ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 24, 2019

ஒ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்றால் யாரை நினைக்க வேண்டும்…?


நம் உயிர் நமக்குள் “ஓ… ம்…” என்று இயங்கிக் கொண்டேயுள்ளது. நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்கிக் கொண்டே உள்ளது.

உயிர் ஓ… என்று இயக்கி ம்… என்று நம் உடலாக்கப்படும் பொழுது அவை அனைத்திற்கும் நம் உயிரே குருவாகின்றது… குருவாக இருந்து வழி நடத்துகிறது.

இந்த மனித வாழ்க்கையிலிருந்து என்றும் ஒளிச் சுடராக வளர்ந்திடும் அந்த உணர்வினை உயிரில் உருவாக்கிப் பெற்ற நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டர் அருளை நாம் இப்பொழுது ஏங்கிப் பெறுவோம்.

1.ஈஸ்வரபட்டரை எண்ணி ஏங்கித் தியானிக்கும் பொழுது நம் உயிர் அதை அணுவின் கருவாக்குகின்றது.
2.அப்படிக் கருவாக்கப்படும் பொழுது
3.நமக்குள் உருவாக்கும் ஈசனாக “நம் குரு வருகின்றது...!”

ஆக அவர் பெயரும் ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பெயரை வைத்தார்கள். அவர் வளர்த்த அருள் சக்தியைத் தான் இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்.

குருவாக உபதேசித்த அந்த உணர்வுகளைப் பதிவாக்கும் பொழுது
1.அது குருவாக இருந்து அரூப உணர்வை நமக்குள் உணர்த்தி
2.அவர் (ஈஸ்வரபட்டர்) பெற்ற வழியில் நம்மையும் அருளானந்தம் பெறும் நிலைகளுக்கு
3.அது குருவாக நம்மை அழைத்துச் செல்லும்.

அகஸ்திய மாமகரிஷியை நம் குருநாதர் கண்டுணர்ந்த அருள் வழியில் நஞ்சினை வென்றிட்ட அந்த உணர்வைப் பெற்ற குரு அருள் நமக்குள் உறுதுணையாக இருக்கும்.

உறுதுணையாக இருக்கும் நம் குருவின் துணையால்...
1.அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தியைக் கவரும் தன்மை பெற்று
2.இருளை வென்று ஒளியை உருவாக்கும் உணர்வின் சக்தியைப் பெறும் தகுதிக்கே
3.இந்தத் தியானத்தை மேற்கொள்கின்றோம்.

ஆகவே ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று எண்ணும் பொழுதெல்லாம்
1.நமது உயிரும் நம் குருவும் இணைந்தே வருகின்றார்கள்.
2.இந்த இணைந்த உணர்வுடனே குரு அருளை நமக்குள் பெறுவோம் என்ற
3.ஏக்க உணர்வுடனே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தியானிப்போம்.