ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 12, 2020

இந்த உடல் வாழ்க்கையில் வரும் வேதனைகளை மறக்க என்ன செய்ய வேண்டும்…?

நாம் எத்தனையோ கோடி ஜென்மங்கள் தாண்டித்தான் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்.
 
புலி ஒரு ஆட்டைக் கண்டால் எத்தனையோ வேதனைப்படச் செய்கிறது. கடித்துக் குதறி அதனுடைய ஜீவனை முழுங்குகின்றது. அதை பார்க்கின்றோம்.
 
வீட்டிலே பார்த்தால் ஒரு எலியைப் பூனை எத்தனையோ அவஸ்தைப்படச் செய்து அதைக் கொன்று குதறி உணவாக உட் கொள்கிறது.
 
நாய்கள் பூனைகளைக் கண்டாலே விரட்டிச் சென்று கடித்துக் குதறுகிறது. காக்காயோ குருவிகளோ இரைக்காக வேண்டி விட்டில் பூச்சிகளைக் கொத்தி எத்தனையோ இம்சை செய்து உணவாக உட்கொள்கின்றது என்று நாம் இதையெல்லாம் பார்க்கின்றோம்.
 
தேள் கொடூர விஷம் கொண்டிருந்தாலும் கீரிப்பிள்ளையோ அந்தத் தேளையும் உதறி உணவாக உட்கொள்கின்றது.
 
இப்படித் தான் பல கோடிச் சரீரங்களில் ஒன்றுக்கு இரையாகும் போது… அந்த உடலிலே துடிதுடித்து… வேதனை தாங்காது…
1.எது தன்னைத் தாக்குகின்றதோ அந்த நினைவிலேயே ஒங்கி வளர்ந்து
2.தன் உடலை மறந்து அந்த வலிமையான உடலுக்குள் உயிர் சென்று
3.அங்கே கருவாகி அந்த உயிரினமாகப் பிறக்கின்றது.
 
இதைப் போலத்தான் இன்று இந்த உடலிலே வரும் வேதனைகளை எல்லாம் மறந்துவிட்டு
1.மெய் ஞானியின் உணர்வை நாம் தொடர்ந்து
2.அதனின் உணர்வைப் பெற வேண்டுமென்று எண்ணிவிட்டால்
3.இந்த உடலின் வேதனைகள் அனைத்தும் இங்கே மடிகின்றது.
4.மெய் ஞானியின் உணர்வோடு நம் உணர்வுகள் ஒன்றுகின்றது
5.நாம் (உயிர்) அங்கே சென்றடைகின்றோம்.
 
இவ்வாறு அடையச் செய்வதற்குத்தான் தத்துவ ஞானி சூட்சுமத்தில் நடப்பதை எளிதில் கண்டுணர்ந்து மனிதன் தன்னைத் தானறிந்து கொள்ள சாஸ்திரங்களைப் படைத்தார்கள் அன்றைய ஞானிகள்.
 
தான் யார்…? இந்தப் பிள்ளையார்…? என்ற கேள்விக் குறியைப் போட்டு… கல்லால் சிலைகளை வடித்து யானையின் சிரசை மனிதனின் உடலில் பொருத்தி.. பல காரணப் பெயர்களை வைத்து உணர்த்தினர்.
 
1.அதன் மூலம் நம் மனித உடல் உருவான நிலையையும் உயிர் தோன்றியதையும்
2.அடுத்து நாம் எங்கே செல்ல வேண்டும் என்றும்… எந்த நிலையை அடைய வேண்டும்…? என்பதையும் காட்டினார்கள்.