ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 5, 2019

தொழிலையும் குழந்தைகளையும் குடும்பத்தையும் எண்ணி வேதனைப்பட்டு... வேதனைப்பட்டு... “நம் எண்ணத்தை எமனாக ஆக்கிவிடக் கூடாது...!”


தொழில் செய்யும் பொழுது அடிக்கடி நீங்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே எண்ணத்துடன் வியாபாரத்தில் அமர்கின்றீர்கள். அந்த நேரத்தில் “வேதனைப்படுத்தக் கூடியவர்கள் தான்...” கடைக்கு வந்து நம்மை அணுகுவார்கள்.

வியாபாரத்திற்குத் தான் வந்தார்கள் என்ற நிலையில் நியாயமான உணர்வுகளைப் பற்றி நாமும் பேசுவோம் அவர்களும் அதையே பேசுவார்கள். அப்படிப் பேசப்படும் பொழுது அவருக்குள் நாம் இணைந்து விடுவோம்.
1.ஆனால் அவர் ஏமாற்றுபவராக இருப்பார்...
2.நம்மை ஏமாற்றத் தெரிந்து கொண்டவர். அதனால் அவருக்குப் பயனாகின்றது.
3.பார்... நான் எல்லாம் செய்தேன்... நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவனே... என்னை மோசம் செய்துவிட்டான்...! என்போம்.

வேதனை உணர்வுகளால் நம் சிந்திக்கும் தன்மை இழந்து எப்படி இந்தக் கஷ்டத்திலிருந்து மீளலாம் என்ற உணர்வு தான் முதலில் நமக்குள் தூண்டப்பட்டிருக்கும்.

இருந்தாலும் நாம் வேதனையுடன் இருக்கும் இந்தச் சமயத்தில் ஏமாற்றுபவர்கள் இதைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
1.அத்தகைய ஆள்கள் தான் அந்த நேரத்தில் நம்மிடம் வருவார்கள்.
2.நல்லவர்கள் வருவதோ நமக்கு நல்ல யோசனை சொல்வதோ வராது.
3.நல்லவர்கள் அப்படி வந்து யோசனை சொன்னாலும் இவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் தான் நமக்கு வரும்.
4.நம்முடைய வேதனை நல்லவரை நம்பாதபடி செய்துவிடும்.

ஆனால் வேதனையான குணத்திற்குத் தக்கவாறு நினைக்கும் பொழுது நம்மை ஏமாற்றும் நோக்கத்தில் வந்தவர்... நல்லவராகவே தோன்றும். ஏமாற்றிய பின் தான் நாம் உணர்வோம்.

இதைப் போல் நம் வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே பல சூழ்நிலைகள் உருவாகி நம்மை இயக்குகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்...?

“ஈஸ்வரா...!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அதிகாலையில் கண் விழித்தவுடன் துருவ தியானத்தில் உங்களுக்குக் கொடுக்கும் சக்தியின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

1.இந்த வாழ்க்கையில் எத்தகைய நிலை ஆனாலும் சரி
2.தொழில் செய்யும் பொழுதும் சரி
3.உறங்கும் பொழுதானாலும் சரி
4.உணவை உட்கொள்ளும் பொழுதும் சரி
5.வெளியிலே போகும் பொழுதும் சரி
6.வியாபாரத்தில் ஒரு பொருளைக் கையில் எடுத்துக் கொடுக்கும் பொழுதும் சரி...!
7.ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
8.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இணைத்தே வாழ வேண்டும்.

நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும் எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும் எங்கள் வாடிக்கையாளரும் அவர் குடும்பத்தாரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படிச் செய்தால் உங்கள் வேதனைகள் அகலும். மனமும் அமைதி ஆகும். மகிழ்ச்சி தேடி வரும். அதனால் தொழிலும் நன்றாக இருக்கும்.

அதே மாதிரி நம் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று மிகுந்த வேதனைப்படுகின்றோம். அதற்குக் காரணம் என்ன...?

உதாரணமாக ஒரு சந்தர்ப்பத்தில் தேள் வருகிறது என்று அதை அடித்துக் கொன்று விடுகின்றோம். அந்த உயிர் நம் உடலுக்குள் உறைவிடமாக வந்து விடுகின்றது.

வந்த பின் அந்த அணுவின் தன்மை கருவிலே விளையப்படும் பொழுது கருவுக்குள் வரப்படும் பொழுது தான் அந்தச் சந்தர்ப்பத்தையே உருவாக்கும்.

தேளைக் கொன்ற அந்த உணர்வின் தன்மை நமக்குள் வரப்படும் பொழுது அந்த வேதனையின் அணுவின் கருவாக இங்கே நமக்குள் “மனிதனாக உருவானாலும்...!”
1.இது கருப்பையில் தங்கப்படும் பொழுது
2.அந்த வேதனை உணர்ச்சிகள் தோன்றும்... அந்த அலைகளை இழுக்கும்...!
3.வேதனையின் உணர்வின் தன்மை நம் உடலில் இருக்கும்.  
(ஏனென்றால் அந்த அணுக்களின் தன்மை)

அப்பொழுது அந்த அணுவிற்குண்டான நிலைகள் “வேதனைப்படுத்தியே பிழைக்க வேண்டும்...!” என்ற உணர்வு அதற்குள் வந்து அப்படிப் பிறந்த பின் அடுத்தவர்களை வேதனைப்படுத்திக் கொண்டே இருப்பான்.

அவனைத் திருத்த வேண்டும் என்றால் எப்படிச் செய்வது...?

நாம் சமையல் செய்யும் பொழுது எவ்வளவு காரலாக காரமாக கசப்பாக இருந்தாலும் அதை எல்லாம் வேக வைத்துச் சுவையாக மாற்றுகின்றோம். சுவையாகச் சமைத்துத் தானே உட்கொள்கின்றோம்....!

அதைப் போல நம் குழந்தை அப்படி இருந்தாலும் அவனைப் பற்றி  வேதனையாக எண்ணி
1.நமக்குள் நம் எண்ணத்தை எமனாக்கிவிடக் கூடாது (இது முக்கியம்)
2.மாறாக நம் எண்ணத்தை நாம் கடவுளாக்க வேண்டும்.
3.அதாவது அருள் ஒளி கொண்டு இருளை அகற்றும் கடவுளாக... நம் எண்ணத்தை மாற்றுதல் வேண்டும்.

அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து இந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்டே வர வேண்டும். பின் குழந்தையை எண்ணி
1.அவன் மகரிஷிகளின் அருள் உணர்வு பெறவேண்டும்.
2.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.அவன் அருள் ஞானம் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத் தான் நம் உயிர் உருவாக்குகின்றது, அந்த எண்ணத்தின் தன்மை நம் உடலில் இணைந்து
1.உள் நின்று இயக்கும் பொழுது உயிர் கடவுளாகின்றது.
2.அதை மீண்டும் செயலாக்கும் பொழுது அதுவே தெய்வமாகக் காக்கின்றது.
3.அதைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அதுவே குருவாகின்றது.

ஆகவே அத்தகைய குருவின் செயலாக நன்மையின் நிலையையே நாம் மனதில் கொள்ள வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறுவோம்.