கேள்வி:-
மனம் ஏதாவது ஒரு வகையில் அலை பாய வைத்துத் தியானம் செய்ய முடியாது வைத்து விடுகிறது.
நினைவு மட்டும் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்குகிறது. ஆனால் பிடி கிடைக்காமல்
நிறையத் தவிக்கிறேன். என்ன செய்ய வேண்டும் ஐயா…? ஒரு சில காரணத்தால் சஞ்சலத்தில் மனம்
உள்ளது…!
பதில்:-
சூடாக இருக்கும் காபியையோ டீயையோ அப்படியே குடிக்க முடியாது. ஆற வைத்த பின்
தான் குடிக்க முடியும். அப்படியே குடித்தால் வாய் தான் வெந்து போகும். அது போல் தான்
உங்கள் கேள்வியே உள்ளது.
எந்த ஒரு சிக்கலாக இருந்தாலும் அதை நேரடியாக நாம் அணுகினால் அதனுடைய பாதிப்பை
நம் உயிர் உடனடியாக உணர்த்திக் காட்டும்.
1.அது வெறும் உணர்ச்சி தான்.
2.நிஜம் இல்லை.
ஏனென்றால் நம் உயிர் நுகர்ந்தத்தைத்தான் இயக்கும். உயிரிலே படவில்லை என்றால்
எதுவுமே இயக்காது… எந்த ஒரு உணர்ச்சியும் வராது…!
உதாரணமாக நீங்கள் போட்ட காபியில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பைப் போட்டு விட்டால்
அப்படியே சாப்பிடுவீர்களா…? இல்லையே…!
அடடா… தெரியாமல் போட்டு விட்டேன் போல் தெரிகிறது… என்று சொல்லி விட்டு அதைக்
கீழே ஊற்றி விட்டு மீண்டும் சரியானபடி சர்க்கரையைப் போட்டு நல்லதைத் தான் நீங்கள் குடிப்பீர்கள்.
நீங்கள் மட்டுமல்ல… யாராக இருந்தாலும் அதைத்தான் செய்வோம். சரியில்லை என்றால்
சரியானது வேண்டும்… என்று தான் விரும்புவோமே தவிர பரவாயில்லை..! இன்று ஒரு நாள் சர்க்கரைக்குப்
பதிலாக உப்புப் போட்ட காபியைக் குடிப்போம் என்று யாரும் குடிக்க மாட்டோம்.
ஆக மொத்தம் இந்த வாழ்க்கையில் எது வந்தாலும் நாம் எண்ண வேண்டியது
1.எனக்கு நல்லது வேண்டும்
2.எனக்கு நல்லது நடக்க வேண்டும்
3.எனக்கு நல்லதாக ஆக வேண்டும் என்ற நிலையில்
4.பிடிவாதமாக… நல்லது வேண்டும்…! நல்லது வேண்டும்…! நல்லது வேண்டும்..! நல்லது
வேண்டும்…! என்று
5.புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் அழுத்தமாகச் சொல்லிக் கொண்டே இருக்க
வேண்டும்
6.மேலும் நல்லது நடக்கும் வரை… “உன்னை விடவே மாட்டேன்..! என்று உயிரிடம் நினைவைச்
செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும் (இது தான் நீங்கள் பிடிக்க வேண்டிய “பிடி…!”)
7.இமயமலையில் செய்யும் தவம் என்பது இது தான் அதாவது இமைகளுக்கு மத்தியில் ஒற்றைக்
காலில் நின்று நல்லதுக்காகச் செய்யும் தவம்…!
இதற்குப் பிறகு நினைவை விண்ணிலே செலுத்தி எனக்கு வந்த இதே சிக்கல் ஒரு மெய்
ஞானிக்கு வந்தால்
1.அவர் எப்படி இதிலிருந்து விடுபடுவாரோ…?
2.இதை நல்லதாக எப்படி மாற்றுவாரோ
3.அவர்களைப் போல் நானும் இதிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில்
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று சுவாசிக்க வேண்டும்.
பின் நம்மை இயக்கும் உயிரான ஈசனிடம் சொல்லி விட்டோம்… நமக்கு வழிகாட்டும் மகரிஷிகளிடமும்
சொல்லி விட்டோம்… இந்தப் பிரச்சனை நம் பிரச்சனை இல்லை. நம் பிரச்சனை இனி அவர்கள் பிரச்சனை
ஆகி விட்டது.
நல்லதாக வேண்டும் என்று வலிமையாக இரண்டு பேரிடமும் சொல்லி விட்டோம். இனி நாம்
“அடுத்த வேலையைப் பார்ப்போம்…!” என்று அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தாலே போதும்.
சிறிது நேரத்தில் நீங்கள் எண்ணிய எண்ணங்களுக்கொப்ப உங்களுக்கு ஏற்றுக் கொள்ளும்
நல்ல பதிலாக மிகத் தெளிவாகக் கிடைக்கும்.
1.சிக்கலை ஏற்படுத்தியவர்கள் விலகிச் செல்வார்கள்.
2.அல்லது நீங்கள் பயந்தது போல் அந்தக் கெட்டது நடக்காது. மாறாக எதிர்பாராதபடி
நல்லதாகும்
3.அல்லது அந்தச் சிக்கலுக்கு என்ன செய்ய வேண்டும்..? யாரை அணுக வேண்டும்..?
இன்னாரிடம் நேரடியாக நாம் பேசுவோம் அப்பொழுது கண்டிப்பாக நல்லதாகும்…!
4.இப்படி அடுக்கடுக்காக உங்களுக்குள் புதுப் புது நல்ல உணர்வுகளாக உற்சாகம்
ஊட்டும் நிலைகளாக எண்ணங்கள் தோன்றும்
5.அதன் படி (முதலில் சொன்னபடி) உயிரிடமும் மகரிஷிகளிடமும் சொல்லி இந்த மாதிரிச்
செய்யப் போகின்றேன்.. எனக்கு நல்லதாக வேண்டும் என்று மீண்டும் மீண்டும் எண்ணத்தைச்
செலுத்தினீர்கள் என்றால்
6.மனம் அலை பாயாது… தியானம் வலுவாகும்… நல்லதைச் செய்ய ஆற்றலும் சக்தியும் அதிகமாகும்…!
7.சஞ்சலத்திற்குப் பதில் இப்படித்தான் செய்ய வேண்டும்… இது கண்டிப்பாக நல்லதாகும்…!
என்று ஒரு புயல் போல் அந்த எண்ணம் உறுதியாகும்.
8.நன்மைகள் செய்யத் துணிவு தன்னாலே உங்களுக்கு வரும்.
9.நல்லது உங்களைத் தேடி வரும்… நீங்கள் தேட வேண்டியதில்லை…!
என்னுடைய அனுபவம் இது தான்…!