ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 28, 2020

நம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…!

பிற மண்டலங்களிலிருந்து வருவதை 27 நட்சத்திரங்கள் நவக்கோள்கள் கவர்ந்து வெளிப்படுத்துவதை சூரியன் கவர்ந்து தன் சுழற்சி வேகத்தால் அந்த அணுக்களில் உள்ள விஷத்தினைப் (அல்ட்ரா வயலட்) பிரித்து விடுகின்றது.
 
மனிதனுடைய ஆறாவது அறிவோ நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்த நஞ்சினை மலமாக மாற்றி அதை நீக்கிவிடுகின்றது.
 
இந்த மனித வாழ்க்கையில் எத்தனையோ பேருடன் நாம் பழகுகின்றோம்… பார்க்கின்றோம். ஆனால் சந்தர்ப்பத்தால் அவர்கள் படும் வேதனைகளைப் பார்த்தாலும் அந்த வேதனையான உணர்வுகள் நம் நல்ல எண்ணங்களில் இணைந்திடாது ஆறாவது அறிவு கொண்டு அதைத் தடுக்க வேண்டும்.
 
1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.அந்த அருள் உணர்வினை நம் நல்ல அறிவில் இணைத்து நல்ல அறிவு மங்கிடாது
3.எதனையுமே தெளிவாக்கிடும்… அந்த அறிந்திடும் தெளிந்திடும் அந்த அறிவை நாம் வளர்த்திடல் வேண்டும்.
 
ஆனால் வேதனை கொண்ட நிலைகள் கொண்டு விஷத்தின் தன்மையை இதிலே கலந்து விட்டால் இங்கே மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை உங்களால் நுகர முடியாது. நுகர்ந்தாலும் அதை வைத்து உங்கள் வேதனைகளை நிவர்த்தி செய்ய முடியாது.
 
1.அதாவது பிறிதொரு மனிதன் வேதனைப்பட்ட உணர்வு நம் நல்ல அறிவை மறைக்கும் போது
2.இன்னொரு சாதாரண மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து அதை மாற்ற முடியாது.
 
மாற்ற வேண்டும் என்றால் “வேதனை என்ற நஞ்சினை நீக்கி… அதை ஒளியாக மாற்றிடும்…” அந்த மகரிஷிகளின் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று உடலுக்குள் இணைக்க வேண்டும்.
 
மீண்டும் இதைத் தெளிவாக்குகின்றேன்…!
 
உங்கள் வாழ்க்கையில் நல்லது செய்வதாக எண்ணி ஒரு வேதனைப்படும் மனிதனை உற்றுப் பார்த்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் நல்லது செய்கின்றீர்கள்… உதவி செய்கின்றீர்கள்…!
 
ஆனால் உங்களிடமிருக்கும் நல்லது செய்யும் எண்ணத்திற்குள் அவரின் வேதனைப்பட்ட அந்த விஷமான உணர்வு இணைந்து உங்கள் நல்ல அறிவை மறக்கச் செய்கின்றது… மறைத்து விடுகின்றது. இதுதான் சிறு திரை – “சித்திரை…” என்பது.
 
அந்தச் சிறு திரையை உடனே நீக்க வேண்டும். அதை நீக்க வேண்டும் என்பதற்குத்தான் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்குகின்றோம்.
 
உங்கள் நினைவாற்றலை அங்கே ஞானிகளின் பால் ஒன்றச் செய்து இங்கே நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை உங்களுக்குள் இணைக்கின்றோம்.
 
உங்கள் நினைவாற்றலை அந்த மகரிஷிகளுடன்  இணைத்து விட்டால் அந்த வேதனையான உணர்வினை நுகர்வதைத் தவிர்த்து அருள் உணர்வுகளை வலுப் பெறச் செய்யும்.
 
அப்படி அந்த மகரிஷிகளின் உணர்வை வலுப்பெறச் செய்யும் நிலைக்குத்தான் உங்களுக்குத் தெரியாமலேயே இந்த உபதேசத்தின் வாயிலாக அதைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

உங்கள் நல்ல அறிவைக் காக்க இது உதவும்…!