ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 6, 2019

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது...!


இவ்வுலகில் உதித்த இவ்வுலகில் பிறந்த எல்லா உயிரணுக்களுக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. அத்திறமை பெற்றுத்தான் இப்பூவுலகிற்குள் வந்து பிறக்கின்றன.

மனிதன் மிருகங்கள் பட்சிகள் செடி கொடி புழு பூச்சி எல்லாமே அச்சக்தியின் அருளில் ஒவ்வொரு திறன் கொண்டு சக்தி பெற்றே இப்பூமண்டலத்தில் வந்து பிறக்கின்றன.

இந்நிலையில் பிறக்கும் பாக்கியத்தைப் பெற்ற நாம்
1.நம் சக்தியை...
2.நம் திறனை...
3.நம் எண்ணத்தைப் பல வழிகளில் சிதறவிட்டு...
4.நாம் பெற்ற பாக்கியத்தையே இழந்து வாழும் நிலையில்தான்
5.நாம் இந்த உலகில் இன்று வாழ்கின்றோம்.

இச்சக்தியின் அருளில் ஒவ்வொருவருக்கும் செயலாற்றும் தன்மையிலே ஒவ்வொரு திறனுண்டு. மனிதனாகப் பிறவி எடுத்த நமக்கு அச்சக்தியின் அருளில் மற்ற மிருகங்களுக்கு இல்லாத நிலையான செயலாற்றும் தன்மை உள்ளது. அதாவது
1.இரண்டு கைகளால் செயல்படும் திறனையும்
2.ஆற்றல் கொண்ட சொற்களைப் பேசும் திறனையும்
3.நமக்களித்த அத்திறன்களை ஒரே நிலை கொண்டு
4.நம் எண்ண நிலையைச் சிதறவிடாமல் செயலாற்றும் தன்மை உடையவர்களாக இருந்திடல் வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழியில் அவரவர்கள் எடுக்கும் சுவாச நிலை கொண்டு பல செயல் திறன்களை வென்று வாழ்ந்தாலும்  
1.பெரும் உன்னத நிலை அடையச் செய்யும்
2.அருள் ஞானப் பொக்கிஷத்தை மறந்து வாழும் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற நிலைக்கு வாருங்கள்.
3.உங்களை இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனின் துணை கொண்டு வாழுங்கள்.

ஒவ்வொருவரும் ஜெப நிலை பெற்று இந்த உடலையும் உயிராத்மாவையும் பூமியையும் புனிதமாக்கும் தன்மையில் அன்பு கொண்டே... நல் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்...! தியான நிலையில் இருந்திடுங்கள்...!

இதைப் படிப்போர் அனைவரும் அந்த அருள் சக்தி பெற்று
1.சகல சித்தர்களும் ஞானிகளும் மகரிஷிகளும் நமக்குள் வந்து
2.நமக்கு அருள் புரியும் தன்மையில் அருள் பெற்றே... அன்பு கொண்டே வாழ்ந்திடுங்கள்...!

“மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்...!” என்ற நிலைக்கேற்ப அந்த மகரிஷிகளின் அருளை ஏற்றே அருள் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள். பேரருள் பேரொளி பெற்றுப் பேரானந்த நிலையை அடையுங்கள். உங்களால் முடியும்...!