ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 26, 2025

வாலி சுக்ரீவன்

வாலி சுக்ரீவன்


ஒரு நோயாளியையோ தீமை செய்பவரையோ பார்க்க நேர்ந்தாலும் அது வாலியாக வலிமை மிக்க சக்தியாக நமக்குள் வந்து நல்ல குணங்களை அடக்குகிறது.
 
அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் பதிவு செய்து வைத்திருந்தால் அதைத் தடுக்க முடியும்.
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் கவர்ந்தோம் என்றால்
2.அந்த உணர்வுகள் நமக்குள் தீயதை அடக்கும் நிலையாக வரும்.
 
இதைத் தான் இராமாயணத்தில் இராமன் வாலியை, சுக்ரீவன் துணை கொண்டு அடக்கினான் என்று நமது காவியத் தொகுப்புகளில் காண்பித்திருப்பார்கள்.
 
அதாவது மனிதனில் தீமைகளை வென்ற அந்த வலிமையான சக்தியை நாம் எடுப்பதற்காக… சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரக்கூடிய உணர்வை நாம் நுகர்ந்து இந்த வலிமைமிக்க விஷத்தை வாலியை அடக்குதல் வேண்டும்.
 
சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரக்கூடிய உணர்வை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருவதை நாம் எண்ணத்தால் நுகர்ந்தால் சுக்ரீவன்...
1.அந்த உணர்ச்சிகள் நமக்குள் ஊடுருவி நஞ்சு கொண்ட உணர்வை நமக்குள் அடக்குகின்றது.
2.இதைத்தான் சுக்ரீவன் துணை கொண்டு வாலியை இராமன்  அடக்கினான் என்பார்கள்.
 
இதில் வாலி அண்ணன்சுக்ரீவன் தம்பி.
1.ஆதியில் விஷத்தின் இயக்கத்தால் தொடர்ந்து வந்தவன் தான் அண்ணன் வாலி.
2.மனிதனாக ஆனபின் உணர்வின் தன்மையை ஒளியாக்கும் நிலை பெற்றது சுக்ரீவன்.
 
ஆக பின்னால் பிறந்ததுதான் ஒளி இவ்வளவு தெளிவாகக் காட்டுகின்றார்கள். இதனால் வாலி சுக்ரீவன் என்று காரணப் பெயர்களை வைத்துச் சகோதரர்கள் என்று காட்டினார்கள்.
 
 சுக்ரீவனின் துணை கொண்டு, வாலியை அடக்கப்படும் பொழுது இது இணைந்து, நமக்குள்   நன்மை செய்யும் சக்தியாக மாற்றுகின்றது என்பதையே நமது காவியத் தொகுப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.
 
மெய் ஞானிகள் தம்முள் கண்டுணர்ந்த இயற்கையின் செயலாக்கங்கள் அனைத்திற்கும் காரணப் பெயர்களைச் சூட்டினார்கள்…”
1.தம் இன மக்கள் அனைவரும் விண்ணின் ஆற்றலைத் தம்முள் பெற்று
2.ஒளி பெறும் உணர்வாக வளர்க்கும் நிலைக்காகத் தாம் கண்டறிந்த பேருண்மையின் தன்மைகளை அவ்வாறு வெளிப்படுத்தினர். 
 
மெய் ஞானிகள் வெளிப்படுத்திய உணர்வின் ஆற்றலைக் கவர்ந்து நம்முள் நஞ்சான உணர்வுகளை ஒடுக்கி மெய்ப் பொருளைப் பெறும் நிலையாக நமது உணர்வினை வளர்ப்போம்.
 
ஆகவே… மெய் ஞானிகள் காண்பித்த வழியினைக் கடைப்பிடிப்போர் அனைவரும் என்றும் பேரானந்த பெரு நிலையைப் பெறுவதற்கு எமது அருள் ஆசிகள்.