ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 4, 2019

ஆறு நிலை கொண்ட உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


உணர்வுடன் கூடிய எண்ணத்தால் ஞானத்தின் சக்தி கொண்டு… பக்தி என்ற முறைப்படுத்தி உயர் சக்தியை ஞான வழியின் ஜெபமாக்கி… நமக்கு மேல் உயர்ந்த சக்தி கொண்ட சப்தரிஷிகளின் அலையை நாம் எடுக்க எடுக்க… நற்சக்தியின் அமில குணங்கள் நமக்குள் வளர்ச்சியாகிப் பெருகும்.

அப்படிப் பெருகத் தொடங்கினால் உடலுடன் கூடிய உணர்வான
1.சோம்பல்
2,தூக்கம்
3.பசி
4.காம இச்சைகள்
5.உடல் கழிவுகளின் உந்தல்
6.உடலில் ஏற்பட்டுள்ள வியாதியின் வலிகள் என்ற இந்த ஆறு நிலைகளும்
7.உணர்வால் வெளிப்படும் நிலைதனை நம்மால் மாற்றி அமைக்க முடியும்.

தன் எண்ண பலத்தால் எத்தன்மையான சோர்வு வந்தாலும் எண்ணத்தின் நிலைக்கொப்ப “சோர்வை…” அகற்ற முடிகின்றது.

“தூக்கத்தையும்…” நம் வேலையின் நேரத்திற்கொப்ப உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு மாற்றி அமைக்க முடிகின்றது.

எண்ணத்தால் வேறு ஒரு செயலில் உள்ள பொழுது “பசியையும்…” மாற்ற முடிகிறது.

உடல் “காம இச்சையையும்…” மனிதனால் இச்சைக்குகந்த நிலையில் செல்லாமல் ஒழுங்குமுறைப்படுத்திக் கொள்ள முடிகிறது.

அதே போல் “உடல் வியாதியையும்…” எண்ணத்தால் அவ்வலியையே மறக்கக்கூடிய தன்மை மனிதனுக்கு உண்டு.

உணர்வால் உந்தப்படும் உடலின் இச்சைகளையே ஒழுங்குநிலைப்படுத்தி
1.உணர்வின் தன்மையில் செல்லாமல்
2.ஞானத்தால் கால நிலை அனுசரித்து
3.உடல் பிம்ப உணர்வு உந்தலின் அலையையே
4.எண்ணத்தால் ஒழுங்குபடுத்துகின்றான் மனிதன்.

எண்ணத்தைக் கொண்டு எச்செயலையும் செய்விக்கும் மனிதனைப் போல் மிருகங்களின் நிலைக்கு இல்லை.

அதன் உடலில் ஏற்படும் உணர்வின் உந்தலானது ஞானத்தின் எண்ணம் கொண்டு மாற்றியமைக்கக்கூடிய பக்குவமும் செயல் திறனும் மிருகங்களுக்கு இல்லாததனால்தான் மனிதனை ஒத்த உணர்வை மாற்றியமைத்து வாழ்க்கை என்ற சமுதாயப் பிணைப்பு ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

ஆனால் மனிதன் தன் எண்ணத்திற்குகந்த வளர்ச்சி செயல் ஞானத்தைச் செய்விக்கின்றான். உணர்வை மாற்றி அமைக்கக்கூடிய எண்ணம் செயல் மற்ற இனங்களுக்கு இல்லை.

உணவைத் தேடி உண்டு கழித்து உறங்கி காம இச்சையின் இனப் பெருக்க உணர்வும் உடல் பிணியில் உண்டாகும் அவஸ்தையில் சர்வ சதா அவ்வலியின் தன்மையுடன் ஒன்றியும் உணர்வை மாற்றியமைக்க முடியாத நிலை தான் மற்ற இனங்களுக்குண்டு.

மனிதனின் ஞானம் எவ்வுணர்வையும் கால நிலை சூழ்நிலை இதன் வட்டத்தைக் கொண்டு ஒழுங்குமுறைப்படுத்தித் தன் ஞானத்தால் உணர்வின் எண்ணத்தையே செயல்படுத்தும் திறன் பெற்றது.