ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 31, 2019

“இது இவருடைய குணாதிசயம்...” என்று சொல்கிறோம்.. அது அவருக்கு எப்படி அமைகிறது…?


ஒரு மனிதன் நமக்குத் தீங்கு செய்கின்றான்.. தீங்கு செய்கின்றான்.. என்ற உணர்வை நுகர்ந்தால் அதை நம் உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி எந்த உணர்வின் சத்தை நுகர்ந்தோமோ அந்த உணர்வின் அணுக்கருவாக அது நம் இரத்தநாளங்களில் உருப்பெறுகின்றது.

நாம் உற்று நோக்கிய உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் பதிவாகின்றது. இப்படி நமக்குள் பதிவான உணர்வுகள் என்ன செய்யும்..?

1.வெறுப்பை ஊட்டிய அந்த மனிதனை அடிக்கடி நாம் எண்ணி அந்த உணர்வை நுகர்வோம் என்றால்
2.நம் உடலுக்குள் அது அணுக்கருக்களாகின்றது.. முட்டையாகின்றது
3.அதை மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அதை அடைகாத்தது போல் ஆகி அணுவாக உருப்பெறச் செய்கின்றோம் நாம் முதலிலே.

அணுவாக உருவாக்கிவிட்டால் அந்த அணு வெறுப்படையச் செய்யும் உணர்வையே அது நுகர்கின்றது.
1.அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது
2.அந்த உணர்ச்சிகள் நம் இரத்தநாளங்களில் பரவுகின்றது.

இரத்தம் எல்லா இடங்களுக்கும் செல்லப்படும் பொழுது அங்கே சிறு மூளை பாகமும் செல்கிறது.
1.சிறு மூளைக்கும் உயிருக்கும் இருக்கும் தொடர்பு வழியில் (கவன ஈர்ப்பு நரம்பு)
2.இந்த உணர்ச்சிகளை உயிர் கவர்ந்து நம் கண் காது மூக்கு செவி உடல் என்ற இந்த உறுப்புகளுக்கு ஆணையிடுகின்றது.

அந்த ஆணைப்படி இவை அனைத்தும் கவர்ந்து நுகரச் செய்கின்றது.

நுகர்ந்த உணர்வை நம் உயிர் உடலுக்குள் பரவச் செய்கின்றது. அப்படிப் பரவச் செய்யும் பொழுது இந்த இரத்தநாளங்களில் வழி உடல் முழுவதும் பரவச் செய்கின்றது.

இதை நாம் உணர்ந்து கொள்வதற்காக ஞானிகள் காவியத் தொகுப்புகளைக் காட்டியுள்ளார்கள்.

அதாவது நாம் எதை எல்லாம் எண்ணுகின்றோமோ மகா விஷ்ணு (உயிர்) வரம் கொடுக்கின்றான்… காக்கின்றான்…! என்று தெளிவாக்குகின்றார்கள்.

சுவாசித்து நம் உடலில் இப்படிச் சுழலப்படும் பொழுது அதன் வழி உணர்வை நுகரப்படும் பொழுது அதன் வழி உருவான அணு
1.யார் வெறுப்படையும் செயலைச் செய்தனரோ
2.அதே வெறுப்பின் தன்மை கொண்டு குருவாக நமக்குள் அடைகின்றது.

இதே போல் ஒரு கோபப்படும் உணர்வு வரப்படும் பொழுது ஒருவன் கோபப்படும் பொழுது எந்தெந்த வழிகளில் செயல்பட்டானோ… அதன் வழிப்படி அது குருவாக இயக்கத் தொடங்கிவிடும்.

ஒவ்வொரு குணங்களும் இப்படித்தான் நம்மை இயக்குகிறது…!

நமக்குள் எந்தெந்த குணங்கள் கொண்டோமோ அந்தக் குணங்களின் தன்மை கொண்டு குருவாக இயக்கப்படும் பொழுது
1.அதிலே எந்தக் குணத்தை நாம் அதிகமாக நேசிக்கின்றோமோ
2.அந்தக் குணத்தின் செயல்கள் நமக்குள் அதிகமான பின்
3.அது நம்மை ஆட்சி புரியும் சக்தியாக மாறிவிடுகின்றது.

இதனை உணர்த்துவதற்குத்தான் மூஷிகவாகனா என்றார்கள். அதாவது நாம் சுவாசித்த உணர்வுகள் அது வாகனமாக அமைந்து வாழ்க்கை நடத்தச் செய்கிறது.

உதாரணமாக நாம் கோப குணத்தை அதிகமாக எண்ணினால்… அதையே அடிக்கடி பட்டால்.. அதுவே குரு வழியில் கணங்களுக்கு அதிபதியாகி நம் நல்ல குணங்களை எல்லாம் அடக்கி ஆட்சி புரியத் தொடங்கிவிடும்.

1.ஆட்சி புரியத் தொடங்கிவிட்டால் அதன் உணர்வு எதுவோ
2.அதன் வழி மற்றதைத் தனக்குள் இயக்கும்படிச் செய்யும்.
3.இயங்கவில்லை என்றால் அதை இது அடித்து மாய்த்துவிடும்.

இதைப் போன்று தான் நம் நாட்டில் மட்டுமல்ல… உலகம் முழுமைக்குமே நல் ஒழுக்கம் கொண்டு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றியும் நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் ஞானிகள் காவியங்கள் மூலமாகத் தான் கண்டுணர்ந்த உணர்வுகளைக் காட்டியுள்ளார்கள்.

அந்த ஞானிகள் காட்டிய வழிப்படி ஒவ்வொரு குணங்களும் நமக்குள் குருவாக இருந்து எப்படி இயங்குகிறது…? என்பதைத் தெரிந்து கொள்ளவே இதை உங்களுக்கு உணர்த்துகின்றோம்.