ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 2, 2019

நாகரத்தினத்திற்கும் வைரத்திற்கும் உண்டான ஜொலிப்பும் “நஞ்சை ஒடுக்கி நீல நிற ஜொலிப்பாக வெளிப்படுத்தும் துருவ நட்சத்திரத்தின் இயல்பும்...!”


ஒரு நல்ல பாம்பு தன் உடலில் உருவான நஞ்சை ஒரு எலி மேல் பாய்ச்சி அதை உணவாக எடுத்துக் கொள்கிறது. எலியின் உணர்வை இயக்குவதும் அந்த நஞ்சு தான்.

எலியின் உடலில் உள்ள நஞ்சின் தன்மை வேறு. அதே போல தவளையின் உணர்வுகள் அதில் உள்ள விஷங்கள் வேறு. நல்ல பாம்பு தவளை மேல் தன் விஷத்தைப் பாயச்சி அதையும் உணவாக உட்கொள்கின்றது.

பாம்பு தனக்குள் உருவாகும் விஷத்தைப் பல உயிரினங்களின் பாய்ச்சிப் பல விதமான விஷங்கள் கொண்ட உடல்களை அந்தப் பாம்பு விழுங்குகிறது என்று வைத்துக் கொள்வோம்.

பலதரப்பட்ட உயிரினங்களைப் பாம்பு உணவாக உட்கொள்வதால் பல விஷத்தின் தன்மை அந்தப் பாம்பிற்குள் கலக்கப்பட்டு அது பல விதமான உணர்வின் வர்ணங்களாக இருக்கும்.
1.நாகரத்தினத்தை எடுத்துக் கொண்டால் அதிலே பல வர்ணங்கள் இருக்கும்.
2.ஆனால் வைரத்தின் நிறங்களோ நீலம் கலந்த நிலையில் வரும். அதனுடைய மின்னணு ஒளியின் தன்மை கூடும்.
3.பாம்பு விஷத்தைப் பாயச்சி பல உணர்வுகளை எடுத்ததால் நாகரத்தினத்தில் பல பல நிறங்கள் வரும்.
4.இதுதான் நாகரத்தினத்திற்கும் வைரத்திற்கும் உண்டான வித்தியாசம்.

பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சிப் பல உயிரினங்களின் விஷங்களைத் தனக்குள் எடுக்கும் பொழுது அந்த விஷங்கள் உறைந்து விடுகிறது. ஆனால் வளர்ச்சி அற்றது. அது முழுமை அடைந்து விட்டால் அதிலே விளைந்த உணர்வுகள் அந்த ஒளியைத் தான் ஊட்டும்.

1.அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியான நிலையில்
2.பல விதமான கோணங்களில் விஷத்தை ஒடுக்கிய உணர்வுகளைப் பெற்றதால்
3.வைரத்தைப் போன்ற அந்த நீலத்தின் தொடர் கொண்டு நீல நிறமாக ஒளிச் சுடராகக் காட்டுகிறது.

உதாரணமாக நெருப்பு எரியும் போது அது நீலநிறமாக இருந்தால் தான் அந்த நெருப்பிற்கே வீரிய சக்தி உண்டு. சிவப்பாகவோ மஞ்சளாகவோ நிறம் இருந்தால் அதற்கு அவ்வளவாக வலு இல்லை.

நீலம் கலந்த ஒளி வரப்போகும் போது சூடு அதிகமாகும். ஏனென்றால் அந்த உணர்வின் தன்மை குவிக்கப்பட்டு வீரியத் தன்மை பெறுகிறது.

இதைப் போலத்தான் பல கோடிச் சரீரங்களிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமாக வளர்ச்சியாகி இயற்கையில் விளைந்த விஷத்தை ஒடுக்கி ஒடுக்கித் தன் வலுவான நிலைகள் பெற்றவன்.

தன் உடலில் உள்ள அணுக்களை எல்லாம் அத்தகைய வலுவான ஆற்றல்களைப்  பாய்ச்சிக் கொண்டவன். திருமணமான பின் அகஸ்தியன் தான் பெற்ற சக்தி அனைத்தையும் தன் மனைவிக்குள் பாய்ச்சினான்.

அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து இரு மனமும் ஒரு மனமாகி இரு உணர்வும் ஒரு உணர்வாகி இரு உயிரும் ஒரு உயிராக ஒன்றென இணைத்துக் கொண்டவர்கள்,

இருந்தாலும் ஒரு மனிதன் தனித்த நிலைகள் கொண்டு எல்லாவற்றையும் வெல்வேன் என்ற உணர்வைக் கொண்டு வளர்ந்து வந்தாலும் பாம்புக்குள் வீரிய சக்தி எப்படி நாகரத்தினமாக மாறுகின்றதோ இதைப்போல தனித் தன்மை கொண்டு வளர்ச்சி பெறும் ஜீவனற்ற கல்லாகத் தான் இருக்கும்.

அதாவது கடும் தவம் என்ற நிலைகள் கொண்டு முனி என்ற நிலையில் எதையும் தாக்கிடும் உணர்வாகத் தான் வரும்.
1.அப்படிப்பட்ட உணர்வைத் தான் பெற முடியுமே தவிர
2.இரண்டறக் கலந்து உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் சக்தி பெறச் செய்யாது.

ஆகவே ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் பேரருள் பேரொளியைக் கவர்ந்து “கணவன் தன் மனைவி பெற வேண்டும்... என்றும் மனைவி தன் கணவன் பெற வேண்டும் என்றும்...!”  இரு உணர்வும் ஒன்று சேர்த்து விட்டால்
1.துடிப்பு கொண்ட ஜீவனுள்ள உணர்வின் தன்மையாகப் பேரொளியாக வருகிறது.
2.திடப் பொருளாக மாறாது. பேரருளின் சேமிப்பாக ஒளி அலைகளாகப் பேரொளியாக மாறும்.
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் அலைகள் இளம் நீல நிறமாக இருக்கும்.
4.தியானம் செய்பவர்கள் அதைக் கண்களால் நிச்சயம் காண முடியும்.