதளவு சக்தியை ஊட்டிவிட்டால் அது நாம் பெற்ற தியான சக்தியின் சேமிப்பைத் தனக்குகந்த ஆகாரமாகச் சாப்பிட்டுத் தன் வலுவை தன் கோப குணத்தை மீண்டும் வலுக் கொள்ளச் செய்துவிடும்.

கோபத்தை விலக்கலே உயர் ஞானத்தின் முதல் படி. கோபத் தன்மை இருந்தால் மும்மலங்களும் தீய வினைகளுக்கு அடிகோலும்.

ஆணவம்.. மோகம்... உலக மயக்கம் என்னும் மாயை...! இவைகளை ஞானச் செல்வங்களால் வென்று காட்டியதைத்தான்
1.வேலின் வடிவமாக
2.வேல் விண்ணிலே பறந்து சென்றது...! என்று சூட்சமாகக் காட்டப்பட்டது.

முருகன் ஆணவத்தை அடக்கிவிட்டார்... மோக குணத்தை வென்றிட்டார்... உலகோதய மாயை என்னும் விஷ நாகத்தை அடக்கி விட்டார்... என்பதெல்லாம் உலக மக்களுக்குப் படிப்பினையாகச் சொல்லப் பட்டது.
1.அந்த நல் வழியக் கண்டுணர்ந்து செயல் கொண்டால்
2.“வேல் விண்ணிலே பறந்ததின் சூட்சமம் புரிந்துவிடும்...!”

மயிலிற்கும் பாம்பிற்கும் பகை என்ற நிலை போல உலகோதய இன்பம் பெறுபவன் கூட ஆணவம் கொண்டிட்டால் பகை என்ற எதிர் மறை நிலைதான் செயல் கொள்ளும்...! என்ற உண்மையை அறிந்துணர வேண்டும்.

ஆகவே ஆணவ மலத்தை அடக்கிச் செயல் கொண்டாலும் உலகோதயச் செயல் தத்துவத்தில் தேவையை அழித்திடல் ஆகாது. (ஏனென்றால்) “அது தான் உயிர் சக்தி...!”

அதுவும் ஞான வழித் தொடருக்கு வழி காட்ட மயிலிற்கும் பாம்பிற்கும் பகையாக இருந்தாலும் ஆணவத்தை நீக்கி ஞானம் பெற்றுவிட்டால்
1.இரண்டுக்கும் உள்ள பகை நீங்கி
2.மயிலின் காலடியில் பாம்பு எப்படி வாழ்கின்றது...! என்ற உண்மை ஞானம் தெளிவுபடும்.

மோகக் குணத்தைப் பேரின்ப ஞான குணத்திற்கு எப்படி வழி வகுப்பது என்றால் மோக குணத்தை அதன் ஆங்காரக் குணத்தை ஓங்காரமாக்கும் செயலாக சேவல் கூவுகிறது என்ற பொருளில்
1.நம்மைக் காக்கும் சக்தியாக மாற்றி
2.அறிவின் ஞானத்தைப் பெருக்கும் வேலாயுதமாகப் பயன்படுத்தினால்
3.”உலகோதயம் நம் காலடியில்...!” என்ற பொருளை உணரலாம.