ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 24, 2016

நாம் சேர்க்க வேண்டிய அழியாச் சொத்து

கோடிச் செல்வம் வைத்திருந்தாலும் இந்த உடல் நமக்குச் சொந்தமாவதில்லை. ஆனால், அந்தச் செல்வம் சொந்தமாகின்றதா? இல்லை.

அருள் ஞானச் செல்வம் தான் நமக்குள் என்றும் நிலையாக இருக்கின்றது. இந்தச் செல்வத்தைக் காக்கவேண்டும் என்றாலும் இந்த உடலைச் சிறிது காலத்திற்குக் காக்க வேண்டும் என்றாலும் அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேமித்து வைக்க வேண்டும்.

அப்பொழுது இந்த வாழ்க்கை இருக்கும் வரையிலும் அந்தச் சேமிக்கும் தன்மை வரும்.

உதாரணமாக ஒரு குடத்தில் நீர் இருந்தால் அதில் ஒரு ஓட்டை விழுந்துவிட்டால் நீங்கள் ஊற்ற ஊற்ற வடிந்து கொண்டே இருக்கும். மிச்சம் இருக்காது.

இதைப் போல நமது வாழ்க்கை சிறிது குறை என்ற நிலை இருந்தாலும் அந்த உணர்வின் தன்மை வளர்ச்சியின் தன்மை தடையாகி நம்முடைய நிலையே தடுமாறச் செய்துவிடும்.

நாம் ஊற்றும் நன்னீரை அங்கே காண முடியாது. ஓட்டை சிறிது மேலே இருந்தால் அது வரையிலும் கொஞ்சம் தேங்கி இருக்கும்.

அது அடி பாகத்தில் இருந்துவிட்டால் ஊற்றிய பின் திரும்பிப் பார்த்தால் எல்லாமே காணாமல் போய்விடும். மனிதனின் வாழ்க்கையில் சேமித்த உணர்வுகள் அனைத்தும் மறைந்துவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுவதற்குத்தான் உங்களுக்குள் அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கி உங்களுக்குள் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றோம்.

எப்படி ஒரு குளவி புழுவைக் கொட்டி தன் உணர்வின் தன்மையைப் பாய்ச்சி அதனின் நினைவைக் கொண்டு வந்ததோ அதே போல உங்களுக்குள் திரும்பத் திரும்ப மெய்ஞானிகளைப் பற்றிய நினைவினைக் கொண்டு வருகின்றோம்.

ஒவ்வொரு மிருகமும் தன்னைத் தாக்கி உணவுக்காகத் தேடி மற்ற மிருகங்கள் வந்தாலும் அதனைக் கூர்மையாகப் பார்த்து தான் தப்பிக்கும் நிலையாக அதனின் உணர்வின் தன்மையைத் தன் உடலுக்குள் சேர்த்து அதனின் வலிமையைத் தனக்குள் வளர்த்துக் கொள்கிறது.

அந்த வலிமையத் தனக்குள் வளர்த்து உடலை விட்டு வந்தபின் அந்த அணுவின் மாற்றமாகி பரிணாம வளர்ச்சியில் வலுக் கொண்ட உடல்களாக மாறி அந்த வலுவின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் தன்மைகளைச் சேர்த்துச் சேர்த்து நம்மை மனிதனாக உருவாக்கியது நம் உயிர்.

மனிதனான பின் தீமைகளை அகற்றிய அருள் ஞானிகள் இன்றும் துருவ நட்சத்திரமாகவும் அதன் ஈர்ப்பில் சப்தரிஷி மண்டலமாகவும் வீற்றிருக்கின்றார்கள்.

உங்களின் நினைவாற்றலை உங்கள் உணர்வினை அங்கே அழைத்துச் செல்கிறேன்.

உங்களுடைய நினைவின் ஆற்றலை அங்கே துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அந்த உணர்வின் தன்மை பெறவேண்டும் என்று சேர்த்துக் கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் உணர்வை இந்த வாழ்க்கையில் சேமிப்பாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். இது தான் நம் உயிரான்மாவிற்குச் சேர்க்க வேண்டிய அழியாச் சொத்து.

இதை யாரும் அழிக்க முடியாது. இது என்றுமே வளர்ந்து கொண்டேயிருக்கும்.