ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 28, 2019

தியானத்தில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை…! ஒன்றும் கிடைக்கவில்லை...! என்று சொல்வதன் காரணம் என்ன…?

துருவ நட்சத்திரத்தின் பெரருள் பேரொளி பெறவேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்திகள் படர வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தியானம் செய்கின்றோம்…!

சிலருக்கு அந்த அணுக்கருவின் தன்மை வலுவாக வளர்ந்திருக்கும். ஆகவே அந்த வளரும் பருவத்தில் இருக்கும் பொழுது அவர்களால் துருவ நட்சத்திர ஒளி அலைகளைக் காண முடிகின்றது. நுகரும் பொழுது அபூர்வ மணங்களையும் சுவாசிக்க முடிகின்றது.

இருந்தாலும் சிலரால் இதை உணர முடியாத நிலைகள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள்
1.தியானத்தில் நமக்கு ஒன்றும் தெரியவில்லையே… கிடைக்கவில்லையே…! என்ற எண்ணத்தையே விட்டுவிடுங்கள்.
2.நாம் நிச்சயம் பெறுகின்றோம்… பெற்றுக் கொண்டிருக்கின்றோம்…!

ஒரு தோசையைச் சுடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அடியில் தணல் அதிகமாகிவிட்டால் ஒரு பக்கம் தோசை கருகி விடுகின்றது. கருகிய பக்கம் நாம் தோசையைப் பிரட்டினால் சட்டியில் ஒட்டிக் கொள்கிறது.. சீராக நாம் தோசையை எடுக்க முடிவதில்லை.

அதற்கு நாம் என்ன செய்கின்றோம்…? நீரைத் தெளிக்கின்றோம். ஒட்டிய இடங்களில் எண்ணையைப் போட்டுத் தேய்த்து எண்ணைய் பசையைக் கொண்டு வருகின்றோம்.

அப்பொழுது அந்தச் சூட்டின் தன்மையை அங்கே சமப்படும் பொழுது அடுத்து தோசையைச் சுடும் பொழுது கருகாதபடி சட்டியில் ஒட்டாதபடி சீராக வருகின்றது.

இதைப் போன்று தான் வாழ்க்கையில் சிலருக்கு எத்தனையோ விதமான கொதித்தெழும் உணர்வுகள் உடலிலே வளர்ந்திருக்கும்.

1.என்னை மோசம் செய்தார்கள்…
2.என்னை எப்படியெல்லாம் சங்கடப்படுத்தினார்கள்…? கேவலப்படுத்தினார்கள்..?
3.இன்றும் எப்படி எப்படி தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்…? என்ற
4.ஆவேச உணர்வுகள் தொடர்ந்து உள்ள அவர்கள் உடல்களில்
5.தியானத்தில் ஒளி அலைகளையோ… மணங்களையோ… அறிவது கொஞ்சம் கடினம்.

ஏனென்றால் தியானம் இருக்கும் பொழுதே அந்தத் தியான நினைவே இருக்காது. டக்… என்று வேறு வேறு பக்கம் நினைவுகள் சென்றுவிடும்.

இரண்டு வார்த்தை மூன்று வார்த்தை சொல்லும் பொழுது இருக்கும் நினைவுகள் அடுத்து… அதற்கப்புறம் தொடர்ந்து… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகரவிடாதபடி அசையாது நிறுத்திவிடும்.

இல்லை என்றால் தியான நினைவு வரப்படும் பொழுது ஏற்கனவே பட்ட சங்கட அலைகளோ வெறுப்பு அலைகளோ ஊடுருவும்.

தியானமிருக்கும் பொழுது
1.அடுத்து அங்கே போக வேண்டும்…
2.இதைப் பார்க்க வேண்டும்… அதைச் செய்ய வேண்டும்… தொழிலைச் சீராக்க வேண்டும்…
3.குடும்பத்தில் பையனோ பிள்ளையோ இப்படி இருக்க வேண்டும் என்ற இந்த அலைகள் வந்தால்
4.அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வராது தடுத்துக் கொண்டே இருக்கின்றது என்று பொருள்…!

தியானத்தில் இப்படி ஒன்றும் தெரியவில்லை என்றாலும் கூட அடுத்து நாம் தியானிக்கும் பொழுது மீண்டும் கண்களைத் திறந்து  கண்ணின் நினைவு கொண்டு அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இந்த நினைவை மறக்காது எடுத்துப் பழக வேண்டும்.

மீண்டும் மீண்டும் அந்த உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்தல் வேண்டும்.

உங்கள் அனைவருக்குமே அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் தான் யாம் (ஞானகுரு) தொடர்ந்து உபதேசிக்கின்றோம்.. தவமிருக்கின்றோம்.

உபதேசிக்கும் இந்த உணர்வுகளை யாரெல்லாம் உற்று நோக்கி உணர்வைக் கூர்மையாக எண்ணுகின்றார்களோ அவர்கள் உடலில் உள்ள ஊன்களில் ஞான வித்தாகப் பதிவாகிவிடுகின்றது.

1.“பதிவானதை மீண்டும் மீண்டும் எண்ணினால்…”
2.உங்கள் நினைவாற்றல் அங்கே துருவ நட்சத்திரத்திற்கே செல்லும்.
3.அந்த ஒளி அலைகளையும் மணங்களையும் நுகர முடியும்… காண முடியும்.

ஆகவே ஞானிகளைப் பற்றிய பதிவுகள் என்பது மிகவும் முக்கியம்…! “ஞான வித்து நம் உடலிலே ஊனிலே பதிந்திருந்தால் தான்…” அந்தச் சக்திகளைக் கவர முடியும்.