ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 23, 2019

போகநாதரின் பூர்வாங்கத்தையும் அவர் ஞானம் பெற்றதையும் காலிங்கநாதர் கஞ்ச மலையில் செயல்பட்ட சில அற்புதங்களையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


கசாங் என்ற நாமம் கொண்ட ஒருவர் சீனாவில் மஞ்சள் நதி பாயும் பாதையில் ஒரு பள்ளத்தாக்கில் ஒரு உயிர் பிரியும் துறவிக்கு உதவி செய்கிறார். அவருடைய ஆசியும் உபதேசமும் கிடைத்ததும் ஞானியாகும் வாய்ப்பைப் பெற்று மூலிகை வைத்திய நிபுணராகின்றார்.

சில சித்துகள் செய்யும் பொழுது அந்த நாட்டு அரசனின் கோபத்திற்கு ஆளாகித் தப்பிக் காட்டுக்குள் மறைந்து வாழ்கின்றார். சில அபூர்வ சக்திகளும் பெறுகின்றார்,

பின்னர் திபெத்தில் துறவிகளிடம் கலைகள் பல பயின்று இந்திய நாட்டுக்குள் நுழைந்து தெற்கே வருகின்றார். காளிங்கராயரிடம் தொடர்பு ஏற்பட்டதும் அவரையே குருவாக ஏற்கிறார்.

காளிங்கராயரிடம் உபதேசம் பெற்று வாழ்ந்து வரும் சமயம் கஞ்ச மலைக்கு (சேலம் அருகில்) வருகின்றார்கள். அந்த மலையின் மூலிகை விசேஷ குணத்தினால் இளமை பெறும் வாய்ப்பு பெற்று அதன் தொடரில் கஞ்ச மலையில் உள்ள காந்தப் பாறையில் இருவரும் தியானத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

போகரின் (கசாங்) அழகிய தோற்றம் கண்டு அழகன் என்ற பொருளில் முருகா என்று அழைக்கும் குரல் கேட்டு அதைக் குரு தனக்குக் கொடுத்த அருள் வாக்காக ஏற்று அதனின் ஈர்ப்புத் தொடரிலேயே ஓம் முருகா என்ற நிலையில் உணர்வைச் செலுத்துகின்றார் போகர்,

அதன் பின் வாழ்க்கைச் சக்கரம் என்ற சூழலில் அகப்படும் வாய்ப்பாக அமையும் தருவாயில் குரு குறிப்பால் உணர்ந்து போகருக்கு விடை கொடுத்து அனுப்பிவிடுகின்றார்.

1.பிறவியின் பயனை எப்படி அடைவது...? என்ற நிலையை உணர்த்தி
2.அதன் வழியில் செயல்பட வேண்டும்...? என்பதை சூசகமாக உணர்த்தி
3.இந்தச் சரீரத்தையே காயகல்பமாக்கிப் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்று போகருக்கு ஆசி கூறுகின்றார் காளிங்கநாதர்.

காளிங்கநாதர் தான் பறக்கும் நிலை பெற்ற சித்து நிலையில்
1.சரீரத்தையே இரும்புக் கல் தாதுவாக்கி
2.விண்ணின் ஆற்றலைப் பெற்று உயிராத்மாவை ஒளியாக மாற்றி மண்டலமாகச் சுழலச் செய்து
3.இன்றும் பேரொளியாக வாழ்ந்து கொண்டுள்ளார்.

போகர் தனக்குகந்த சீடர்களைத் தேர்ந்தெடுத்துக் கடுமையான தியானப் பயிற்சிகள் மூலம் அவர்களைப் பக்குவப்படுத்துகின்றார். அவர்களும் அதில் தேர்ந்து வளர்ந்து வருகின்றார்கள். அதிலே முதன்மை பெறுகின்றார் புலிப்பாணி.

அப்பொழுது உண்டாக்கப்பட்டதே தந்த வைத்திய முறையும் நாடி ஜோதிடமும். அப்பொழுது திடீரென்று போகரைக் காணாமல் அவர் சென்ற இடத்தை அறியாமல் சீடர்கள் திகைக்கின்றனர்.

புலிப்பாணியார் தன்னுடைய ஞானத்தால் போகர் சீனாவில் இருப்பபதை அறிந்து அங்கு சென்று அவரை அழைத்து வருகின்றார். நேராக இருவரும் பழனிக்கு வருகின்றார்கள்.

போகர் தான் சீன சென்ற நிலையில் தன்னுடைய தவ சக்தியை இழந்ததாகக் கூறி மீண்டும் அந்தத் தவத்தினை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.

அதற்குக் குரு உபதேசம் அவசியம் என்று உணர்ந்து கஞ்ச மலைக்குச் சென்று தன் குருவாகிய காளாஞ்சி நாதரைத் தேடுகின்றார்.
1.அவர் தன் சரீரத்தையே கல்லாக்கி மண்டல சுழற்சியில் செயல்படும் விதம் அறிந்து
2.அவர் கூறிய வழியிலேயே அவரை விஞ்சிக் காட்ட வேண்டும் என்ற மன உறுதியுடன்
3.பழனிக்கு வந்து தன் சீடராகிய புலிப்பாணியையே குருவாக ஏற்கின்றார்.

சிஷ்யன் எப்படிக் குருவாம முடியும்...! என்று அவர் சங்கடப்படுகின்றார். போகர் அவரைத் தேற்றி அதற்குரிய வழிகளைக் கூறுகின்றார். 

போகர் தன் கையில் உள்ள தண்டத்தை ஒரு பீடத்தில் வைத்து அந்தத் தண்டத்திலே சூட்சமமாகப் புலிப்பாணி இருந்து குரு பீடம் ஏற்று உபதேசிக்கும்படி வேண்டுகிறார்.

புலிப்பாணி வான இயலின் தத்துவத்தைப் போகருக்கு அருளுகின்றார். குருவிற்குச் சிஷ்யன் உபதேசம் செய்ததால் “தகப்பன் சுவாமி...! என்ற பெயர் நிலைக்கின்றது/

தண்டத்திலிருந்து உபதேசம் பெற்று தன் சக்திக்கு வலு கூட்டியதால் போகநாதர் “தண்டபாணி...” என்ற நாமம் பெறுகின்றார். பின்னர் தண்டபாணிக்குச் சிலை செய்ய எல்லோரும் முடிவெடுத்துப் பழனியில் ஒன்றுகூடி ஞான திருஷ்டியினால் நவபாஷாண மூலிகைகளைத் தேடி உலகெங்கும் பறக்கும் சக்தியினால் சென்று தேடிக் கொண்டு வருகின்றனர்.

கல்வம் (மருந்து அரைக்கும் ஒரு குழிக்கல்) என்ற கருவியில் அதை இட்டு அரைத்து காற்றில் காயும் முன் அதைச் சிலையாக உருவாக்குகின்றார்கள்.

மீன் செதில் போல் முருகன் சிலை உருவெடுக்கின்றது. அதைப் பராமரிக்கும் பணி புலிப்பாணியாருக்குக் கொடுக்கப்படுகின்றது.

போகர் அதன் பின் அரபு நாடுகளுக்குச் சென்று அங்கே சில வேலைகளைச் செய்கின்றார். அங்கே உருவமற்ற இறைவனாகப் படைத்தார்.

ஆயிரம் ஜோதிலிங்கம் என்றும் சுவாசமாகிய நிலையைக் குறிக்க யானையின் தலை மீது வீரியத் தன்மை ஏற்படுத்தப்பட்டு ஒரு சக்தி பீடத்தின் மேல் அமைத்தார்.

அதை அடையாளப்படுத்தும் விதமாக “சொர்க்கத்தின் கல்...” என்று பெயர் வைத்து அந்தக் கல்லில் நேர் மையத்தில் நடுப்பாகத்திலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் அமைப்பை உண்டு பண்ணி ஜோதிலிங்கத்தை ஸ்தாபித்தார் போகர்.

பழனி மலை முருகன் போல் ஐவர் மலையில் கோரக்கர் கோரக்கும்பர் கோரக்நாத் என்று அழைக்கப்படும் ஒரு ரிஷியின் தலைமையில் புலிப்பாணியால் முருகன் சிலை செய்யப்படுகின்றது. சிலை பூர்த்தியாகும் நேரம் போகரும் வருகின்றார்.

கோரக்நாத்தைப் போகர் இலங்கையில் உள்ள கதிர்காமம் சென்று வரப் பணிக்கின்றார். அங்கே உள்ள பூமியின் பொக்கிஷங்கள் ஈர்ப்பின் செயல் வளர்ச்சி முதலியவற்றை அறிகின்றார் அவர்.

பின்னர் போகர் தான் “நிர்விகல்ப சமாதி...!” நிலைக்குத் தன்னைத் தயார்படுத்துகின்றார். கோரக்நாத் ஐவர் மலை முருகன் சிலை ரகசியம் அறிந்து பிருகு மகரிஷியின் வழித் தொடரால் தான் அது ஸ்தாபிதம் செய்யப்படும் நிலை தெரிந்து கதிரிக்குச் சென்று போகர் போல் அவரும் சமாதி நிலை கொள்கின்றார்.