ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 24, 2019

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் முக்கியத்துவம்


இந்த உடலை வளர்க்கத் தான் எல்லா இதுகளும் முயற்சிக்கின்றது. ஏனென்றால் எது உருவானதோ அதற்கு அந்த உணவு தேவை. அது கொடுக்கவில்லை என்றால் அது சோர்வடையும்.

இப்படித்தான் வழக்கத்தில் இருந்து கொண்டே உள்ளது.

இருப்பினும்…
1.பரிணாம வளர்ச்சியில் தீமைகளை நீக்கி நீக்கி வளர்ச்சி அடைந்து வந்த நாம்
2.மீண்டும் வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் சங்கடம் இனம் புரியாத நிலைகளைச் சேர்த்துக் கொள்கின்றோம்.

நாம் படிப்படியாக வளர்ச்சிக்கு வந்து மனிதனாக வந்தோமோ அதே போல் தேய்பிறையாகும் பொழுது படிப்படியாக எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப
1.நம் ரூபங்களை மாற்றிக் கொண்டேயிருக்கும் நம் உயிர்.
2.அது ஒன்று மட்டும் மாறுவதில்லை.

ஆக இந்த உடலில் உள்ள உணர்வுகள் மாறுகின்றது. இந்த உணர்வுக்கொப்ப அடுத்த சரீரம் அமைகின்றது.

வேதனையை நீக்கும் சக்தி பெற்ற மனித உடலாக வேதனையை நீக்கும் எல்லா ஞானமும் இருக்கின்றது. அவ்வப்பொழுது அந்த நொடியிலேயே தீமைகளையும் துயரங்களையும் நீக்கிக் கொண்டால் நமக்கு அந்த நோய் வராது.

அத்தகைய நோய் வந்தாலும் கூட… நாம் அதை மறக்க இந்த முறைப்படி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
4.இப்படி நாம் ஆத்ம சுத்தி செய்து மாற்றிக் கொண்டு வர முடியும்.

ஏனென்றால் அந்த வேதனையை மறக்க இதை நாம் எடுத்தால் அது மறைகின்றது. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் சிறுகச் சிறுகப் பெருகுகின்றது.

விஷத்தின் தன்மையை நீக்கியது அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக ஆனது. மனிதனில் மிக உயர்ந்த நிலைகள் பெற்றது தான் அந்தத் துருவ நட்சத்திரம்.

ஒரு சமயம் சூரியனே அழியலாம். ஆனால் இந்தத் துருவ நட்சத்திரமும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலங்களும் என்றும் அழிவதில்லை. வருவதை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

இந்த மனித உடலில் உயிரைப் போலவே இருளை நீக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன்.

நாம் எப்படிப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்தோமோ… அதே போல்
1.பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த அந்த அகஸ்தியனின் உணர்வை நாம் எடுத்தோம் என்றால்
2.அவன் ஒளியாக மாற்றிச் சென்ற பாதையில் வளர்ந்து செல்ல முடியும்.

வெறுப்பையும் கோபத்தையும் சங்கடத்தையும் சலிப்பையும் குரோதத்தையும் வளர்த்துக் கொண்டே வந்தால் நாம் மீண்டும் தேய்பிறையாகி இதை எல்லாம் நோயாகி தேடி வைத்த செல்வத்தையும் பாதுகாக்க முடியாதபடி செல்கின்றோம்.

1.ஆனால் செல்வமும் கூட இருக்கும்
2.இருந்தாலும் நன்றாகச் சாப்பிடக்கூட முடியவில்லையே என்ற இந்த வேதனை வந்துவிடுகின்றது.
3.ஆக நம் உடலில் முடியாது போய்விடுகின்றது.

இதை எல்லாம் கொஞ்சம் யோசனை செய்து… தியானம் ஏன் செய்ய வேண்டும்…? என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் மூலம் அடிக்கடி வரும் சலிப்பையோ சங்கடத்தையோ வெறுப்பையோ வேதனையையோ நமக்குள் நிலைத்திருக்காது அதைத் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கு முன்னாடி நமக்குள் மற்ற உணர்வுகள் விளைந்திருந்தாலும் அதனுடைய வலிமையும் அதிகம் தான்.

இருந்தாலும்… இப்பொழுது ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் மூலம்
1.உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் நேரடியாகவே
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
3.முந்தைய அணுக்களும் நல்ல அணுக்களாக மாற்றமடையும்.

எது எப்படி இருந்தாலும் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கடைப்பிடித்து வந்தால் சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கின்றது... மன உறுதி கிடைக்கின்றது… வாழ்க்கையில் எப்படிச் சீர்படுத்தலாம் என்ற சிந்தனையும் கிடைக்கின்றது.

அதனால் இந்த ஆத்ம சுத்தி செய்வோர் அனைவரும் மன அமைதிப்படுத்தி அமைதியான வாழ்க்கை வாழலாம். என்றுமே ஏகாந்த நிலையில் அமைதியான துருவ நட்சத்திரம் இருப்பது போன்று நாமும் அந்த ஏகாந்த நிலை பெற முடியும்.

ஏனென்றால் மனிதனின் கடைசி நிலை இது…!