இவை என்ன உலக இயற்கை…?
(16.12.1979 அன்று தினமணிச் சுடரில் வெளி வந்த கட்டுரை)
அயல் நாட்டுக் கார் ஒன்று நீண்ட படகு போல் வீதியில் வேகமாகச் செல்கின்றது. இதை பார்க்கும் ஒருவர் அருகில் நிற்பவரிடம் சொல்கிறார்.
அந்தப் பெரிய காரில் போவது யார் தெரிகிறதா…? கள்ளக் கடத்தல் செய்து பொருள்களைப் பதுக்கி வைத்து அந்தக் குற்றத்திற்காகத் தண்டனை பெற்றாரே… அவர் தான்…!
ஆமாம்…! அவர்கள் தான் இப்படி ஆடம்பரமாக வாழ முடியும்…! என்று பெருமூச்சுடன் கூறுகின்றார் மற்றொருவர்.
அந்த வியாபாரிக்குத் தண்டனை விதித்த “மேஜிஸ்டிரேட்” அந்த வீதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக வெயிலில் நிற்கின்றார். 2… 3… பஸ்களில் ஏகக் கூட்டம் அவரால் ஏற முடியவில்லை. “கோர்ட்டுக்கு நேரமாகிவிட்டதே” என்ற துடிப்போடு அடுத்த பஸ்ஸை எதிர்பார்த்து நிற்கின்றார்.
அந்த வீதியிலேயே பெரிய வீடு… ஆடம்பரமான பங்களா…! தொடர்ந்து லஞ்சம் பெற்றதற்காக வேலையில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட அரசாங்க அதிகாரி ஒருவருடைய வீடு அது…! என்பது எல்லோருக்கும் தெரியும்.
அதே வீதியில் கொஞ்சம் தள்ளி… சிறு வீடு ஒன்றில் அந்த வேலை நீக்கம் பெற்றவருக்கு மேலதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரின் வீடு இருக்கிறது.
அவர் நேர்மையான அதிகாரியாகப் பணியாற்றியவர்… எல்லோராலும் பாராட்டுப் பெற்றவர்… வேலையில் திறமையானவர்…! ஆனால் லஞ்சம் வாங்கும் திறமை அவரிடம் இல்லை.
நான்கு பெண்களைப் பெற்ற அவர் ஓய்வூதியத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்.
ஆக கலப்படம் செய்பவர்களும் கள்ளச் சந்தையில் வியாபாரம் செய்யும் வணிகர்களும்… லஞ்சம் பெற்றுக் கணக்கில்லாமல் சேர்த்து வரும் செல்வத்துடன் சீரோடும் சிறப்போடும் வாழுகின்றனர்.
அது மட்டுமல்ல…! ஊராரும் அவர்களைத் தான் போற்றுகின்றார்கள்… புகழ்கின்றார்கள். கள்ளச் சந்தையில் ஈடுபடாத வணிகர்களைக் “கையாலாகாதவர்கள்” என்று இழிவாகக் கருகின்றனர்.
கலப்படம் செய்வதற்குப் பயப்படும் வியாபாரிகளைத் “துணிச்சல் இல்லாதவர்கள்” என்று கேலி செய்கின்றார்கள். கயவர்களைப் போற்றும் உலகம் கண்ணியமானவர்களைத் தூற்றுகின்றது.
இதன் பயனாகத் தீயோர்கள் பிறர் மதிக்க வாழுகின்றனர்… நல்லோர்கள் இதயம் நலிந்து ஏங்கி இருக்கிறார்கள். இந்த விசித்திரமான நிலை இன்று போல் அன்றும் இருந்திருக்கின்றது. மனித குலத்தின் இயல்பும் மாறவில்லை அல்லவா…!
பணத்தைப் புகழ்வதும் பண்பாட்டைப் புறக்கணிப்பதும் மனிதனின் மாறாத தன்மை போலும்…! இந்த இழிநிலையினை காணும் நல்லோர்கள் மனம் நொந்து வருந்துவது இயல்பு தானே…!
ஒழுக்கமான வாழ்வே உயர் ஞானத்தின் பயன் என்று உரைத்த மெய்யடியார்கள் இதைக் கண்டு இதயம் இடிந்து போகின்றனர்.
“தீது அவம் கெடுக்கும் அமுதம்” என்று இறைவனை ஏத்தும் ஞானிகளால் தீமை ஓங்குவதையும் நன்மை நலிவடைவதையும் கண்டு எப்படிச் சகிக்க முடியும்…?
பண்புகளுக்கெல்லாம் பகைவர்களாக உள்ளவர்கள் புன்முறுவலோடு பொலிவுடன் வாழுகின்றனர். அன்பு நிறைந்த நல்லோர்கள் நலிந்து ஏங்குகின்றனர்.
எண்ணிலா இத்தகைய துயர் விளைவிக்கும் இது என்ன உலகத்து இயற்கை…! கண்ணனே…! கடல் கடைந்த வண்ணனே…! தாளாது அடியேனை உன் கழலிணைச் சேருமாறு அருள் புரிவாய்…! இந்த வாழ்வு வேண்டாம்…! என்று இதயம் கரைந்து பாடுகின்றார் நம்மாழ்வார்.
நல்லவர்கள் நலிவதும் நல்லோர் அல்லாதவர்கள் நன்கு வாழ்வதும் எதனால்…? மனிதன் தனக்கு வரித்துக் கொண்ட சமுதாய அமைப்பு முறையின் விளைவு தானே…?
அறத்திற்கு மாறான இந்த அவல நிலை அடியார்களின் உள்ளத்தை உலுக்குகின்றது இதைக் கண்டு சகித்துக் கொண்டு இருப்பதை விட உலக வாழ்வை விட்டு மறைவதே உகந்ததாகப் படுகின்றது.
இது மட்டுமா…? தான் உண்ணுவதற்கு என்று பிற உயிர்களைக் கொல்லுகின்றானே மனிதன்…! ஏமாற்றிப் பிடித்தும் வலையில் சிக்க வைத்தும் உயிரினங்களைப் பிடித்து அவற்றைக் கொன்று உண்ணுகின்றான்.
அறம் என்பது என்ன…? என்று அறியாத நிலையில் இவ்வாறு மனிதன் பிற உயிர்களைக் கொன்று உண்ணுகின்றான். கொல்லாமையை விட அறம் ஏது…? இதனை அறியாதவர்கள் உயிர்களைக் கொன்று பசியாறுகின்றனர்.
இதைக் கண்டு சகிக்க முடியவில்லை ஆராவமுதனே…! என்னை உன் திருவடியின் கீழ் அழைத்துக் கொள்… என்னைக் கூவி அழைத்துக் கொள்…! என்று இறைஞ்சுகின்றார் ஆழ்வார். புலால் உண்பதன் புன்மையினை அறப்போருளை அறியாதவர்களின் செயல் என்கிறார்.
“அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்” என்பது குறள்.
பிற உயிர்களைக் கொல்லாமல்தானே அறத்திற்கு அடிப்படை. தன் உடம்பு பெருக்க வேண்டும் என்பதற்காக… தான் மற்றொரு உயிரின் உடம்பைத் தின்பவன் எவ்வாறு அருள் உடையவனாக இருக்க முடியும்…? என்று கேட்கின்றார் திருவள்ளுவர்.
பிற உயிர்களைக் கொன்று உண்ணும் பழக்கம் அறத்திற்கும் அறத்தின் பயனாக அருளுக்கும் மாறுபட்டது என்பதால் அது விலக்கப்படுகின்றது.
உலக வாழ்விலே அருளும் அறமும் நலிகின்ற போதெல்லாம் நல்லவர்கள் மனம் நலிகின்றது. அறம் போற்றி வாழ்பவர்கள் அல்லல்படுவதும் அல்லாதவர்கள் ஆடம்பரமாக வாழ்வதும் உயிர்களைக் கொன்று உண்டு தம் ஊனை வளர்ப்பதும் உலகத்து இயற்கையாகி விட்டது…! உலக வாழ்வோடு ஒன்றிய இயல்பாகி விட்டது.
இப்படிப்பட்ட உலகில் வாழ்வதை விட்டு இறைவன் திருவடியில் விரைவில் சேர்வதே வித்தகர்களின் விசாரமாகி விடுகிறது என்று இதயம் இடிந்து இவ்வாறு பாடுகின்றார்கள்.
ஈஸ்வரபட்டரின் பதில்:-
நம்மாழ்வார் இயற்றி வெளியிட்ட அருட்பாக்களை ஆராய்ந்து இந்நிலையின் பொருளை விளக்குகின்றனர்.
நீதியைப் புகட்டும் நீதிபதியின் வாழ்க்கைத் தரத்தையும்… அந்த நீதிபதியினால் தண்டனைக்குட்பட்ட குடிமகனின் வாழ்க்கை நிலையையும்… இரண்டு வெவ்வேறு நிலை கொண்ட பொருளாதார அடிப்படையில் “இந்த ஞானவழிக்கும்… ஆத்மீக வழியின் தொடர் நிலைக்கும்” ஒப்பிட்டுப் பதம் காண்கிறனர்.
1.அவன் சென்ற வியாபார நோக்கின் வழி எண்ணத் தொடரின் செயலுக்கும்
2.நீதிபதியின் நற்போதனை நிலைக்கும்
3.வாழ்க்கை நிலையை இப்பொருளாதார ஏற்றத் தாழ்வை ஒப்பிட்டுச் செயல் காண்பது எந்த வழியில்… எந்த ஞானியாக இருந்தாலும் உத்தமம்…!
ஆத்ம நிலையை அறிய… இறை பக்தியை ஏற்றம் கொண்டு வழி நடந்திடும் இவ்வுணர்வுடையோர் இந்நிலையை ஒப்பிட்டு… இந்நிலையினால் தன் எண்ணத்தை விரக்திப்படுத்தி… இறைவனடி ஒன்று தான் உத்தம நிலை என்று “விலகிச் சென்று… ஆத்ம ஜெபம் என்ற இறை பக்தியை வளர்க்கின்றார்களாம்…!”
நீதிபதி தான் வந்த வழியில் நீதிக்காகச் செயல் கொண்டு செயலாற்றுவதற்கும் அவர் வாழ்க்கையின் பொருளாதார நிலைக்கும் ஒப்பிடலாகாது.
வியாபாரியின் நோக்கில் பல தவறுகள் நீதிக்கு புறம்பட்டதாக இருந்தும் பொருளாதார ரீதியில் உயர்ந்துள்ளதை வைத்து
1.இறைவனைப் பாகுபடுத்திட்ட நிலை தான்
2.இன்றைய மனிதர்களின் எண்ண நிலை எல்லாம்.
சத்தியத்திற்கும் தர்மத்திற்கும் அடிபணிந்தே வாழ்ந்தும் பல இன்னல்களை ஏற்க வேண்டியது உள்ளதே… “ஆண்டவனின் சோதனை நிலை” என்ற எண்ண நிலையிலேயே அப்பாகுபாடு என்னும் எண்ணமே…
1.தர்மவான் சத்தியவான் என்று வாழ்ந்தாலும்
2.தன்னையே குறுக்கிக் கொள்ளும் இந்த எண்ணத்தினால் தான்
3.இன்றைய இந்த உலகில் உள்ள சத்திய நியாயமும் மறைந்து வரும் நிலை.
சத்தியத்திற்குச் சோதனை வரும் என்ற எண்ண நிலையிலேயே அச்சோதனை நம்மைப் பற்றிக் கொள்கின்றது.
1.இந்நிலையில் சத்தியம் என்பது எப்படி ஜெயம் கொள்ளும்…?
2.எண்ணத்தில் உள்ள சத்தியத்தையும் தர்மத்தையும் இன்றைய மனிதன் சோதனையாக எண்ணி “நழுவ விட்ட காலம் இது…”
வாழ்க்கையில் பல தவறுகளைத் தவறென்று உணர்ந்தே செய்பவனும்… தன் எண்ண நிலையைச் சோர்வுக்கும் தோல்விக்கும் அடிபணிந்திடச் செய்திடாமல்… நன்மை தீமை கொண்ட எவ்வழிக்கும்… ஒரே எண்ணமுடன் சோர்வை அண்ட விடாமல் செல்பவனின் பொருளாதார வாழ்க்கை நிலையும் குடும்பத்தின் செயல் நிலையும் வளமுடன் தான் வாழ்கின்றன.
1.பல தவறுகள் செய்கின்றான்… அவனை ஆண்டவன் பார்ப்பதில்லை.
2.நல் உணர்வு கொண்ட நமக்கேன் சோதனை…? என்ற எண்ணத்திலேயே நம்மைத் தாழ்த்தி
3.அதனால் வரும் நம் ஆத்ம நிலையின் சோர்வினால்
4.நல் உணர்வுகளை நாம் பெற்றிருந்தாலும் நம் நிலையும் குன்றி நம் பொருளாதார நிலையும் கீழ்ப்பட்டு
5.நம்மையே நாம் குன்றச் செய்து கொள்கின்றோம்.
இவ்வண்ண நிலையில்தான் ஆண்டவனின் ஜெபமும் ஞான நிலையும் இறை பக்தியும் இவ்வுலகமும் இவ்வுலகைச் சார்ந்த அனைத்து உலகங்களுமே அடக்கம் பெற்று வாழ்ந்திடும்… “இவ்வாத்மாண்டவனின் (தனக்குள் இருக்கும் ஆண்டவன்) எண்ணத்தை உணர்ந்திடாமல்” வாழ்ந்திடும் மக்களின் எண்ணத்தையும்… நம் முன்னோர் சூட்சுமத்தில் வெளிப்படுத்திய நூல்களில் உள்ள உண்மை நிலையை உணர்ந்திடாமல்… மக்களின் எண்ணத்தையே கேள்விக்குறியாக ஆக்கிவிட்டார்கள் என்று சில நிலைகளினால்.
1.பக்தி… ஞானம்… பரம்பொருள்… பரமாத்மா… என்றே பல நிலைகளைப் போதனைப்படுத்தி
2.இறை பக்தியாக ஆத்ம ஜெபம் எடுக்கும் நிலையை இன்று உணர்த்துவாருமில்லை… செயல் கொள்வாரும் இல்லை.
3.இறைவனை எண்ணுவதே இப்பொருளாதார ஆசையின் அடிப்படையில் தான் (இன்றைய நிலை).
இவ்வண்ண நிலை கொண்ட நாம் எடுக்கும் சுவாசத்தினால் மட்டும்தான்… ஒவ்வொரு ஆத்மாவின் வழித்தொடர் நிலையுண்டு.
ஒரு குடும்பத்தில் உள்ள மூத்த தலைவனின் நிலைக்கொப்பதான் அவன் சேமித்துச் செயல் கொள்ளும் வழித் தொடரின் நிலையில்… எண்ணத்தினால் அவனைச் சார்ந்துள்ளோரின் நிலையின் எண்ணக் கலப்பும் வழித்தொடரின் செயல் நிலைகொள்கின்றது.
நம்மாழ்வார் இயற்றிய பாடல்களில் உள்ள நிலையின் அர்த்தத்தையே கால நிலைக்கு ஏற்ப இன்று உணர்த்துகின்றார்கள்.
1.உண்மைத் தத்துவ நிலை எது…?
2.உணர்ந்து செயல்பட வேண்டும்.