ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 3, 2019

பரிதாபப்படுவதால் நமக்கும் பிறருக்கும் நன்மை கிடைக்கிறதா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் எடுக்கக்கூடிய உணர்வின் எண்ணச் சுவாசமானது பிறர் ஈர்ப்பில் பாவம் என்ற பரிதாபச் சுழற்சியில் தன் எண்ணத்தைச் செலுத்தாமல் இருத்தல் வேண்டும்.

1.தாயாக இருந்தாலும் தந்தையாக இருந்தாலும்
2.கணவன் மனைவி குழந்தைகள் என்று இருந்தாலும்
3.சகோதர பந்தபாசங்கள்… உயிர் காக்கும் நண்பனாக இருந்தாலும்
4.ஆண்டவனாக இருந்தாலும்…
5.அவர்கள் எடுக்கும் உணர்வின் எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படும் இன்னலைக் கண்டு உடல் நலக் குறைவு எதுவாக இருந்தாலும்
6.அவர்கள் மேல் பரிதாப எண்ணத்தைச் செலுத்தி அவர்கள் பரிதாப எண்ணத்தில் நாம் சிக்காமல்
7.சுயநலம் கொண்ட தன் நலமுடன் பிறரின் நலம் காண நம் உணர்வின் எண்ணச் செயல் பட்டு
8.அவர்கள் அலை நம் மேல் சாடாமல் நம் அலையின் சக்தியை அவர்கள் மேல் பாய்ச்சி
9.அவர்கள் நல்ல நிலை பெறவேண்டும்…! என்ற உயர்வான சக்தி அலையைத்தான் நம் எண்ணத்தில் எடுக்க வேண்டும்.

பரிதாபப்பட்டுச் செய்யும் தர்மம் பரிதாப அலை உணர்வை நம்மை அறியாமல் நம் எண்ணம் எடுப்பதினால் பரிதாப எண்ணத்திற்குரிய அலை குண அமிலமாக இவ்வுடல் பிம்ப அமிலம் அவர்கள் எடுத்த அலைத் தொடரின் ஈர்ப்பில் சிக்கிவிடுகின்றது.

ஆக நம் உணர்வுடன் அது கூடி நம் எண்ணமே அச்சுழற்சி அலையுடன் சென்று நாளாவட்டத்தில் அவ்வுணர்வின் பரிதாப நிலைக்கு நாமும் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு விடுகிறது.

1.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் செயலின் ஈர்ப்பானது உடனே நம்மைச் சாடும்.
2.இரத்தத் தொடர்பு கொண்டவர்களின் அலைத் தொடர் “இன்னும் வேகமாக…!” நம் உணர்வுடன் ஏறிவிடுகின்றது

வைத்தியர்கள் மற்றவர்களுக்குத் தன் உணர்வின் எண்ணத்தைச் செயல் கொண்டு செய்விக்கும் மருத்துவத்தினால் வியாதியஸ்தர்களின் ஈர்ப்பில் பெரும்பகுதி சிக்க மாட்டார்கள்.

அவர்கள் சொல்லும் அந்த வியாதிக்குத் தக்கவாறு தான் செய்ய வேண்டிய மருத்துவ ஞான அலையை உணர்ந்து அதன் வழியில் செய்யப்படும் மருத்துவத்தால் அவர்களுக்குக் குணமாக வேண்டும் என்ற செயலின் நிலைக்கொப்ப வைத்திய முறையைக் கடைப்பிடிக்க முடிகின்றது.

1.நோயாளிகளின் ஈர்ப்பில் சிக்காமல்
2.அவர்கள் படும் இன்னலின் பரிதாபம் கொள்ளாமல்
3.மருத்துவத்தால் மாற்றியமைக்கலாம் என்ற உணர்வுடன் செய்யப்படும் நிலைக்கொப்ப
4.பிறர் ஈர்ப்பும் இத்தகைய மருத்துவரைச் சாடுவதில்லை.

அப்படிப்பட்ட மருத்துவரால் செய்யப்படும் செயல் குணமும் நலம் பெற வழி கொள்கின்றது.

ஆனால் அதுவே தன் குழந்தை தன் தாய் தந்தையர் என்ற சுற்றத்தில் உள்ளவர்களின் நிலைக்காகச் செய்யப்படும் மருத்துவத்தில் பயம் கலந்த உணர்வு கூடி விடுகிறது.

அவ்வாறு கூடுவதனால்… உணர்வின் எண்ணம் பாசம் என்ற பரிதாப அலையை எடுக்கும் பொழுது தன்னுடைய செயலில் தடுமாற்றம் ஏற்படுகின்றது.

ஆகவே…
1“உணர்வின் எண்ண ஒலிக்கு உள்ள உண்மையை உணர்ந்து…!”
2.ஒவ்வொருவரும் பிறர் அலையின் ஈர்ப்பில் சிக்காமல்
3.சுயநலம் என்ற தன் நல வளர்ப்பால் பிறர் நலத்தை வளர்க்கக்கூடிய வளர்ப்பாக்குங்கள்.

உணர்வின் எண்ணம் உயர் ஞான சக்தியின் தொடர்புடன்… நமக்கு மேல் சக்தி கொண்ட நமக்குச் சித்தர்களினால் வழிப்படுத்திச் சென்ற சக்திகளின் தொடரை ஜெபம் கொண்டு “ஒவ்வொரு வழியிலும் உணர்த்தி வரும்… முன்னோர்களின் தொடர் அலையை எடுக்கப் பழகுங்கள்…!”