ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 2, 2019

சுயநலமின்றிப் பொது நலம் வளராது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


1.தன்னலத்தை வளர்த்துத் தான் பிற நலத்தை வளர்க்க முடியுமே அன்றி
2.பிறர் நலத்தால் தன் நலம் என்றுமே வளராது.

உருவாகும் சக்திக்கே சுயநலம் தான் காரணம்…! ஜீவ சக்தி கொண்ட துடிப்பனைத்திற்குமே சுயநிலையுடன் கூடிய தன்னலம் கொண்ட சுய நலம் உண்டு.

சுயநலமில்லா எச்சக்தியும் வளர முடியாது. உணர்வின் எண்ணத்திற்கே சுயநலம் உண்டு.

சுயநலம் கொண்டு தான் முருகனைப் படைத்த போகனும் செயல் கொள்கின்றான். வெங்கடாசலபதியைப் படைத்த கொங்கணவனும் செயல்படுகின்றான்.

சூரியனாக உருளும் சூரிய தேவனின் சக்தியும் சுயநலம் கொண்டு தன் வளர்ப்பைத் தான் ஈர்த்துப் பிற மண்டலங்களுக்குச் சூரியனின் சக்தி செல்கிறது.

மிதந்து கொண்டேயுள்ள இப்பேரண்டத்தில் உருண்டோடுகின்ற மையப்புள்ளியாக தன் சுயநல வளர்ப்பின் சக்தி கொண்ட பெரிய மண்டலமான சூரிய மண்டலம் தன் வளர்ப்பின் சக்தி வளர சூரியனின் குடும்ப மண்டலமாக உள்ள நாற்பத்தியேழு மண்டலங்களையும் தன் ஈர்ப்பின் வட்டத்தின் சுழற்சியுடன் வளரவிட்டுக் கொள்கிறது.

வளர்ந்த மண்டலங்களின் அமில சுழற்சி கொண்ட அலையைச் சூரியன் தனக்குணவாக எடுத்துத் தன் வளர்ப்பில் தன்னைச் சார்ந்துள்ள பிற மண்டலங்களையும் வளர்க்கச் செய்கிறதேயன்றி சுயநலமின்றிப் பிற நலமாக எதுவும் செயல்படவில்லை.

சூரியனானாலும் சரி… வளர்ந்தோடும் மற்றெல்லா மண்டலங்களும் சரி… சப்தரிஷிகளானாலும் சரி… சப்தரிஷியின் தொடர் கொண்ட சகல ஜீவ உணர்வு உயிரணுக்களும் சரி… எல்லாமே சுயநலத்தின் தொடர் படைப்புத்தான்.

ஆதிசக்தியின் சக்தி என்கிறோம்…!
1.அச்சக்தியே ஆக்கல் காத்தல் மாற்றல் என்ற சுழற்சி சுயநலம் கொண்டு தான் படைக்கின்றான்
2.படைப்பின் பலன் காணுகின்றான்
3.மீண்டும் படைப்பின் படைப்பையே உருவாக்க படைத்ததை மாற்றி மாற்றி அழிக்கின்றான்.
4.உரு மாறி மாறி சக்தி நிலை செயல்பட்டால் தான் சக்தியின் சக்திக்கே சக்தி கூடுகின்றது,

ஒன்றான சக்திக்கு ஜீவன் ஏது…?

ஒன்று ஒன்றுடன் சேர்ந்து இரண்டு ஒன்றாகி… ஒன்றுடன் பிறிதொன்று சேர்ந்து இரண்டாகி.. ஒன்றாகி… இரண்டாகி… ஒன்றாகி…
1.சுயநலம் கொண்டு கருவாகும் சக்தி அலை இருந்தால் தான்
2.படைப்பின் பொருள் வளர்ந்து கொண்டே இருக்கும்.

சுயநலம் கொண்ட வாழ்க்கை தான் மனித வாழ்க்கை.

சுயநலம் கொண்டு பிறர் நலம் காணுங்கள். ஆக… தன் வளர்ச்சியைக் கொண்டு தான் பிற வளர்ச்சியை நிச்சயம் வளர்க்க முடியும்…!