ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 5, 2025

உடலான பிரபஞ்சத்தை “ஒளிப் பிரபஞ்சமாக உருவாக்குங்கள்…”

உடலான பிரபஞ்சத்தை “ஒளிப் பிரபஞ்சமாக உருவாக்குங்கள்…”


நாம் எப்படி வந்தோம்…? நாம் இனி எங்கே போக வேண்டும்…? என்று கண்டு கொண்ட ஞானிகள் விண்ணிலே உள்ளார்கள். அவன் உணர்ந்த ஒளி அலைகளை இங்கே பூமிக்குள் அனுப்புகின்றான். அந்த அலைகள் இங்கே உண்டு. அந்த மகரிஷிகளின் உணர்வுகளைத் தான் உங்களுக்குள் பாய்ச்சுகின்றோம்.
1.உங்களை அறியாது இயக்கக்கூடிய விஷமான நிலைகளுக்குள் அதை இணைப்பதற்கு
2.உங்கள் நல்ல எண்ணங்கள் எதுவோ அதற்குள் இதை பதியச் செய்ய வேண்டும்.
3.நீங்கள் நல்லதை எண்ணும் பொழுது அதற்கு வலுவூட்டவே இதை உபதேசிக்கின்றோம்.
 
சந்தர்ப்பத்தால் வேதனையான உணர்வுகளைக் கண்டுணரும் பொழுது அதை அறிகின்றீர்கள். அப்படி அறிந்து மற்றவர்களைக் காப்பாற்றினாலும் நுகர்ந்த அந்த வேதனை நல்ல குணத்திற்குள் சுழன்று கொண்டு மீண்டும் அந்த நல்லதை எழாத வண்ணம் செய்து விடுகின்றது.
 
ஆகவே அதிலிருந்து மீள அந்த மெய் ஒளியின் உணர்வுகளை உங்களுக்குள் இணைக்கச் செய்து புலனறிவுக்குள் நுகரும்படி செய்து நல்ல உணர்வுகளுக்கு வலு சேர்ப்பதற்கே இப்பொழுது உபதேசிப்பது. அதாவது உங்களுக்குள் செல்களாக அந்த ஞானிகள் உணர்வைப் பதிவு செய்கின்றோம்.
 
மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றிடும் சக்தி பெற்ற நிலையில்
1.வாழ்க்கையில் தன்னை அறியாமல் சேரும் நஞ்சான உணர்வுகளை நீக்குவதற்கு
2.அந்த மெய் ஞானிகள் உணர்வை வினையாகச் சேர்த்து தனக்குள் வரும் தீய வினையை நீக்கி
3.தன் நிலை அடைந்து ஒளியின் சரீரமாகப் பெறச் செய்வது தான் அது.
 
சூரியன் கோள்களின் ஆற்றலை எடுத்து அந்த விஷத்தை மாற்றி ஒளியின் சுடராக இந்த பிரபஞ்சத்தை எப்படி உருவாக்குகின்றதோ இதைப் போன்றே
1.உயிரின் நிலைகள் கொண்டு இந்த உடலுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையைப் பல நட்சத்திரத்தின் நிலைகள் இருந்தாலும்
2.மெய் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து இந்த உடலான பிரபஞ்சத்தை ஒளியான சரீரமாக்கி… ஒளிப் பிரபஞ்சமாகி
3.விண்ணிலிருந்து வரும் உணர்வினை எடுத்து ஒளிச் சரீரமாக மாற்றும் நிலை தான் மனிதனின் கடைசி நிலை.
 
அப்படி மாற்றிய நிலைகள் தான் என்றும் 16 என்ற நிலையான ஒளிச் சரீரம் பெற்று பெரு வீடு பெரும் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலம்.
 
அங்கிருந்து உமிழ்த்திக் கொண்டிருக்கும் அந்த உணர்வின் தன்மை மனிதனாக வாழ்ந்த காலங்களில் அவர் உடலில் விளைய வைத்து வெளியிட்ட மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமியிலே படரச் செய்துள்ளது.
1.அதைக் கவர அதை ஒத்த மணம் நமக்குத் தேவை. அந்த ஆற்றல் நமக்குத் தேவை.
2.அதைப் பெறுவதற்குத் தான் மெய் ஞானிகளின் அருள் வாக்கை உங்களுக்குள் ஞான வித்தாகப் பதிவு செய்கின்றோம்.
 
நஞ்சை முறித்து விண் சென்ற ஞானியின் ஆற்றல்மிக்க எண்ண அலைகள் பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் அந்தச் சக்தியை உங்கள் சுவாசத்திற்குள் செலுத்தச் செய்கின்றோம்.
 
ங்களைச் சூழ்ந்து துன்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நல்லதைச் சிந்திக்க விடாது தடைப்படுத்திக் கொண்டிருக்கும் உணர்வின் தன்மையை அந்த நஞ்சினை விலக்கி உணர்வை ஒளியாக மாற்றும் ஆற்றல் மிக்க சக்தி பெற வேண்டும்…” என்று தான் உபதேசிப்பது.
 
சந்தர்ப்பத்தால் நீங்கள் சுவாசித்த குணக் கேடான உணர்வுகள் அனைத்தையும் வலுவிழக்கச் செய்ய நல்ல உணர்வுகளைத் தட்டி எழுப்பி…” மெய் ஞானிகளுடைய ஆற்றலைப் பெறச் செய்யும் பக்குவ நிலை ஏற்படுத்துவதற்குத் தான் இதைச் சொல்கின்றேன்.
 
குருநாதர் எனக்குள் மெய் உணர்வைப் பெறும் சந்தர்ப்பத்தை உருவாக்கி… நல்ல குணங்களைத் தட்டி எழுப்பி ஒவ்வொரு உணர்விற்குள்ளும் ஞானிகள் உணர்வை எப்படிப் பதிவு செய்தாரோ…” அதை நான் நினைவு கொண்டு கூர்ந்து எண்ணத்தைச் செலுத்தி… காற்றிலே பரவியுள்ள மெய் ஞானிகள் உணர்வுகளை நுகர்ந்து என்னைப் பக்குவப்படுத்தினேனோ அதே நிலைகளைத் தான் உங்களுக்கும் ஊட்டுகின்றேன்.
 
1.உங்களை அறியாது தீய நிலைகள் வந்தாலும் அதிலிருந்து விடுபடுவீர்கள்
2.நோயிலிருந்து விடுபட்டு உடல் நலம் பெறுவீர்கள் என்ற இந்த வாக்கினைக் கொடுக்கப்படும் பொழுது
3.அதை ஏற்றுக் கொண்டோர் உள்ளங்களில் ஊடுருவி அது உங்கள் துன்பத்தை விலக்க உதவுகின்றது.
 
தீமை உங்களுக்குள் என்றுமே வராதபடி…” நல்ல உணர்வுகளைத் தட்டி எழுப்பி உங்களை வாழ வழி வகுக்கச் செய்கின்றோம்.
 
ஆனால் இந்த உண்மைகளை எல்லாம் நாம் உபதேசித்து வந்தாலும் சிலர்  கோவிலுக்குச் செல்ல வேண்டாம் சாமியே கும்பிட வேண்டாம் என்று சாமி சொல்கிறார்…” என்று இப்படி அர்த்தம் எடுத்துக் கொள்கின்றார்கள்.
 
நம் உடல் ஒரு கோவில்…! நம் உடலில் இருக்கக்கூடிய ஆந்த நல்ல குணங்களைத்தான் ஆலயத்திலே காண்பிக்கப்பட்டுள்ளது. அதை எப்படி வளர்க்க வேண்டும்…? என்று தான் அன்று ஞானிகள் சொன்னார்கள். அரசனுக்கும் டிமிக்கி கொடுத்து அதைச் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
 
திருமூலர் சொன்ன திருமூல மந்திரத்தின் நிலைகளை வெறும் மந்திரமாகத்தான்…” மாற்றிக் கொண்டார்கள்.
1.திருமூலம் - திரு என்பது உயிர் மூலம் என்பது உயிர்
2.மூலத்திற்குள் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஒலி ஒளியாக எப்படி இயங்குகின்றது…? என்று தான் அவர் உணர்த்திச் சென்றார்.
 
பதஞ்சலியாகப் பாம்பின் உடலிலிருந்து மீண்டு இன்னொரு மனித உடலுக்குள் சென்ற பின் மெய் உணர்வின் தன்மையை உணர்கின்றார்.
1.அந்த ஏழ்மையான சரீரத்திற்குள் வந்த பின்பு தான் உயர்வையும் தாழ்மையையும் இரண்டும் இணைக்கின்றது.
2.அப்படி இணைத்துப் பார்க்கப்படும் பொழுது பேரண்டத்தின் பேருண்மைகளை அறிந்துணர்ந்து
3.அந்தப் பக்குவ நிலையைத் திருமூலர் காட்டுகின்றார்.
 
அவர் உணர்த்திய மெய் உணர்வுகளை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.