கேள்வி:-
இந்தப் பூமியின் ஜீவ நாடியான உலோகத்தை அழித்து வாழும் மனிதனின் ஞானம் அந்த உலோகத்தின் பெருக்கத்தை வளர்க்கும் மெய் அறிவை மெய் ஞானத்தில் கூட்டினான் என்றால் இந்தப் பூமியையே ஆட்சி செலுத்தும் “உயர் ஞானியாக” ஆகலாம்.
அப்படி என்றால் உலோகத்தின் பெருக்கத்தை வளர்க்கும் மெய் அறிவை மெய் ஞானத்தில் எப்படிக் கூட்டுவது..? விளக்கம் தேவை
பதில்:-
மாமகரிஷி ஈஸ்வரபட்டர் சொன்னபடி பல நூல்களை ஒன்றாக ஆக்கி ஒரு கயிறாக
முறுக்கப்படும் பொழுது அது திடமாகின்றது. வலு கூடுகின்றது. அதிக எடையுள்ள எதையும் அந்தக்
கயிறால் தூக்கவும் முடிகிறது.
அது போல் தான் ஒரு பொருளை மறைமுகமாக
1.வேக வைத்து அல்லது எரித்து அதிலுள்ள நீர்ச் சத்தெல்லாம் ஆவியாக
ஆன பின்
2.எதை வேக வைத்தோமோ அது திடம் கொண்டதாக உருவாகின்றது.
விஞ்ஞானிகள் பூமிக்குள் இருக்கும் அந்தந்த உலோகப் படிவங்களை எடுத்து
இந்த முறைப்படித்தான் பிரித்து எடுத்து தனித் தனியாக பல வகையான உபயோகங்களுக்கு இன்று
பயன்படுத்துகின்றார்கள்.
பண்டைய காலங்களில் உபயோகிப்பட்ட உலோகங்களை எடுத்துக் கொண்டால் இரும்பு
தாமிரம் தங்கம் வெள்ளி இதைப் போல இன்னும் சிலதுகளைத்தான் பயன்படுத்தினார்கள்.
ஆனால் இன்று அதைக் காட்டிலும் ஏழு மடங்கு எட்டு மடங்கு அதிக அளவில்
தனிமங்களைக் கண்டு அதைத் தனித்துப் பிரிக்கும் நிலையும் மற்றதுடன் இணைத்துக் கலப்பு
உலோகங்களாகவும் பல்வேறு பயன்பாட்டிற்காகச் செயல்படுத்துகின்றார்கள்.
இன்று நாம் உபயோகிக்கும் ஒரு ஸ்மார்ட் ஃபோனில் (SMART PHONE) பல
உலோகங்களும் தனிமங்களும் (நூறுக்கு மேல்) உள்ளது. அதற்குள் அத்தகைய நுண்ணிய நிலைகள்
இருப்பதால் தான் செயற்கைக் கோள் வரைக்கும் அதனின் அலைக்கற்றைகள் சென்று ஒரு இடத்திலிருந்தது
உலகம் முழுவதும் பரப்புவதை ஒலி ஒளி என்ற நிலையில் இழுத்துக் கவர முடிகின்றது. கண்ணை
மூடித் திறப்பதற்குள் நமக்கு முன்னாடி அதைக் காட்டுகின்றது.
நாம் தட்டெழுத்தால் கொடுக்கும் அழுத்தத்திற்கொப்ப அந்த அதிர்வுகள்
(ELECTRONIC PULSES) இயங்கி காற்றலைகளுக்குள் வெகு தொலைவுக்குள்ளும் ஊடுருவிச் சென்று
அதைக் கவர்ந்து படமாகவும் செய்திகளாகவும் காட்டுகின்றது.
1.இன்றைய விஞ்ஞானத்தில் உலோகங்களையும் தனிமங்களையும் புறத்திலே
2.இத்தகைய கருவிகளிலே சேர்த்துப் பயன்படுத்தும் நிலைக்குத்தான் வந்திருக்கின்றார்களே
தவிர
3.அகத்திற்குள் சேர்க்கும் வழி தெரியவில்லை. (அதனின் முக்கியத்துவமே
தெரியவில்லை)
அகத்திற்குள் சேர்க்கும் வழி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள
வேண்டும்.
நம் உயிர் ஒரு நட்சத்திரம் தான். கோள் தன்னுடைய வளர்ச்சியில் தான் நட்சத்திரமக மாறுகின்றது. கோள்களிலே உயிரணுக்கள்
உயிரினங்களும் இருக்கும். நட்சத்திரங்களில் உயிரணுக்கள் இல்லை உயிரினங்கள் அங்கே வாழவும்
முடியாது.
1.ஏனென்றால் நட்சத்திரங்கள் அதீத கதிரியக்கச் சக்தி கொண்டது.
2.உலோகத்தின் வீரிய வளர்ச்சி தான் கதிரியக்கம். (உலோகங்களே அங்கே
அமிலத் தன்மையாகவும் ஆவிகளாகவும் இருக்கும்)
நட்சத்திரத்திலிருந்து வரும் அத்தகைய கதிரியக்கங்கள் தான் பூமிக்குள்ளும்
சரி மற்ற கோள்களிலும் சரி அங்கே விளையும் கல் மண் தாவரம் உலோகங்கள் எல்லாமே வளர்வதற்குக்
காரணம்.
பூமிக்குள் மண்ணிலே விளையும் தாவரங்களைச் சமைத்து நாம் உணவாக உட்கொள்கிறோம்.
மற்றவைகளை நம் வசதிக்கு வீடாகவும் தொழிலுக்காகவும் சுகத்திற்காகவும் பயன்படுத்துகின்றோம்.
ஆக மொத்தம் பூமிக்குள் விளைந்ததைத்தான் எடுத்துப் புறத்திலே உடல்
வாழ்க்கைக்குப் பயன்படுத்தப் பழகியுள்ளோம்.
1.ஆனால் மெய் ஞானிகள் அந்த நட்சத்திரத்திலிருந்து வரும் கதிரியக்கச்
சக்திகளை நேரடியாக எடுத்து
2.தங்கள் உயிரிலே இணைத்துச் சக்தி வாய்ந்தவர்களாக ஒளியுடன் ஒளியாக
ஆனவர்கள்.
3.என்றுமே அழியாத நிலைகளில் வாழ்பவர்கள்...! (உடலுடன் அல்ல – சூட்சம
நிலையில் ஒளியாக)
இந்த உடல் வாழ்க்கைக்கும் உடலுக்கும் தான் நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோமே
தவிர
1.உடலையே உருவாக்கி
2.நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் உயிரைப் பற்றிக் கொஞ்சம் கூட எண்ணுவதில்லை.
3.அதனின் வளர்ச்சிக்காக “எதையுமே...!” செய்வதில்லை.
உடலைக் காக்கும் எண்ணத்திற்குப் பதிலாக உயிருடன் ஒன்றிடும் நிலையாக
உயிரைப் போன்றே அழியாத நிலைகள் பெறவேண்டும் என்ற எண்ணத்தை முன்னணியில் வைத்தால்
1.நாம் உடலுக்குக் கொடுக்கும் உணவைக் காட்டிலும்
2.அந்த நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் கதிரியக்கச் சக்திகளை உயிருக்கு
உணவாகக் கொடுக்கலாம்.
ஏனென்றால் இருபத்தியேழு நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து மொத்தமாகக்
கலவையாக்கியது தான் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஒரு அணு என்பது.
ஆதியிலே அந்தச் சக்தியை எடுத்துத்தான் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக
ஆனான். அதனின் வளர்ச்சியில் நம் சூரியக் குடும்பத்தைத் தாண்டி 2000 சூரியக் குடும்பத்தையும்
தாண்டி அகண்ட அண்டத்திலிருப்பதையும் எதுவாக இருந்தாலும் அதைத் தனக்குச் சாதகப்படுத்தும்
சக்தியாக அது வளர்ந்து கொண்டேயுள்ளது.
அந்தச் சக்தியைப் பெற நாம் இச்சைப்பட வேண்டும். அதை ஒவ்வொரு நொடிப்
பொழுதும் நம் உயிருக்குள் இணைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
அதை இணைக்க இணைக்க புருவ மத்தியில் ஒளிக்கற்றைகள் இணைவதையும் பளீர்...
என்று வெளிப்படுவதையும் காணலாம். நம்மிடம் எது மோதினாலும் அதுவும் ஒளியாகவே மாறத் தொடங்கும்.
(என்னுடைய அனுபவம் அது தான்)
1.நம் சொல் ஆற்றல்மிக்கதாக ஆகும்.
2.நம் செயல் வலு கொண்டதாக இருக்கும்.
3.புறத்தின் செயலாக அல்ல. அகத்திலே எண்ணினாலே புறத்திலே அதனின் இயக்கம்
நடக்கும்.
விழித்திருந்து விஞ்ஞானத்தால் செய்ய முடியாததை... ஆன்ம விழிப்பாக...
உயிருடன் ஒன்றி விண்ணின் ஆற்றலைச் சுவாசித்து.. மிக மிக நுண்ணிய நிலைகளில் செயல்படக்
கூடிய சூட்சம செயலே இது.
இது சகலத்திற்கும் பொருந்தும். இதிலே முதிர்ந்தவர்கள் தான் அந்த
மெய் ஞானிகளும்... மகரிஷிகளும்...!
பூமிக்குள் விளைந்ததைச் சுவாசிக்காமல் விண்ணின் ஆற்றலைச் சுவாசித்து
உயிருடன் ஒன்றி ஒளியாகும் மகத்துவமே உயர் ஞானியாக அகிலத்தை ஆட்சி செய்யும் நிலை. மனிதப்
பிறப்பின் பலனே அது தான்...!
உருவான சக்தியைக் காக்கவும் உருவான சக்தியை அனுபவிப்பதையும் விடுத்துவிட்டு
1.உருவாக்கும் மூல சக்தியை எடுத்து
2.நமக்குள் இருக்கும் உயிரன மூல சக்திக்குள் அதைக் கூட்டிக் கொண்டு
3.படைப்பின் படைப்பைப் படைக்கப்பட்டவனின் படைப்பாக்க வேண்டும்.
4.படைத்ததின் பொருளும் அதுவே...! மீண்டும் மீண்டும் படைக்கப்படுவதின்
பொருளும் அதுவே.
சூனியமான நிலையில் உருவான நிலைகள் மீண்டும் சூனியமாகாமல்
பரம்பொருளாக...
நிலைத்த பொருளாக...
ஜீவிக்கும் பொருளாக
ஜீவனூட்டும் பொருளாக வளர்ச்சிக்கு வருதல் வேண்டும்.