ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 15, 2019

நாம் நினைக்காமலேயே எண்ணங்களும் உணர்ச்சிகளும் நமக்குள் எப்படித் தோன்றுகிறது...?


ஒவ்வொரு நொடியிலும் நாம் ஒவ்வொருவரும் எண்ணிய எண்ணங்களையும் பேசிய உணர்வலைகளையும் வெளிப்படுத்தும் மூச்சலைகளும் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கவர்ந்து (மின் காந்த அலைகள்) வைத்திருக்கின்றது. இங்கே நமக்கு முன்னாடி அலைகளாகப் பரவி உள்ளது.

அதே போல செடி கொடிகளிலிலிருந்து வெளிப்படும் சத்துக்களையும் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துள்ளது. அந்தந்தச் செடியில் விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் நிலத்தின் தன்மை கொண்டு மீண்டும் தன் சத்தை எடுத்துத் தன்னிச்சையாக அந்தச் செடிகள் வளரும்.
 
இதே மாதிரி நம் உடல்களிலும் எல்லாக் குணங்களின் சக்திகளும் இருக்கின்றது. சூரியனின் காந்த சக்தியும் அதைக் கவர்ந்து வைத்திருக்கின்றது,

உதாரணமாக ஒரு வேதனைப்படும் உணர்வு நமக்குள் வந்து வித்தாகி விட்டால்
1.உடனே அந்த உணர்ச்சியைத் தூண்டும்.
2.அது (வித்து) எல்லாம் நம் இரத்த நாளங்களில் தான் குடி கொண்டு இருக்கும்.
3.எப்படி இந்தக் காற்று மண்டலத்திலிருந்து செடி கொடிகள் அதனதன் சத்தை எடுக்கின்றதோ
4.அதே போல நம் உடலிலிருந்து நுகரும் பொழுது அந்த உணர்வின் அலைகள் நமக்குள் வருகின்றது.
5.உடலுக்குள் வந்த பின் 48 நாளுக்குள் கருவாகி முட்டையாகி வெடித்து... “அணுவாக” முழுமை அடைந்து விடுகின்றது.

நம் உடல் முழுவதும் அந்த அணு சுற்றப்படும் பொழுது அந்தந்த உறுப்புகளில் போய் ஒட்டிக் கொள்கின்றது. அணுவான பின் தன் உணர்ச்சியைத் தூண்டுகிறது.
1.இரத்தத்தின் வழி கூடி நம் சிறு மூளைக்கு அந்த உணர்ச்சிகள் எட்டுகின்றது.
2.தன் பசிக்குச் சாப்பாடு கேட்கின்றது....!

அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் நம் உயிர் என்ன செய்யும்...? சும்மாவா இருக்கும்...!
1.நம் கண் காது மூக்குக்கு ஆணையிடும்.
2.எந்த மனித உடலிலிருந்து விளைந்து வந்ததோ இங்கே இழுக்கும்.

சுவாசித்து நம் உயிரிலே பட்ட பின் அந்த மனிதனின் எண்ணங்கள் நமக்குள் வரும்.
1.பாவிப் பயல்.. எனக்கு இப்படிச் செய்கின்றானே...! என்று நாம் எண்ணுவோம்.
2.இப்படிச் செய்கின்றானே..! என்று எண்ணும் பொழுது அதே உணர்வு நமக்குள் வந்து அதையே நாம் வளர்க்கின்றோம்.

அதாவது அவர்கள் நமக்கு என்னென்ன சொன்னார்களோ உதாரணமாக “வியாபாரம் கெடும்...!” என்று சொல்லியிருந்தால் அது அப்படியே வரும்.

நம் பையனையே வைத்துக் கொள்ளுங்கள். அவன் தவறு செய்யும் நிலையில் “இப்படிச் செய்கின்றானே...!” என்று எண்ணி வேதனைபபடுகின்றோம்.

நம் உடலில் வேதனையின் உணர்வின் அணுக்களாகின்றது. அந்த வேதனை உணர்வுகள் நம் உடலாக மாறுகின்றது.

இதை நினைத்துவிட்டு ஒரு நல்ல காரியத்திற்குப் போனால் என்ன ஆகும்...? எந்த வேலையாக இருந்தாலும் எதிரியாகிவிடும். வேதனை உணர்வை நுகர்ந்து விட்டால் சரியாக இயங்காது.

அதனால் நாம் தொழில் செய்யும் இடத்தில் பகைமை வந்துவிடுகின்றது. வியாபாரம் செய்தாலும் இந்த வேதனை வரும். நாம் சொல்வதைக் கேட்டால் உடனே “சரக்கை வேண்டாம்...!” என்று சொல்லி விடுவார்கள்.

இதெல்லாம் நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய நிலைகள். இதை மாற்ற வேண்டும் அல்லவா...! அதற்காகத்தான்
1.காலையில் விழித்தவுடன்
2.இந்தத் துருவ தியானத்தைச் செய்யுங்கள்...? என்று முக்கியமாகச் சொல்கிறோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா..! என்று ஒரு ஐந்து அல்லது ஆறு தடவை சர்க்குலேசன் போன்று தலையிலிருந்து கால் வரை உடலுக்குள் செலுத்தி நம் ஆத்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். பெற்று எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதே போல் இருவரும் சேர்ந்து அந்தச் சக்தி எங்கள் குழந்தைகள் பெறவேண்டும் என்று அவசியம் எண்ணுதல் வேண்டும்.

அதே போல் நம்முடைய முன்னோர்களையும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

இபப்டிச் செய்து வந்தால்
1.வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நம் நினைவுகள் மகரிஷிகளின் பால் அங்கே செல்கிறது.
2.நாம் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே இணைந்து வாழ்கின்றோம்.
3.மெய் ஞானிகளின் உணர்வுகள் அதீதமாக நமக்குள் வளர்கின்றது.
4.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெறுகின்றோம்...!