ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 29, 2019

அக்னி குண்டம் எதற்காக இறங்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்…!


குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்…? எத்தனை வேலைகளைச் செய்திருப்பார்…! அவருக்குள் விளைந்த உணர்வின் உணர்ச்சிகளைக் கவரும் ஞான வித்தாக எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்தார்.

அவர் வழியில் அதைச் செய்யப்படும் பொழுது அனுபவபூர்வமாகத்தான் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன். அதைத் தான் இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் பேரளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள் என்றால் அது உங்களுக்குள் சென்று தீமையின் உணர்வுகளை அது கருக்கிவிடும்.

இதை உணர்த்துவதற்குத்தான் மாரியம்மன் கோவில்… காளியம்மன் கோவில்… அங்களேஸ்வரி கோவில்.. துஷ்ட தேவதைகள் ஆலயங்களில் எல்லாம் “அக்னி குண்டம்…” இறங்குவதற்கு வைத்திருப்பார்கள்.

கொடூரமான நிலைகளில் நாம்…
1.பயந்தோ
2.வெறுப்படைந்தோ
3.கோபப்பட்டுக் கொதித்தெழுந்தோ
4.அஞ்சி வேதனைப்பட்டோ நாம் சுவாசித்த உணர்வுகள் எல்லாம் நம் உடலுக்குள் அந்தச் சக்தியாக வளரப்படும் பொழுது
5.நம் நல்ல குணங்களை அது கொன்று கொண்டேயிருக்கும்.

அதனால் தான் காளிக்கு முன்னாடி புலியும் அங்களேஸ்வரி கோவிலில் ஒரு குழந்தையை மடியில் வைத்து தன் குழந்தையையே பிளந்து மாலையாகப் போட்டுக் கொண்டிருப்பதாகவும் காட்டியிருப்பார்கள்.

நல்ல குழந்தைகளைக் கருவுறும் இந்தத் தன்மையை அதாவது நல்ல அணுக்களாக உடலுக்குள் விளைவதைப் பிளந்து விடுவதை அப்படிக் காட்டுகின்றார்கள்.

 சிலர் மற்றவர்கள் நன்றாக இருப்பதைப் பார்த்து அங்கலாய்வார்கள்…! அவன் அப்படி வந்திருக்கின்றான்… இவன் இப்படி வந்திருக்கின்றான்.. என்ற இதைப் போன்ற உணர்வுகளை நுகரப்படும் பொழுது அது அங்களேஸ்வரி…!

அந்த அங்கலாய்ப்பு தான் வருகின்றதே தவிர…
1.நமக்குள் அந்த உயர்ந்த சக்திகளை
2.அவர்கள் வளர்ந்த முறையில் நாமும் வளர வேண்டும் என்ற இந்த எண்ணமே இங்கே வருவதில்லை.

அப்பொழுது நமக்குள் வளரும் அந்தச் சக்தியை நாமே பிளந்து அதனின் வளர்ச்சியைக் குன்றச் செய்து நாம் மாலையாகப் போடுவது போன்று ஆகின்றது. மாலை என்றால் நாம் வெளியிலே தான் போடுகின்றோம்.
1.இந்தத் தீமையை உருவாக்கும் உணர்வுகளைத்தான் நம்மால் வளர்க்க முடிகின்றதே தவிர
2.அந்த நல்லதைப் பெற முடியவில்லை.
3.அந்தத் தீமைகளை அகற்ற என்ன வேண்டும்…?

ஒரு தீமையைக் காண நேர்ந்தால்… உதாரணமாக ஒருவர் வேதனைப்படுகின்றார் பார்க்கின்றோம் அது மாறி அந்த வேதனையின் அணுக்கள் நம் உடலில் விளைகின்றது. ஏனென்றால் வேதனைப்படுவோரைக் கேட்டுணர்ந்த பின் தான் உதவி செய்கின்றோம்.

அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் அதே அணு நமக்குள் உருவாகின்றது. அந்த வேதனை அணுக்கள் உருவாகி விட்டால் அதே தன் தாயாக அந்த வேதனயை உருவாக்கும் அணுக்களைப் பெருக்குகின்றது.

அதைக் குறைக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்குத்தான் விநாயகர் அருகில் அரச மரத்தை வைத்திருக்கின்றார்கள். பிரபஞ்சத்தில் ஏற்படும் நச்சுத் தன்மைகளை ஒடுக்கிய உணர்வை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக (அரசாக – அரச மரம்) இருக்கும் அதனின்று வரும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

துருவ தியானத்தின் மூலம் உங்களுக்குக் கொடுக்கும் அந்தச் சக்தியின் துணை கொண்டு எப்பொழுது தீமைகளைப் பார்க்கின்றீர்களோ ஈஸ்வரா என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்றும் அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் கண்களைத் திறந்து ஏங்கி நினைவை மறுபடியும் உங்கள் உயிருடன் ஒன்றுங்கள்.

அந்த அருள் சக்திகள் அனைத்தும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களில் படர வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.

மாரியம்மன் கோவிலில் அக்னி குணடம் இறங்குவது போல் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்திவிட்டால் அந்தத் தீமை என்ற நிலை வராது கருக்கி விடும்… அதன் வலுவை இழக்கச் செய்யும்…!

தீமை செய்யும் சக்திகள் நமக்குள் ஜீவன் பெறாது தடுக்கப்படுகின்றது. அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்கும்.