ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 17, 2025

“ஐயோ… பாவம்…!” என்று இரக்கப்படுவதில் உள்ள பின் விளைவுகள்

“ஐயோ… பாவம்…!” என்று இரக்கப்படுவதில் உள்ள பின் விளைவுகள்


உதாரணமாக ரயிலிலே நாம் பிரயாணம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் இரக்கம் ஈகை பண்பு கொண்டவர்கள். அங்கே பயணம் செய்பவர்களில் ஒருவர் கடுமையாக வேதனைப்படுகிறார் என்று பார்க்கிறோம்.
 
அவரை நமக்குத் தெரியாது அவர்களிடம் நாம் வேறு உணர்வு கொண்டும் பழகவில்லை. பிரயாணம் செய்யும் பொழுது தான் பழக்கம். அவர் சிரமப்படுவதை இரக்க மனம் கொண்டு என்ன ஏது…? என்று பார்க்கின்றோம்.
 
ஆனால் அவருடன் வந்தவர்களோ சலிப்பாகச் சஞ்சலமாகவே அவரிடம் பேசுவார்கள். ஏனென்றால் அடிக்கடி அவரிடம் கவலைப்பட்டுப் பழகியவர்கள் அல்லவா. இருக்கிற இடத்தில் சும்மா இரு…! ஏன் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறாய்…? என்று அடிக்கடி பேசுவார்கள்.
 
ஆனால் நாமோ
1.ஏன் இப்படி…? என்று இரக்கத்தோடு இந்த செயலைக் கவனிக்கின்றோம் ஏனென்றால் அன்று ஒரு நாள் தானே பழகுகிறோம்.
2.ஆகையினால் ஏன் இந்த மாதிரிச் செய்கிறீர்கள்…! உங்களுக்கு என்னம்மா வேண்டும்…? ஏதம்மா வேண்டும்…? என்று இப்படிப் பதிவு செய்கிறோம்.
 
இப்படிப் பண்போடு சொல்லப்படும் பொழுது அவர்களுக்கு வேதனை கொஞ்சம் தணிகிறது. இந்த உணர்வு…” அந்த வேதனைப்படுவர் உடலிலே ஆழமாகப் பதிவாகி வலுப் பெற்று விடுகின்றது.
 
நாம் என்ன நினைக்கின்றோம்…! ந்தப் பெண்மணி இவ்வளவு கஷ்டப்படுகின்றது ஆனால் இரக்கமில்லாதபடி சமுதாயம் பேசுகிறது பார்…! என்று “அவர்கள் உணர்வை…” நமக்குள் பதிவு செய்கின்றோம்.
 
அடுத்து அவர் ஊருக்குப் போய்ச் சேருகின்றார். அவரைச் சார்ந்தவர்கள் உணர்வு வரும் பொழுது இந்த எண்ணங்கள் அதிகமாகிறது…
1.பார்… எத்தனை நல்லது செய்தோம்…? எத்தனை வசதி கொடுத்தோம்…? நம்மை இப்படித் தான் பேசுகிறார்கள்.
2.ஆனால் ரயிலில் பயணம் செய்யும் பொழுது “அந்த மகராசி… என்ன உபச்சாரம்…!” என்ற இந்த உணர்வு அங்கே வலுப்பெறுகின்றது.
 
ஆனால் நாமோ அவர்கள் வேதனையைப் பதிவு செய்கின்றோம். அதாவது
1.அவர்கள் உடலில் விளைந்தது நமக்குள்ளே…!
2.நம்முடைய உடலிலே பதிவான உணர்வுகள் அங்கே…!
3.அதே சமயத்தில் அங்கே வேதனைப்படுவருடைய வீட்டிலோ அவருக்கு வெறுப்பு.
 
 உடலை விட்டுப்பிரியும் போது அவரின் உணர்வுகள் “இரயிலில் தனக்கு ஆதரவாகப் பேசியவர் மேல் நினைவு வருகின்றது…!” விதிப்படி அவர்கள் எண்ணுகின்றார்கள்.
 
உயிர் பிரியும் பொழுது அந்த ஆன்மா எந்த உணர்வைக் (எண்ணங்களை) கடைசியிலே வலுவாக எடுத்துக் கொண்டதோ
1.நாம் இங்கே இருந்தாலும் நம் மீது அந்த நினைவுகள் வந்து உடலுக்குள் புகுந்துவிடுகிறது.
2.நம் உடலில் அந்த ஆன்மா புகுந்தது நமக்கே தெரியாது.
 
ஆனால் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களை எண்ணும் போது… பாவிகள் என்று பதிவு செய்து அந்த எண்ண அலைகளை அங்கே பரப்புகின்றது. இவ்வாறு பதிந்த எண்ணங்கள் கொண்டு இதிலே மடிந்து விடுகின்றது.
 
சாப அலைகள் அந்தக் குடும்பத்தைச் சாடுகிறது. இறந்த உடலில் விளைந்தது அனைத்துமே அந்தக் குடும்பத்திற்குப் பாய்கின்றது.
 
ஆனால் இங்கே பற்று கொண்ட நிலையில் மகராசி எனக்கு ஆதரவாகப் பேசியது என்ற அந்த எண்ணத்துடன் அந்த ஆன்மா இங்கே வந்து விடுகின்றது.
 
விஷத்தில் பாதாமைப் போட்டால் எப்படி இருக்கும்…? அந்த மாதிரி
1.அவர் வேதனைப்பட்ட உணர்வுக்குள் இந்த உணர்வின் தன்மை கலந்து இங்கே இயக்கச் சக்தியாக மாறுகிறது.
2.அந்த உடல் எவ்வாறெல்லாம் வேதனைப்பட்டதோ தன் குடும்பத்தாரை வெறுப்புடன் எப்படிப் பேசியதோ
3.இங்கே வந்தபின் தன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் வெறுப்பாகப் பேச வைக்கும்.
 
பார்க்கலாம் சில குடும்பங்களில் நேற்று வரை அவருடைய பேச்சு பழக்க வழக்கம் எல்லாமே… நல்லதாக உதவி செய்வதாக இருக்கும். ஆனால் இந்த ஆன்மா புகுந்த பின் பார்த்தால் எல்லோரையும் வெறுத்துப் பேசும்.
 
நேற்று வரை எல்லோருக்கும் நல்லதைத்தான் செய்தார் ஆனால் இப்பொழுது இப்படிப் பேசுகின்றாரே…! என்னமோ தெரியவில்லை…! என்பார்கள்.
1.அந்த உடலிலே விளைந்த உணர்வின் செல்கள் நோயாக மாற்றிவிடும்.
2.பெரும்பகுதி இப்படித்தான் மனிதன் வாழ்க்கையில் தேய்பிறையாகச் சென்று கொண்டிருக்கின்றான்.
 
ஆனால் இது எல்லாம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதைத்தான் உங்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.