ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 28, 2019

தியானத்தைக் கடைப்பிடிப்போர் மற்றவர்கள் தவறுகளைத் தெரிந்து கொள்ள நேர்ந்தால் அந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்...?


ஒருவர் தீமை செய்கிறார் என்ற உணர்வை நுகர்ந்தால் போதும். அவருடைய சிரமங்களை நாம் அறியலாம். ஆனால் சிரமங்களை அறிந்த பின்
1.“நான் கண்டுபிடித்துவிட்டேன்...!” என்று
2.எப்படி எல்லாம் சிரமம் வருகிறது...? என்று ஜோசியத்தைப் பார்த்து விடாதீர்கள்...!

மற்றவர்களுடைய குறைகளோ துன்பங்களோ தெரிந்தது என்றாலும் மகரிஷியின் அருள் சக்தி அவர் பெற வேண்டும். அவர் சிரமத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வை மாற்றி எடுத்துக் கொண்டு மகரிஷியின் அருள் சக்தி பெற்று நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இந்த வாக்கை மட்டும் கொடுங்கள்.

கஷ்டத்தைச் சொல்லி விடாதீர்கள்...!

ஏனென்றால் இந்தத் தியான வழியில் உள்ளவர்களுக்கு மற்றவர்களைப் பார்க்கும் பொழுது அது தெரிய வரும். சொல்லவும் முடியும். ஆனால் அதை நல்லதாக்குவதற்குச் சொல்ல வேண்டும்.

ஆனால் ஒரு சில பேர் அடுத்தவர்களுடைய குறையை இலேசாகத் தெரிந்து கொள்வார்கள். தெரிந்த பின்...
1.சாமி (ஞானகுரு) உபதேசம் சொல்கிறார்.
2.எல்லாமே இவரும் கேட்கிறார்...!
3.கேட்ட பின்பும் இப்படித் தப்பு செய்து கொண்டே இருக்கிறார்... என்று எண்ணி அதையே சொல்லிச் சொல்லி
4.அந்தக் குறையை எடுத்து வளர்த்துக் கொள்கிறவர்கள் தான் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அவர்கள் செய்யும் தவறைப் பற்றி அறிய முடிகிறது. ஆனால் அதை அறிந்த பின் அந்தத் தீமையை நீக்கத் தெரியவில்லை.

ஏனென்றால் மற்றவரைப் பற்றி அறியும் ஆற்றல் வரப்போகும் போது குறைகளைக் கேட்கிறோம் என்று அதற்குள் போய்விடுகின்றார்கள்.

பின் இப்படிச் செய்கிறார்கள்... இப்படி இருக்கிறார்கள்...! என்று அவர்களைப் பற்றிக் குறையாகப் பேசி அவர்களுடைய நினைவு வரும் போது இது தான் வளரும்.

யாம் அறியும் சக்தியைக் கொடுத்தாலும் அதை நீக்கும் சக்தியையும் உடனடியாகக் கொடுக்கிறோம். மீட்கும் வல்லமை கொடுத்ததைப் பயன்படுத்தவில்லை என்றால் குறை உணர்வே வளரும். அதை நாம் மாற்றுதல் வேண்டும்.

1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவருக்குள் அறியாது புகுந்த அந்த இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் காணும் அந்தத் திறன் அவர் பெற வேண்டும்.
4.மகரிஷியின் அருள் வட்டத்தில் அவர் வாழ வேண்டும்.
5.ஒளியின் உணர்வாக வளர வேண்டும் என்று உணர்வை எடுத்தால்
6.நாம் பார்த்து அறிந்து கொண்ட அந்தக் குறையான உணர்வு நமக்குள் மாறும்.

மகரிஷியின் அருள் சக்தியால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள். நீங்கள் பொருள் காணும் சக்தி பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கலை நீக்குவீர்கள். இப்படி எல்லாம் நாம் எண்ணினால் அவருடைய குறைகள் நமக்குள் வராது தடுக்கின்றோம்.

அவரும் இதே போல் எண்ணினால் அவருடைய குறையான செயல்களும் நிச்சயம் மாறும்.