ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 10, 2019

நம் நினைவின் ஆற்றல் “அகஸ்தியன் சென்ற பாதையிலேயே செல்ல” என்ன செய்ய வேண்டும்…?


காலையில் எழுந்தவுடனே ஒரு நினைவாகவே அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி நீங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து நீங்கள் வீட்டை விட்டு வெளியிலே செல்லும் பொழுது அல்லது ஒரு தொழிலை ஆரம்பிக்கும் பொழுது
1.அகஸ்திய மாமகரிஷியையும்
2.துருவ மகரிஷியாக ஆன உணர்வையும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும்
4.இந்த மூன்று நிலையையும் எண்ணிப் பழக வேண்டும்.

அந்த உணர்வுகள் தனக்குள் பெறவேண்டும் என்று எண்ணிவிட்டு தொழிலோ மற்ற காரியங்களோ அல்லது எதைச் செய்கின்றீர்களோ அதைச் செய்ய ஆரம்பியுங்கள்.

நீங்கள் நுகர்ந்த இத்தகைய உணர்வுகளை எல்லாம் உங்கள் உயிர் அணுவாக உருவாக்கும் கருக்களாக உங்கள் இரத்தநாளங்களிலே பெருக்கச் செய்யும்.

அந்தக் கரு வளர்ச்சிகள் பெற்று அகஸ்தியனின் அருளை எளிதில் பெறக்கூடிய தகுதி உருவாகி உடலில் உள்ள இரத்தநாளங்களில் அந்த அணுக்கள் பெருகத் தொடங்கும்.

1.முதலில் கரு என்பது முட்டை
2.பின் அதனின் உணர்வின் தன்மையை நாம் இவ்வாறு ஒவ்வொரு நாளும் எண்ண எண்ண
3.அந்த அணுக்கள் வளர்ச்சி அடைந்து முழுமை ஆகி விடுகின்றது.

ஒரு கோழி தான் இட்ட முட்டையை எப்படி அடைகாக்கின்றதோ அதன் உணர்வின் தன்மை உடலின் வெப்பமாக்குகின்றதோ அதன் பின் அந்த வெப்பத்தின் துடிப்பு கொண்டு அந்தக் கருக்கள் எல்லாம் அதன் இனக் குஞ்சாக விளைகின்றது.

குஞ்சாக ஆன பின் வெளி வந்து இந்தக் கோழி எந்த உணவை உட்கொண்டதோ அதே உணவை இதுவும் உட்கொள்ளத் தொடங்குகின்றது.

இதைப் போன்று தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும்  தியானத்தின் மூலம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் கருவாக உருவாகின்றது.
1.அதனுடைய நினைவுகளை நீங்கள் கூறக் கூற அந்த முட்டையின் வளர்ச்சி பெறுகின்றது.
2.அந்த எண்ணங்களை அடிக்கடி நீங்கள் எண்ணும் பொழுது அதை அடைகாக்கின்றது.

ஏனென்றால் கோழி தன் குஞ்சின் நினைவு கொண்டு அதை அடை காக்க “எங்கிருந்தாலும்” எப்படி இரை தேடி விட்டு வந்து அடை காக்கின்றதோ அதைப் போல
1.நீங்கள் எத்தொழிலைச் செய்தாலும்
2.எந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாலும்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் விளைய
4.நீங்கள் அடிக்கடி இந்த நினைவுகளை எடுத்துப் பழகுங்கள்.

அதாவது முதலில் நாம் பதிவாக்கி வளர்த்துக் கொண்ட அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் சக்தியை அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி நாம் வளர்க்கும் திறனாக… “அடைகாப்பது போன்று” செயல்பட்டால் அந்த அருள் சக்திகள் உடலில் விளைகின்றது.

முட்டையிலிருந்து வெடித்து வந்த குஞ்சு தான் இரை தேடும் பொழுது… தாய்க் கோழி “கத்தி…” அதற்கு இரையைக் கொடுக்கின்றது;

இதைப் போல நமக்குள் அந்த மகரிஷிகளின் அணுவின் கருவாகி விட்டால் இந்த உணர்ச்சியின் கிளர்ச்சிகள் நம்  இரத்தநாளங்களிலே கிளம்பும் போது
1.நமது உயிர் அந்த உணர்வுகளை உணர்ச்சிகளாக அதை வெளிப்படுத்தி
2.காற்றுக்குள் கலந்துள்ள அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எல்லாம்
3.கண் வழியும் காது வழியும் உடல் வழியும் நாம் சுவாசிக்கும் அந்த உணர்வின் வழி நமக்குள் கொண்டு வந்து
4.சுவாசிக்கச் செய்து உடலுகுள் பரவச் செய்து மீண்டும் அந்தக் கருக்களை உருவாக்குகின்றது.

நாம் இந்த வழியில் தொடர்ந்து நடந்தால்… அது வளர்ச்சி பெற்ற பின்… நம்முடைய நினைவின் ஆற்றல் “அந்த அகஸ்தியன் சென்ற பாதையிலேயே செல்லும்…!”