நாம் பிறருடைய தீமைகளைப் பார்க்கும்போது நம் நல்ல உணர்வுகளை அந்த விஷத் தன்மையான
உணர்வுகள் மறைத்து விடுகின்றது. (ஒரு திரை போல்)
அப்படி மறைத்ததைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால்
1.அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் கவர்ந்து
2.அவ்வப்போது நம்மை மறைக்கும் அந்தச் சிறு சிறு திரைகளை அகற்றிட வேண்டும்.
3.அன்றன்று அறிவின் தன்மை கொண்டு நாம் தெளிவாக மாற்றிக் கொண்டே வர
வேண்டும்.
எதன் துணை கொண்டு…?
அதற்குத்தான் இப்போது இடை மறித்து இடைமறித்து உங்களுக்குள் ஞானிகளைப்
பற்றித் திரும்பத் திரும்ப உபதேசிகின்றேன். மீண்டும் மீண்டும் சொல்கின்றேன்
என்றால் உங்களுடைய உணர்வின் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு அந்த அருள் மகரிஷிகளின்
உணர்வை உங்களுடன் இணைக்கச் செய்கின்றேன் (ஞானகுரு).
1.உங்கள் ஒவ்வொரு அறிவிலும் (உணர்விலும்) இணைத்த பின்
2.தீமைகளைக் கவராது “அந்தந்த அறிவு” அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்.
அத்தகைய நிலைகளை உருவாக்கினால்தான்… இந்த மனித வாழ்க்கையில் வரும்
தீமைகளும் காற்று மண்டலத்தில் இருக்கும் நச்சுத் தன்மைகளும்… பிற மனிதன் செய்யும்
தவறான உணர்வும்… விஞ்ஞான அறிவால் ஏற்படும் தீமைகளும் நமக்குள் புகாது… நம்மை
இயக்காது… தடுக்க முடியும்.
பகுத்தறிவு கொண்டு படித்திடும் விஞ்ஞான அறிவை எழுத்து வடிவில் உற்றுப்
பார்த்து அதன் உணர்வை நாம் கவர்ந்து நமக்குள் பதிவு செய்து கொண்டாலும்… இங்கே பூமியிலே
பரவிக் கொண்டிருக்கும் உணர்வுகளை நாம் கவர்ந்தாலும்… அது எல்லாம் நம் ஆன்மாவில்
இணைந்து கொண்டே உள்ளது.
அதாவது… எப்படி இந்தப் பிரபஞ்சத்தில் தீமைகள் படர்ந்துள்ளதோ அது நம் பூமியான
இந்த பரமாத்மாவில் (காற்றிலே) வளர்ந்துள்ளதோ இதைப் போல நம் ஆன்மாவிலும் இது உண்டு.
அதே சமயத்தில் நம் உடலுக்குள் எண்ணிலடங்காத அணுக்கள் ஜீவான்மாக்களாக
வாழுகின்றது. ஆகவே இந்தப் பூமியில் எந்த அளவுக்குத் தீமைகள் பரவி உள்ளதோ அந்தத்
தீமையின் உணர்வுகளை நம் எண்ணத்தால் (நம் சந்தர்ப்பம்) பதிவாக்கி இருந்தால் அந்தத்
தீமையின் அணுக்கள் உடலுக்குள்ளும் விளையும். அந்த அணுக்கள் தீமைகளைத் தான் விளைவித்துக்
கொண்டே இருக்கும்.
ஏனென்றால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் இதற்கு முன் நாம் சேர்த்துக்
கொண்ட உணர்வுகள் அனைத்தும் எலும்புக்குள் ஊனாக இருக்கின்றது. அந்த எலும்புக்குள்
ஊனாக இருக்கப்படும் பொழுது அதனின் வளர்ச்சி
1.ஒரு மனிதனைக் கண் கொண்டு பார்க்கும்போது அவர் தவறு செய்கின்றார் என்று
பதிவாக்கி விட்டால்
2.மீண்டும் அதே நினைவு கொண்டு கண்ணுக்கு வரப்படும்போது
3.எந்த மனித உடலிலிருந்து தவறு செய்யும் உணர்வுகள் அலைகள் வந்ததோ
4.அந்த உருவத்தை நமக்குள் நுகரச் செய்து அதே கோபத்தின் உணர்வுகளையோ அல்லது
5.அவனைக் கண்டு அஞ்சியிருந்தால் அந்த அச்சத்தையோ நமக்குள் செயலாக்குகின்றது.
நமக்குள் பதிவு செய்த இந்த வித்து… “ஊழ்வினை” என்ற நிலையில் வினைக்கு
நாயகனாக அந்த உணர்வின் இயக்கமாக்கி நம்மை அதன் வழிகளில் வளர்த்துக் கொண்டுள்ளது.
அதைப் போன்ற தீமைகளை (வினைகளை) மாற்றுவதற்குத்தான் திரும்ப திரும்பச் சொல்லி
உங்கள் உணர்வின் ஈர்ப்புகளை ஞானிகளின் பால் கொண்டு வரச் செய்கிறோம்.
எந்த அளவுக்குக் கூர்ந்து பதிவாக்கி அந்த அருள் சக்திகளை எண்ணி உங்களுக்குள்
எடுக்கின்றீர்களோ முந்தைய நிலையில் உங்களுக்குள் சேர்ந்த தீய விளைவுகளையும் இதன் மூலம்
மாற்றி அமைக்க முடியும்
உபதேசத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் நோக்கமே அதற்குத் தான்…!