ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 16, 2019

வாஸ்து... நியுமராலஜி... நவரத்தின மாலை...! என்று நம் கஷ்டத்தைப் போக்க என்னென்னமோ செய்கிறோம்... அதிலுள்ள உண்மைகள் என்ன...?


அதிகாலையில் விழித்தவுடன் செய்யும் துருவ தியானத்தைக் கணவன் மனைவி அவசியம் செய்ய வேண்டும்.

எந்த மதங்களில் எடுத்துக் கொண்டாலும் காலையில் அந்த ஐந்து மணிக்குத்தான் எல்லாக் கோவிலிலும் மணி ஓசைகளை எழுப்புகின்றார்கள்.

மதங்கள் அனைத்தும் அரசர்களால் உருவாக்கப்பட்டது தான் அவன் ஞானிகள் சொன்ன உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டான்.
1.அரசனைப் போற்றும்படிச் செய்தான்.
2.அரசன் உருவாக்கிய தத்துவத்தைக் கடவுளாக்கினான்.
3.அவன் சொன்ன சட்ட திட்டங்களுக்கு மக்கள் எல்லோரும் போக வேண்டும்.
4.அவன் வகுத்த திட்டத்திற்கு மாறாகப் போனால் மதத்தின் அடிப்படையில் “தண்டனை...!” என்று கொடுக்கின்றான்.
5.கடவுள் சாட்சியாக என்று சொல்லி எல்லா மதத்திலும் இந்த நிலை தான்.

இந்த எண்ணத்தின் தன்மையை உருவாக்கும் பொழுது ஒவ்வொருவர் உடலிலும் இதுவே தான் கடவுளாகின்றது. இந்த எண்ணத்தின் தன்மையை வளர்த்துக் கொண்ட பின் எந்த மதத்தில் சிக்குகின்றோமோ
1.அந்த உணர்வின் தன்மைக்கு மாறுபட்டால் தெய்வம் நம்மைத் தண்டித்துவிடுமோ...! என்று
2.அச்சுறும் (பயம்) நிலையை மக்களுக்கு ஏற்படுத்திவிட்டார்கள்.

சாஸ்திரங்கள் என்று சொல்லிக் கொண்டு சில குடும்பங்களில் என்ன செய்கின்றோம்? ஆடி மாதம் கல்யாணம் செய்யக் கூடாது என்போம். ஆனால் ஆடி மாதம் கல்யாணம் செய்து “சந்தோஷமாக இருப்பவர்களும் இருக்கின்றார்கள்...!”

செய்யக் கூடாது...! என்று சொன்ன பிற்பாடு யாராவது செய்தால் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து “ஆடி மாதத்தில் போய்க் கல்யாணம் செய்கிறான் பார்...!” என்று பயமுறுத்துவார்கள்.

மதத்திற்குள் அவரவர்கள் சேர்த்துக் கொண்ட “இனம்... குலம்...” என்ற நிலையில் உள்ளவர்கள்
1.இப்படிச் செய்கிறான் பார்...! எல்லாம் சேர்ந்து சொல்லி
2.அவனை எழ முடியாதபடி அமுக்கி விடுகிறார்கள்

அட... நான் ஆடி மாததில் கல்யாணம் செய்தால் உங்களுக்கு என்னய்யா..? என்று கேட்டால் கேட்க மாட்டார்கள்...!

அடுத்து இப்பொழுது என்ன செய்கிறார்கள்..? வாஸ்து சாஸ்திரம் என்று சொல்லிக் கொண்டு இதையும் ஊடே கிளப்பி விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

உங்கள் வீட்டில் உள்ள இந்தச் சுவரில் குறை உள்ளது. இதை இடித்துத் தள்ளிவிட்டு அந்தச் சுவரை இத்தனை அடி தூரம் தள்ளி வைத்தால் “வாஸ்து சாஸ்திரப்படி உங்களுக்கு நல்லதாகும்...!” என்று சொல்கிறார்கள்.

சுவர் அந்த இடத்தில் இருப்பதால் தான் உங்களுக்கு எல்லாக் கஷ்டமும் வருகின்றது என்று சொல்லி அதற்குப் பரிகாரமாக சுவரை மாற்ற வேண்டும்...! என்று சொல்வார்கள்.

ஏனென்றால் கஷ்டத்தை நீக்கும் எண்ணத்தையும் உபாயத்தையும் எடுப்பதற்குப் பதிலாக “பரிகாரம்..!” என்ற பெயரில் இப்படிக் கொண்டு போகின்றார்கள்.
1.பரிகாரம் செய்துவிட்டோம்...
2.அதனால் நம் கஷ்டம் போகும்...! என்ற அந்த எண்ணத்தைக் கொண்டு வருவதற்கு இப்படி ஒரு செயல்...! (நன்றாக இருக்கும் சுவரை இடிக்க)

இன்னொன்றும் சொல்வார்கள். நியுமராலஜி...! உங்கள் பெயரில் ஒரு எழுத்தை மாற்றி வைத்தாலோ அல்லது ஒரு எழுத்தைக் கூட்டி வைத்தாலோ உங்கள் கஷ்டமெல்லாம் போய்விடும் என்பார்கள். அதைக் கேட்டுத் தன் பெயரை மாற்றி வைத்தவர்கள் ஏராளமாக உண்டு.

அடுத்து நவரத்தின மோதிரம்... நவரத்தின மாலை...! என்று அதை அணிந்தால் அதனால் உங்களுக்கு நல்லது என்பார்கள்.

ஒன்பது கோளின் உணர்வுகள் தான் மனிதனுக்குள் எண்ணங்களாக வருகின்றது. ஆனால்
1.நாம் அந்த அருள் ஒளி பெற்ற அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும்.
2.இதைச் சேர்ப்பதில்லை. சேர்க்கச் சொல்லவும் இல்லை.

சேர்க்க வேண்டியதைச் சேர்க்காமல் இந்த உடல் இச்சைக்குத்தான் சேர்த்துக் கொண்டிருக்கின்றோம்.
1.இப்படிச் செய்தால் தொழில் வளரும்...
2.இப்படிச் செய்தால் சொத்து வரும்... என்ற இந்த ஆசையில் தான்
3.ஒவ்வொன்றாகச் செய்து “ஏமாந்து கொண்டிருக்கின்றோம்...!”

அப்படித் தொழில் செய்த... சொத்தைச் சேர்த்த... “எத்தனை பேர் இந்த உடலுடன் இருந்தார்கள்...? இருக்கின்றார்கள்..? சொல்லுங்கள் பார்க்கலாம்...!

அந்த மெய் ஞானிகளும் மகரிஷிகளும் பல ஆற்றல் மிக்க சக்திகளைப் பெற்றாலும் இந்த உடலுடன் அவர்கள் யாராவது இந்தப் பூமியில் இருக்கின்றார்களா... என்றால் இல்லை.
1.தன் உணர்வுகளை எல்லாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றி விட்டு
2.ஒளியின் சரீரமாகி விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக
3.அங்கே இருக்கின்றார்கள். இங்கே இல்லை...!

இவ்வளவு சொன்னதும் என்ன செய்வார்கள்...? கண்டார் விண்டதில்லை.. விண்டார் கண்டதில்லை...! என்று இதை மட்டும் சொல்லி விடுவார்கள்.

ஆனால் கண்டவன் என்ன செய்கின்றான்..?
1.கண்ட நிலையில் அங்கே விண்ணுக்குப் போகின்றான்.
2.மறுபடியும் இங்கே எதற்காக வருகின்றான்...? வரவே மாட்டான்.

விண்டவன் கண்டதில்லை...! அப்படி என்றால் அவனவன் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டே இருப்பான். என்ன... ஏது...? என்று திரும்பிப் பார்க்க மாட்டான். (காணுவதில்லை)

கடவுளைப் பார்த்தவன் திரும்ப வர மாட்டான்... பார்க்காமல் சொல்லிக் கொண்டிருக்கின்றான்...! என்று அவரவர்களுக்குத் தக்கவாறு கண்டார் விண்டதில்லை விண்டவன் கண்டதில்லை என்று சொல்வார்கள்.

அந்த மெய் ஞானி அந்தப் பழமொழியைச் (மெய்யை) சொன்னான் என்றால் இவர்கள் இஷ்டத்திற்கு இங்கே விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டுள்ளார்கள். அந்த அர்த்தத்தைப் பார்த்தோம் என்றால் அனர்த்தமாகிவிடும்.

ஆனால் அந்த மெய் ஞானிகள் விண்டது எது...?
தீமைகளை வென்றதை...!

கண்டது எது...? அந்த அருள் ஒளியை.
அதைக் கண்ட பின் இதை விண்டுவிடுகின்றது.

அவன் (ஞானிகள்) அதைப் பெற்று அங்கே சென்றுவிட்டான். நாம் செல்ல வேண்டியது அங்கே தான்...! இங்கேயே இருப்பதற்காக நாம் வாழவில்லை..! என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.